முரசொலியின் பத்திரம் எங்கே ? வழக்கு முடிந்தது - உச்சநீதிமன்றம்
முரசொலி
எல்.முருகன் பேச்சு மீதான வழக்கில்
‘முரசொலி’ நிலைப்பாடு பெருந்தன்மையானது!
வழக்கை முடித்து வைத்து உச்சநீதிமன்றம் பாராட்டு!
முரசொலி நிலம் குறித்து பா.ஜ.க. மூத்த தலைவர் தற்போது ஒன்றிய அரசில் அமைச்சராக இருக்கும் எல்.முருகன் பேசியதற்கு முரசொலி அறக்கட்டளை சார்பில் ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்த வழக்கில், எல்.முருகன் சார்பில் தாம் கெட்ட எண்ணத்தில் பேசவில்லை என நீதிமன்றத்தில் தெரிவித்ததால் வழக்கை முடித்து வைக்கலாம் எனமுரசொலி அறக்கட்டளை சார்பில் உச்சநீதி மன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதனை யடுத்து ‘முரசொலியின் நிலைப்பாடு பெருந்தன்மையானது’ எனக் கூறி இந்த வழக்கை முடித்து வைத்து உச்ச நீதிமன்றம் முரசொலி அறக்கட்டளையை பாராட்டியுள்ளது.
முரசொலி நிலத்திற்கான மூலப்பத்திரம் எங்கே? என்று பா.ஜ.க. மூத்த தலைவர் எல்.முருகன் பேசியதற்கு முரசொலி அறக்கட்டளை சார்பாக ஆலந்தூர் ஆர்.எஸ்.பாரதி அவதூறு வழக்கினை சென்னை மெட்ரோ பாலிடன் மாஜிஸ்திரேட்டில் தொடர்ந்தார்.
அதை எதிர்த்து எல்.முருகன் உயர்நீதி மன்றத்தில் தொடுத்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
அந்த உத்தரவினை எதிர்த்தும், தன்மீது உள்ள வழக்கை ரத்து செய்யக் கோரியும் உச்ச நீதிமன்றத்தில் எல்.முருகன் வழக்குத் தொடர்ந்தார்.
அந்த வழக்கு நேற்று (5.12.2024) உச்சநீதிமன்றத்தில் மாண்புமிகு நீதிபதிகள் பி.ஆர்.கவாய் மற்றும் கே.வி. விஸ்வநாதன் ஆகயோர் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது எல்.முருகன் தரப்பில் முரசொலி மீது அவதூறு கற்பிக்க வேண்டும் என்ற எண்ணம் தனக்கு இல்லை என்றும், எந்த ஒரு கெட்ட உள்நோக்கத்துடனும் அந்தக் கருத்தைச் சொல்லவில்லை என்றும், அரசியல் ரீதியாக பதியப்பட்ட கருத்து என்றும் சொல்லப்பட்டது.
தனக்கு கெட்ட எண்ணம் இல்லை என்ற கருத்தை எல்.முருகன் சொன்னதால் அந்த வழக்கை முடித்து வைக்கலாம் என்று முரசொலி அறக்கட்டளை தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் சித்தார்த் லூதுரா மற்றும் என்.ஆர்.இளங்கோ ஆகியோர் கூறியதன் அடிப்படையில் முரசொலி அறக்கட்டளையின் அறங்காவலராக ஆலந்தூர் -
-ஆர்.எஸ்.பாரதி எடுத்த இந்த நிலைப்பாடு பெருந்தன்மையானது என்று பதிவு செய்து உச்சநீதிமன்றம் பாராட்டி வழக்கை முடித்து வைத்தது.