நாடாளுமன்றத்தை அலறவிடும் எம்பிக்கள் ! கேள்வியும் - பதிலும் !
நாடாளுமன்றம்
தமிழ்நாட்டின் உரிமைகள் – நலன்களுக்காக
நாடாளுமன்றத்தில் நாள்தோறும் குரல் எழுப்பும் எம்.பி.க்கள்!
தொடர் கேள்விக் கணைகளால் திணறும் ஒன்றிய அரசு!
இரயில்வேதுறையை கைகழுவும் ஒன்றிய அரசு?
கனிமொழி கருணாநிதி:
வழக்கம்போல ஒன்றிய அரசு அனைத்து அதிகாரங்களையும் தனது கையில் எடுத்துக்கொண்டு, நாடாளுமன்றத்தில் மற்றவர்கள் என்ன செய்யவேண்டும் என கட்டளையிடுவதைபோலவே இரயில்வே திருத்த மசோதா 2024 விசயத்திலும் நடந்துகொள்கிறது.
நாட்டிலுள்ள மற்ற அனைத்து இரயில்வேகளைவிட தெற்கு இரயில்வே மண்டலத்திற்கு உட்பட்ட இரயில்களின் தரம் மிக மோசமானதாக இருக்கின்றது. உணவு மற்றும் கழிப்பறை வசதிகளின் தரம்கூட மிக மோசமானதாக இருக்கின்றன. இதை சுட்டிக்காட்டும்போது ஒன்றிய அரசு இரயில்வேதுறை தனியார்மயமாக்கலை முன்மொழிகிறது.
இப்படி இரயில்வேதுறையை ஒன்றிய அரசு கைகழுவுவது சரியல்ல. நாட்டின் பெரும்பான்மையான அடித்தட்டு மக்கள் இன்றும் தங்களின் முதன்மை போக்குவரத்தாக இரயில்களையே நம்பி இருக்கின்றனர். அதை கருத்தில்கொண்டு இரயில்வேதுறை தனியார்மயமாக்கும் எண்ணத்தை ஒன்றிய அரசு முற்றிலுமாக கைவிட வேண்டும்.
மேலும் எனது தொகுதியான தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதி என்பது வணிகர்கள் அதிகமுள்ள நகரம். ஆனால் சென்னை-தூத்துக்குடி வழித்தடத்தில் நாளொன்றுக்கு ஒரு இரயில் மட்டுமே இயக்கப்படுகிறது. இரயில்வே அமைச்சகம் கூடுதல் இரயில்களை இவ்வழித்தடத்தில் இயக்கவேண்டும் உடனடியாக முயற்சி மேற்கொள்ளவேண்டும் என்றும், சென்னை-தூத்துக்குடி வழித்தடத்தில் வந்தேபாரத் இரயில் ஒன்றை அறிமுகப்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன்.
மோடி அரசின் புதுத்திட்டங்கள் காலி பாத்திரங்கள் சத்தமிடுவதைபோல் வெற்று முழக்கங்கள்தான்!
கனிமொழி என்.வி.என்.சோமு:
-20 ரூ தண்ணீர் பாட்டில் 100 ரூபாய்.
- 50 ரூ. இட்லி 300 ரூபாய்.
- தற்போது இந்தியாவில் சொந்த நாட்டு விமானங்களில் செல்லக்கூடியவர்கள் இருவர் மட்டுமே!
விமானப் போக்குவரத்தை தனியாருக்கு தாரைவார்த்த ஒன்றிய அரசை கண்டித்தும் புது விமான போக்குவரத்து மசோதா 2024 பற்றியும் மக்களவையில் எம்.பி. டாக்டர் கனிமொழி என்.வி.என். சோமு பேசியதாவது :
சட்டங்களுக்கு இந்தி மற்றும் சமஸ்கிருத்தில் பெயர் வைப்பதை ஒன்றிய அரசு தவிர்க்கவேண்டும். தொடர்ந்து மசோதாக்களை இந்தியில் முன்மொழிவது மூலம் இந்தி பேசாத மக்கள்மீது ஒன்றிய் அரசு இந்தியை திணிப்பது முறையல்ல.
