எஸ்பிஐ வங்கியை லெஃப்ட் ரைட் வாங்கிய உச்சநீதிமன்றம்..!

எஸ்பிஐ வங்கியை லெஃப்ட் ரைட் வாங்கிய உச்சநீதிமன்றம்..!

ஸ்டேட் வங்கிக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்

கடந்த 2019 ஏப்ரல் முதல் 2024 பிப்ரவரி 15ஆம் தேதி வரை மொத்தம் 22,217 தேர்தல் பத்திரங்களை பாரத ஸ்டேட் வங்கி வழங்கியுள்ளது.

நாட்டையே உலுக்கிய தேர்தல் பத்திரங்கள் தொடர்பான வழக்கில் பாரத ஸ்டேட் வங்கிக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனத்தை பதிவு செய்தது.

ஊழலுக்கு வழிவகுக்கும் தேர்தல் பத்திரங்கள் தொடர்பான தகவல்களை வெளியிடுமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி தேர்தல் தேர்தல் பத்திரங்கள் தொடர்பான தகவல்களை பாரத ஸ்டேட்வங்கி வெளியிட்டுள்ளதாக தேர்தல் ஆணையத்தின் செய்தி தொடர்பாளர் அறிவித்துள்ளார். மேலும், தேர்தல் பத்திரம் தொடர்பாக எஸ்பிஐ வங்கி வெளியிட்ட பட்டியலையும் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதில் 300 பக்கத்திற்கும் மேற்பட்ட இரண்டு பட்டியல்களை எஸ்பிஐ வங்கி கொடுத்துள்ளது.

முதல் பட்டியலில் தேர்தல் பத்திரத்தை வாங்கிய நிறுவனங்களின் பெயர்கள், அவரை எந்தெந்த தேதிகளில் வாங்கப்பட்டன, பத்திரத்தின் தொகை உள்ளிட்ட விவரங்கள் இடம்பெற்றுள்ளது. இரண்டாவது பட்டியலில் எந்தெந்த அரசியல் கட்சிகளுக்கு, எந்த தேதியில் எவ்வளவு தொகை கொடுக்கப்பட்டன என்பது குறித்த தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆனால், தேர்தல் பத்திரங்கள் தொடர்பான எண்களை வெளியிடாததால் எந்த நிறுவனம் அதிக பணத்தை யாருக்கு கொடுத்தது என்ற தகவலை அறியமுடியவில்லை என்ற கருத்து முன்வைக்கப்பட்டது.

இதற்கிடையே இன்று தேர்தல் பத்திரங்கள் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, “ பாரத ஸ்டேட் வங்கியில் சார்பில் யார் விசாரணைக்கு ஆஜராகியுள்ளனர்” என தலைமை நீதிபதி சந்திரசூட் கேள்வி எழுப்பினார். தேர்தல் பத்திரம் எண் வெளியிடாததால், யார் எந்த கட்சிக்கு எவ்வளவுக்கு நிதி கொடுத்தனர் என்ற தகவலை அறியமுடியவில்லை என்ற நீதிபதி, ஏன் தேர்தல் பத்திர எண்ணை வெளியிடவில்லை என கேள்வி எழுப்பினார். தேர்தல் பத்திரம் எண் வெளியிடாதது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்ற நீதிபதி, அதற்காக எஸ்பிஐ வங்கிக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டார். மேலும், தேர்தல் பத்திரம் எண் உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் தேர்தல் ஆணையத்திடம் கொடுக்க வேண்டும் என்றும் எஸ்பிஐ வங்கிக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

இந்திய அரசு 2017இல் தேர்தல் பத்திர திட்டத்தை அறிவித்தது. இந்த திட்டம் 29 ஜனவரி 2018 அன்று அரசாங்கத்தால் சட்டப்பூர்வமாக செயல்படுத்தப்பட்டது. இதன்மூலம் , அரசியல் கட்சிகளுக்கு நிதி வழங்குவதற்கான பத்திரங்களை பாரத ஸ்டேட் வங்கி வெளியிடும். கேஒய்சி விவரங்கள் உள்ள வங்கிக் கணக்கு வைத்திருக்கும் எந்த நன்கொடையாளரும் அதை வாங்கலாம். தேர்தல் பத்திரத்தில் பணம் செலுத்துபவரின் பெயர் இடம்பெறத் தேவையில்லை.

இத்திட்டத்தின் கீழ், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் குறிப்பிட்ட கிளைகளில் இருந்து ரூ.1,000 முதல் ரூ.10,000, ரூ.1 லட்சம், ரூ.10 லட்சம் மற்றும் ரூ.1 கோடி வரை எந்த மதிப்பிலான தேர்தல் பத்திரங்களையும் வாங்கலாம். ஆனால், 15 நாட்களுக்குள் குறிப்பிட்ட கட்சிக்கு பணம் செலுத்தவில்லை என்றால், அது பிரதமரின் நிவாரண நிதிக்கு சென்றுவிடும்.

இப்படி வெளிப்படையில்லாத சட்டத்தின் மூலம், கடந்த 2019 ஏப்ரல் முதல் 2024 பிப்ரவரி 15ஆம் தேதி வரை மொத்தம் 22,217 தேர்தல் பத்திரங்களை பாரத ஸ்டேட் வங்கி வழங்கியுள்ளது.அதில், 22,030 பத்திரங்கள் அரசியல் கட்சிகளின் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளன. எஞ்சிய 187 பத்திரங்களின் தொகை பிரதமரின் தேசிய நிவாரண நிதி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story