அமித்ஷா ஆர்டர்.. எடப்பாடி பழனிசாமியின் வீடு தேடி வந்த அன்புமணி.. உறுதியாகிறதா அதிமுக பாமக கூட்டணி

அமித்ஷா ஆர்டர்.. எடப்பாடி பழனிசாமியின் வீடு தேடி வந்த அன்புமணி.. உறுதியாகிறதா அதிமுக பாமக கூட்டணி
பாமகவில் உள்கட்சி பிரச்சனை பூதாகரமாக வெடித்து வருகிறது. ராமதாஸ் - அன்புமணி இடையே அதிகார போட்டி உச்சத்தில் உள்ளது. தேர்தலுக்கு குறுகிய காலமே உள்ள நிலையில், பிரச்சனைகளை விரைவில் முடித்து கூட்டணி நிலைப்பாட்டி இறுதி செய்ய வேண்டிய கட்டாயத்தில் பாமக உள்ளது. இந்நிலையில் சென்னையில் எடப்பாடி பழனிசாமியை, அன்புமணி ராமதாஸ் சந்தித்துள்ளார். பாமக பிளவுபட்டுள்ள நிலையில் 25 தொகுதிகளை கேட்க பாமக திட்டம் என்று தகவல் வெளியாகியுள்ளது. அமித்ஷா வருகைக்கு பிறகு நடக்கவுள்ள இந்த சந்திப்பு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
2026 சட்டமன்ற தேர்தல் அறிவிப்புக்கு 2 மாதங்களே உள்ளன. மற்ற அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரம் மற்றும் வியூகங்களில் பரபரப்பாக உள்ளனர். பாமகவில் தந்தை மகன் பனிப்போர் வெடித்து கொண்டிருக்கிறது. ராமதாஸ், அன்புமணி இடையே தொடர்ந்து பனிப்போர் நிலவுகிறது. இதன் காரணமாக பாமகவில் பிளவு ஏற்பட்டு, ராமதாஸ், அன்புமணி தனித்தனி அணியாக செயல்பட்டு வருகிறார்கள்.
பாமகவில் நிலவும் பிரச்சனைகளை முடிவுக்கு கொண்டு வந்து, அவர்களை தங்கள் கூட்டணியில் உறுதிபடுத்தும் வேலையில் அதிமுக - பாஜக இறங்கியுள்ளது. சமீபத்தில் தமிழ்நாடு வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இதுகுறித்து நேரடியாகவே பாஜக நிர்வாகிகளிடம் பேசியுள்ளார்.
பாமக வருகை தேசிய ஜனநாயக கூட்டணியை வலுப்படுத்தும் என்று அவர்கள் நம்புகிறார்கள். அதேநேரத்தில் ராமதாஸ் தலைமையிலான பாமக திமுக கூட்டணியில் இணைவதற்காக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. பாமகவில் எப்போது பிரச்சனைகள் முடிவடையும் என்று அந்தக் கட்சியின் தொண்டர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.
கடலூரில் இன்று மாலை நடைபெறும் பொதுக் கூட்டத்தில் அன்புமணி உரையாற்ற உள்ளார். பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமியை, பாமக அன்புமணி ராமதாஸ் சந்தித்துள்ளார். சென்னை பசுமைவழிச்சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் அவரை பாமக அன்புமணி ராமதாஸ் சந்தித்துள்ளார். கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சந்திப்பின்போது அதிமுக மற்றும் பாமகவின் முக்கிய நிர்வாகிகளும் இருப்பார்கள் என்று கூறப்படுகிறது.
