தமிழ்நாட்டில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை உடனடியாக திறக்க வேண்டும்: ராமதாஸ்
Ramadoss
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு முழுவதும் சம்பா-தாளடி பருவ அறுவடை தீவிரமடைந்திருக்கும் நிலையில், அதன் மூலம் கிடைக்கும் நெல்லை கொள்முதல் செய்ய போதிய எண்ணிக்கையில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படவில்லை. இதனால் உழவர்கள் கடுமையான பாதிப்புகளுக்கு ஆளாகியுள்ள நிலையில், அது குறித்த எந்தக் கவலையும் இல்லாமல் தமிழக அரசு அலட்சியம் காட்டி வருவது கடுமையாக கண்டிக்கத்தக்கது. உழவர்களின் நிலையைக் கருத்தில் கொண்டும், அவர்கள் சாகுபடி செய்த நெல்லுக்கு ஓரளவாவது நியாயமான விலை கிடைப்பதை உறுதி செய்யும் வகையிலும் காவிரி பாசன மாவட்டங்கள் உள்பட தமிழ்நாடு முழுவதும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை அதிக எண்ணிக்கையில் திறக்க வேண்டும். கொள்முதல் நிலையங்களில் உழவர்களை காத்திருக்க வைக்காமல், அவர்களிடம் மூட்டைக்கு ரூ. 50 வீதம் கையூட்டு கேட்டு கொடுமைப்படுத்தால் நெல் மூட்டைகள் விரைவாக கொள்முதல் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.