இந்திய அரசு விமானங்கள் தயாரிப்பதில்லை, அரசுக்கு சொந்தமாக விமான நிலையங்கள் இல்லை. ஆனால் விமான தயாரிப்பு தொழில்நுட்பங்களை மேம்படுத்துதல் குறித்து இந்த மசோதாவில் குறிப்பிடப் பட்டுள்ளது வேடிக்கையாக இருக்கின்றது. இந்தியாவில் மேக் இன் இந்தியா எனும் முழக்கம் வெறும் முழக்கமாக மட்டுமே இருக்கிறது. அதேபோல் ஸ்டேண்ட்-அப் இந்தியா முழக்கம் ஸ்டேண்ட்-அப் காமெடியாகிவிட்டது.
காலி பாத்திரங்கள் சற்று அதிகமாக சத்தமிடுவதைபோல கடந்த பத்தாண்டுகளில் மோடியின் பாஜக அரசு உருவாக்கியுள்ள எண்ணற்ற முழக்கங்கள் வெற்று முழக்கங்களாக மட்டுமே உள்ளன.
இந்த மசோதா விமானங்கள் தயாரிக்கும்முறைக்கு சட்டங்கள் இயற்றவும், விமான பாதுகாப்பை உறுதிசெய்யவும், விமான விபத்துகளை ஆய்வு செய்யவும் ஒன்றிய அரசுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் இயற்றப்பட்டுள்ளது. உண்மை என்னவென்றால் விமானத் தயாரிப்பு, போக்குவரத்து, விமான நிலையங்கள் தொடர்பான அத்தனை நிறுவனங்களும் (ராஜிவ்காந்தி தேசிய விமானப் பல்கலைகழகம் உட்பட) ஏற்கனவே போதுமான சட்டத்திட்டங்கள் இயற்றபட்டு அதன்படி இயங்கி வருகின்றன. விமான போக்குவரத்து மசோதா 2024 என்கிற பெயரில் ஒன்றிய அரசு அரைத்த மாவையே மீண்டும் அரைத்திருக்கிறது.
விமான போக்குவரத்தை முற்றிலும் தனியார் மயமாக்கியதன் விளைவாக விமான போக்குவரத்துதுறை அமைச்சகம் தனது அதிகாரத்தை இழந்திருக்கிறது. வருங்காலத்தில் நாட்டில் பேரிடர் காலங்களில் மக்களை காப்பாற்ற விமான போக்குவரத்து தேவையென்றால் கூட தனியாரிடம் கையேந்தி நிற்கவேண்டிய அவலநிலையை இந்த அரசு உருவாக்கியிருக்கிறது.
ஏர் இந்தியாவை அடிமாட்டு விலைக்குவிற்றது மட்டுமல்லாமல் விமான நிலையங்களையும் அரசு விற்றுவிட்டது.
நாட்டில் தற்போது அரசு விமானங்களில் செல்லக்கூடிய வசதி படைத்தவர்கள் இருவர் மட்டுமே. ஒருவர் பிரதமர் மற்றொருவர் குடியரசுத் தலைவர். ஆனால் மக்களாகிய நாம் எல்லோரும் தனியார் விமானங்களையே நம்பி இருக்கிறோம்.
விமானக் கட்டணங்கள் சூதாட்ட விளையாட்டை போல் அன்றாடம் ஏறுவதை தடுத்து இரயில்வே பயணக்கட்டணங்களை போல் நிலையான விலையை அரசு நிர்ணயம் செய்யவேண்டும்.
அதேபோல் வெளியில் 20 ரூபாய்க்கு விற்க்கப்படும் தண்ணீர்பாட்டில் விமான நிலையத்தினுள் 100 ரூபாய்க்கு விற்க்கப்படுகிறது. வெளியில் 50 ரூ விற்கப்படும் இட்லி உள்ளே 300 ரூ விற்கப்படுகிறது. இதுபோன்ற காரணங்களால் சாமானிய மக்களுக்கு விமான பயணங்கள் அணுகக்கூடியதாக இல்லை என்பதை ஒன்றிய அரசு நினைவில் கொண்டு மாற்றத்தை கொண்டு வரவேண்டும்.
தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ் சாலைத் திட்டங்களின் நிலை என்ன?
டி.பி.டி .மலையரசன்:
தமிழ்நாட்டில் கடந்த மூன்று ஆண்டுகளில் நிறை வேற்றப்பட்ட மற்றும் நிலுவையில் உள்ள தேசிய நெடுஞ்சாலை (NH) திட்டப்பணிகள் குறித்த விவரங்களை ஒவ்வொரு திட்டத்திற்கான மொத்த நீளம் மற்றும் செலவு உட்பட வெளியிட வேண்டும் என கள்ளக்குறிச்சி தொகுதி எம்.பி டி. மலையரசன் மக்களவையில் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதேபோல் அடுத்து வரும் ஐந்து ஆண்டுகளுக்கு தமிழ்நாட்டில் செயல்படுத்தவிருக்கும் NH திட்டங்களின் விவரங்கள் மற்றும் அதற்கு ஒதுக்கப்பட்ட நிதியின் விவரங்களையும் கேட்டுள்ளார்.
