தி.மு.க.வினருக்கு சாராயத்தை தவிர வேறு வருவாய் தரும் மாற்றுத் திட்டம் இல்லை: சீமான்

தி.மு.க.வினருக்கு சாராயத்தை தவிர வேறு வருவாய் தரும் மாற்றுத் திட்டம் இல்லை: சீமான்
X

சீமான் 

தி.மு.க.வினருக்கு சாராயத்தை தவிர வேறு வருவாய் தரும் மாற்றுத் திட்டம் இல்லை என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட சம்பத் நகர் பகுதியில், நாம் தமிழர் வேட்பாளர் சீதாலட்சுமியை ஆதரித்து, அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார். இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்டபோது தி.மு.க. அமைதியாக இருந்து வேடிக்கை பார்த்தது. தமிழுக்கும், தமிழினத்திற்கும் தி.மு.கவும், கருணாநிதியும் பல துரோகங்களைச் செய்துள்ளனர். அதனை பொறுக்க முடியாமல் தான் நாம் தமிழர் இயக்கம் உருவானது. நாட்டு மக்களுக்கு மொபைல்போன், கார் உள்ளிட்ட வசதிகளைச் செய்து கொடுக்க அரசிடம் திட்டம் இருக்கிறது. ஆனால், அவர்களுக்கு உணவு கொடுக்க அரசிடம் திட்டம் இல்லை. நீரும், சோறும் இல்லை என்றால் ஒரு நாட்டில் புரட்சி வெடிக்கும். இலங்கை, வங்கதேசம் போன்ற நாடுகளில் இது நடந்துள்ளது. தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. சொத்துவரி, மின்கட்டண உயர்வு பற்றி தி.மு.க. தேர்தல் அறிக்கையில் சொல்லவில்லை. சாராய விற்பனையைத் தவிர இவர்களுக்கு வருவாய் தரும் மாற்றுத் திட்டம் இல்லை. எனவே வெற்று வாக்குறுதிகளைக் கொடுத்து, நான் வாக்காளர்களை ஏமாற்ற விரும்பவில்லை. நாங்கள் குறைகேட்க வரவில்லை. குறைதீர்க்க வந்திருக்கிறோம். 100 நாள் வேலைத்திட்டத்தில், சோம்பி உட்கார்ந்து இருப்பவர்களுக்கு சம்பளம் கொடுக்கின்றனர். அவர்கள் தினம் ஒரு மரம் நட்டிருந்தால் கூட பூமி பசுமையாகி இருக்கும். 100 நாள் வேலை திட்டத்தால் வேளாண் பணிகளுக்கு ஆட்கள் கிடைப்பதில்லை. தமிழகத்தில் முன்பு இந்தி திணிக்கப்பட்டது. இப்போது, வடமாநிலத்தைச் சேர்ந்தவர்களை வேலை நிமித்தமாக குடியேற்றம் செய்யும் சதி நடக்கிறது. இதனை தடுத்து தமிழர்களுக்கு வேலை வாய்ப்பு, நல்ல வாழ்க்கை வழங்க நாம் தமிழர் கட்சியால் மட்டுமே முடியும். மக்கள் எதிர்ப்பை மீறி பரந்தூர் விமான நிலையத்தை கட்டிக் காட்ட முடியுமா? பரந்தூர் விமான நிலைய திட்டத்தை கைவிட்டு விட்டோம் என்று சொல்லும் நாளை நான் உருவாக்குவேன். நீங்கள் எல்லாம் சூத்திரன் என்று சொல்லி பெரியார் நம்மை ஏமாற்றினார். அதில் நானும் ஏமாந்தேன். திராவிடர்களுக்கு ஒரு பெரியார் தான். தமிழர்களுக்கு ஓராயிரம் பெரியார்கள் இருக்கிறார்கள். ஈரோடு கிழக்கில் எங்களுக்கு வாக்களித்து நம்பிக்கையோடு ஒரு அடி எடுத்து வையுங்கள். மாபெரும் அரசியல் புரட்சிக்கான காலடித்தடம் ஈரோடு கிழக்கில் தொடங்கட்டும். இந்த வெற்றி தமிழ் தேசிய இனத்தின் வெற்றியாக கருதி எங்களுக்கு வாக்களியுங்கள் என்று அவர் பேசினார்.

Tags

Next Story