தேர்தல் களம் சமநிலையை இழந்து வருகிறது: செல்வப்பெருந்தகை
செல்வப் பெருந்தகை
தமிழ்நாடு காங்கரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த 6 ஆண்டுகளாக தேர்தல் பத்திர நன்கொடை மூலமாக ரூபாய் 6500 கோடிக்கு மேல் நன்கொடையாக பெற்று பா.ஜ.க. தனது நிதியை பெருக்கிக் கொண்டது. ஆனால், மற்ற அரசியல் கட்சிகளுக்கு கார்ப்பரேட் நிறுவனங்கள் நன்கொடை அளிக்க முன்வராததில் வியப்பொன்றும் இல்லை. இதுகுறித்து உச்சநீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு கடந்த பிப்ரவரி 2024 இல் அளித்த தீர்ப்பில் தேர்தல் பத்திர நன்கொடை அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமானது, தகவல் அறியும் உரிமைச் சட்டம், பேச்சு சுதந்திரம் உள்ளிட்ட அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது என தீர்ப்பு கூறி அத்திட்டத்தை ரத்து செய்தது. ஆனால், அந்த திட்டம் ரத்து செய்யப்பட்டாலும், நன்கொடை பெறுவதில் பா.ஜ.க. இன்றைக்கும் பெருமளவில் நிதி பெற்றுக் கொண்டிருக்கிறது. நேற்று தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் வெளியான தகவலின்படி பாஜக நன்கொடையை நேரடியாக ரூபாய் 2244 கோடியை கடந்த ஆண்டு பெற்றிருக்கிறது. கடந்த 2022-23ம் ஆண்டு தேர்தல் பத்திர நன்கொடை மூலம் பெற்றதை விட 212 சதவிகிதம் அதிகமான நிதியை பா.ஜ.க. பெற்றிருக்கிறது. தேர்தல் பத்திர நன்கொடை திட்டம் உச்சநீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டிருந்தாலும் வருமான வரித்துறை, மத்திய புலனாய்வுத்துறை, அமலாக்கத்துறையை பயன்படுத்தி தொடர்ந்து கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து பெருமளவில் நிதியை நேரடியாக பெற்றிருப்பதை இந்த தகவல் உறுதிபடுத்துகிறது. மகாராஷ்டிரா உள்ளிட்ட சட்டமன்றத் தேர்தல்களில் தேர்தல் ஆணையம் பா.ஜ.க.வுக்கு ஆதரவாக பாரபட்சமாக நடந்தது என்ற குற்றச்சாட்டையொட்டி தற்போது கார்ப்பரேட் நிறுவனங்கள் மூலம் பெறும் நிதியை பெற்று வருவதால் தேர்தல் களம் சமநிலைத்தன்மையை இழந்து வருகிறது. இதுகுறித்து தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்க தயாராக இல்லை. எனவே, பா.ஜ.க. குவித்து வருகிற நிதி இந்திய ஜனநாயகத்திற்கு, குறிப்பாக தேர்தல் களத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகளுக்கு மிக பாதிப்பாக அமைகிற சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலை தொடர்வது இந்தியாவின் ஜனநாயகத்திற்கே பெரும் ஆபத்தாக முடியும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.