Ponmudi: ஜெயலலிதா முதல் பொன்முடி வரை...ஊழல் வழக்கில் பதவியை இழந்தவர்களின் லிஸ்ட்...!
Ponmudi
தற்போதுள்ள சூழலில் ஊழல் இல்லாத அரசியல் வாதிகளும் இல்லை, அரசியல் கட்சிகளும் இல்லை என்ற நிலையே ஏற்பட்டு வருகிறது. மாநில ஆட்சியில் தொடங்கி, மத்திய ஆட்சி வரை ஆளும் கட்சிகளும், எதிர்கட்சிகளும் மாறி, மாறி ஊழலில் திளைத்து, ஒருவரை ஒருவர் எதிர்த்து வழக்கு தொடர்ந்து தண்டனை பெறும் சம்பவங்களும் அரங்கேறுகின்றன.
தமிழகத்தில் கடந்த 50 ஆண்டுகளாக திராவிட கட்சிகள் ஆட்சி அமைத்து வந்தாலும் ஊழலுக்கு நீங்கள் தான் முன்னோடி என ஒருவரை ஒருவர் கைக்காட்டுகின்றனர். அதிமுக, திமுக என்ற இரு திராவிட கட்சிகளில் ஆட்சியில் சில வளர்ச்ச்சி இருந்தாலும், குற்றங்களும் குறைவில்லாமல் அரங்கேறியுள்ளன.
அந்த வகையில் 2006ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரை இருந்த திமுக ஆட்சியில் உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த தற்போதைய அமைச்சர் பொன்முடி, ஊழல் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அமைச்சர் பொன்முடி வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதன் மீதான மேல்முறையீட்டு மனுவில் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.72 கோடி அளவுக்கு சொத்து குவித்ததாக கூறி இருவரையும் குற்றவாளிகள் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சிக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கிய நீதிமன்றம் இருவருக்கும் தலா ரூ.50 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது.
அமைச்சர் பொன்முடி மக்கள் பிரதிநிதி பதவியில் இருப்பவர். ஒரு மாநிலத்தின் அதுவும் கல்வித்துறையின் அமைச்சர். அவர் மீதான ஊழல் குற்றச்சாட்டும், அதற்கான தண்டனையும் பெற்றிருப்பது தமிழக அரசியலை கேலி கூத்தாக்கியுள்ளது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்பிரிவு 8(1)-ன் படி ஊழல் தடுப்பு போன்ற சட்டங்களில் மக்கள் பிரதிநிதித்துவ பதவியில் இருப்பவர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு தண்டனை பெற்றாலும், ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் அவருக்கு தண்டனை விதிக்காமல் ஒரு ரூபாயாவது அபராதமாக விதித்தாலோ அந்த நபர் தனது பதவியை இழக்க நேரிடும்.
அப்படி ஊழல் தடுப்பு சட்டத்தில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டதுடன், 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.50 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டதால் பொன்முடி தனது அமைச்சர் பதவியை இழந்துள்ளார். இதுமட்டுமில்லாமல், சட்டமன்ற உறுப்பினர் தகுதியையும் அவர் இழந்துள்ளார். நீதிமன்ற தண்டனை பெற்று விடுதலை பெற்றாலும் அவர் 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது.
இன்று பொன்முடிக்கு ஏற்பட்டது போல் இதே நிலைமை 10 ஆண்டுகளுக்கு முன்பு அதிமுக ஆட்சியிலும் ஏற்பட்டுள்ளது. 1991-1996 வரை அதிமுக ஆட்சியில் இருந்த போது உள்ளாட்சித்துறை அமைச்சராக டி.எம். செல்வகணபதி இருந்துள்ளார். அப்போது சுடுகாட்டின் தகன மேடைகளுக்கு மேற்கூரை அமைக்கும் பணியில் ஊழல் செய்ததாக செல்வகணபதி மீது 1997ம் ஆண்டு சிபிஐ வழக்கு பதிவு செய்தது. அதன் மீதான விசாரணை 2014ம் ஆண்டு முடிந்த போது செல்வ கணபதிக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அப்போது அதிமுக ஆட்சி என்பதால் எம்பி பதவியை இழந்த செல்வ கணபதி தேர்தலில் போட்டியிட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டார்.
1.இதற்கு முன்னதாக மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவும் ஊழல் வழக்கில் சிக்கி சிறை சென்றதால் முதலமைச்சர் பதவியை இழந்தார்.
2.முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ன ரெட்டி கலவர வழக்கில் மூன்றாண்டு தண்டனை பெற்றதால் எம்எல்ஏ பதவியையும், அமைச்சர் பதவியையும் இழந்தார்.
3.இப்படி தமிழகம் மட்டுமில்லாமல் அகில இந்திய அளவில் சட்டமன்ற உறுப்பினர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஊழலில் சிக்கி பதவியை இழந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. மருத்துவப் படிப்பு இட ஒதுக்கீட்டில் முறைகேடு செய்யப்பட்ட வழக்கில் சிக்கி 4 ஆண்டுகள் 4.சிறை தண்டனை பெற்ற காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.பி.யாக இருந்த ரஷீத் மசூத் கடந்த 2013 ஆம் ஆண்டு பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
5.காங்கிரஸ் ஊழலுக்கு நாங்களும் சளைத்தவர்கள் இல்லை என்பதை போல் பாஜகவில் ஊழல் அரங்கேறியது. 2014ம் ஆண்டு பாஜகவை சேர்ந்த சுரேஷ் கணபதி மின்சார திருட்டு வழக்கில் மூன்றாண்டு தண்டனை பெற்றதால் சட்டமன்ற உறுப்பினர் பதவியை இழந்தார்.
6.2013ம் ஆண்டு லாலு பிரசாத் யாதவ் கால்நடை தீவன வழக்கில் 5 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றதால் மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
7.சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றதால் சிவசேனா கட்சியை சேர்ந்த பவன்ராவ் கோலப் சட்ட மன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
8.கடந்த ஜனவரி மாதம் தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முகமது பைசல் கொலை வழக்கில் 10 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றதால் எம்பி பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார்.
9.பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த அப்சல் அன்சாரி குண்டர் சட்டத்தில் 4 ஆண்டுகள் தண்டனை பெற்றதால் மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
10.சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த அப்துல்லா ஆசாம் கான் அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்த வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதன் காரணமாக கடந்த பிப்ரவரி மாதம் சட்டமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
11.கடந்த ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் யோகி ஆதித்யநாத்தை அவதூறாக பேசிய வழக்கில் சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த ஆசம்கான், சட்டமன்ற உறுப்பினர் பதவியில் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.