தமிழ்நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளின் கீழ் செல்லும் பல்வேறு நிலுவையில் உள்ள பாதாள சாக்கடை கட்டுமானங்களின் விவரங்க ளையும், அவற்றை முடிப்பதற்கு அரசு நிர்ணயித்திருக்கும் இலக்கு குறித்த விவரங்களையும் அரசு வெளியிட வேண்டும் என கேட்டுள்ளார்.
சிறுவேடல்க.செல்வம்
பல்வேறு திட்டங்களின் கீழ் கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் தற்போது நடைமுறையில் உள்ள நீர் வழங்கல் திட்டங்க ளின் எண்ணிக்கை விவரங்களை ஒன்றிய அரசு வெளியிட வேண்டும் என மக்களவையில் காஞ்சிபுரம் எம்.பி. க.செல்வம் மற்றும் திருவண்ணாமலை எம்.பி. சி.என். அண்ணாதுரை இணைந்து கூட்டு அறிக்கையில் கேட்டுள்ளனர்.
சி.என். அண்ணாதுரை
தற்போது நடைமுறையில் இருக்கும் நீர் வழங்கல் திட்டங்களை முடிக்க அரசு நிர்ணயித்திருக்கும் காலக்கெடு என்ன ?
கிராமப்புறங்களில் சரியான நேரத்தில் நீர் விநியோக திட்டங்களை முடிக்க அரசு எதிர்கொண்ட சவால்கள் என்ன?
நீர் வழங்கல் திட்டங்களை செயல்படுத்துவதில் ஒன்றிய அரசு தனியார் துறையை ஈடுபடுத்த முயற்சி செய்கிறதா? அப்படியென்றால் அதன் விவரங்களையும் அரசு வெளிப்படையாக அறிவிக்கவேண்டும்.
அதிகபட்ச மின் தேவையை எப்படி சமாளிக்க போகிறது ஒன்றிய அரசு?
டி.எம்.செல்வகணபதி :
திடீரென ஏற்படும் அதிகபட்ச மின் தேவை போன்ற சவால்களை எதிர்கொள்ள மேற்கொள்ளப்படும் ஆய்விற்காக மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையம் ஒற்றை-உறுப்பினர் பெஞ்சை நியமித்தது மற்றும் அந்த ஆணையத்தின் ஆய்வறிக்கை தொடர்பான விவரங்களை வெளியிடுமாறு சேலம் மக்களவை தொகுதி உறுப்பினர் செல்வகணபதி இன்று கேள்வி எழுப்பியுள்ளார்.
அவர் தனது அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது :
வரும்காலத்தில் உச்ச மின் தேவை 232.2 GW ஆக இருக்கும் என்கிற கணிப்பு உண்மையாக இருந்தால் அதை எதிர்கொள்ள ஒன்றிய அரசிடம் இருக்கும் திட்டங்கள் என்ன ?
சுமார் 12.60 GW (3% இருப்புத் தேவையுடன்) மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான வளங்களை கூடுதலாக தயாரித்து வைக்கவேண்டும் எனும் செய்தி உண்மையென்றால் அதற்கு அரசு எடுத்திருக்கும் நடவடிக்கைகள் என்ன ?
தேசிய, பிராந்திய, மாநில மின் பகிர்வு நிலையங்கள் கிரிட் விதிகளை பின்பற்ற எடுத்திருக்கும் நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை சமர்பிக்க வேண்டும் மேற்குறிப்பிட்ட ஆணையம் வலியுறுத்தியிருப்பதன் விவ ரங்களை வெளியிட வேண்டும்.
தமிழ்நாட்டில் அகழ்வாராய்ச்சிகளை மேற்கொள்வதற்காக போதிய நிதி ஒதுக்கப்படுகிறதா?
எம்.எம்.அப்துல்லா
இந்திய தொல்லியல் துறையால் (ASI) கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழ்நாட்டில் நடத்தப்பட்ட அகழாய்வு பணிகள் என்னென்ன? என்றும் அதற்காக போதிய நிதி ஒதுக்கப்பட்டுள்ளதா? என்றும் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா மாநிலங்களவையில் கேள்விகளை எழுப்பினார்.