அண்டப்புளுகு, ஆகாசப்புளுகு பேசும் மோடி - வம்பிழுத்த முதலமைச்சர் ஸ்டாலின்

அண்டப்புளுகு, ஆகாசப்புளுகு பேசும் மோடி - வம்பிழுத்த முதலமைச்சர் ஸ்டாலின்

பிரதமர் மோடியை விமர்சித்த ஸ்டாலின்

வாரிசு அரசியலை விமர்சித்த பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி

பிரதமர் மோடி எப்பொழுதும் அண்டப்புளுகு, ஆகாசப்புளுகு பேசுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். அந்த அளவுக்கு பிரதமர் மோடி என்ன பேசிவிட்டார் என்ற விவாதமே எழுந்துள்ளது. இப்படி பிரதமரை முதலமைச்சர் ஸ்டாலின் கடுமையாக விமர்சிக்க காரணம் என்ன என்பதை விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.

நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி தமிழகத்துக்கு அடிக்கடி விசிட் அடிக்கும் பிரதமர் மோடி, தமிழக அரசை கடுமையாக விமர்சித்திருந்தார். கடந்த 4ம் தேதி சென்னையில் நடந்த பாஜக பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், திமுகவின் வாரிசு அரசியலை கடுமையாக விமர்சித்தார். பாஜகவுக்கு எதிராக அமைக்கப்பட்டுள்ள இந்தியா கூட்டணி ஊழல் கூட்டணி என்ற பிரதமர் மோடி, திமுகவும், காங்கிரஸும் குடும்ப அரசியலுக்கு முக்கியத்துவம் கொடுப்பதாகவும் சாடினார். இந்த குடும்ப அரசியல் கட்சிகள் ஆட்சிக்கு வந்தால் மக்கள் அடிமைகளாக தான் இருப்பார்கள் என்ற மோடி, தமிழகத்துக்கு மத்திய அரசு கொண்டு வரும் திட்டங்களை மாநிலத்தை ஆளும் அரசுகள் தடுப்பதாகவும் விமர்சித்தார்.

இந்த நிலையில், பிரதமரின் இந்த பேச்சுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடுமையாக பதிலடி கொடுத்துள்ளார். பொள்ளாச்சியில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய அவர் பிரதமரின் வருகை குறித்து பேசினார். அதில், “"தமிழ்நாட்டுக்கு வரும் திட்டங்களை மாநில அரசு தடுப்பதாக பிரதமர் பொய் சொல்லுகிறார். மத்திய அரசு கொண்டு வந்த எந்த திட்டங்களை மாநில அரசு தடுத்தது? அண்டப்புளுகு, ஆகாசப்புளுகு, இது மோடி புளுகு. எய்ம்ஸ் கொண்டு வருவதாக சொன்னார்கள். மறைந்த அம்மையார் ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது அடிக்கல் நாட்டப்பட்டது. அப்போது ஜெயலலிதா அதை தடுத்தார்களா? இல்லை. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு ஏதேனும் திட்டங்களை கொண்டு வர விடாமல் தடுத்தோமா? என்று கேள்வி எழுப்பினார்.

பிரதமரை அண்டப்புளுகு, ஆகாசப்புளுகு என முதலமைச்சர் ஸ்டாலின் பேசியதற்கு பாஜகவினர் கடும் கண்டனத்தை பதிவிட்டு வருகின்றனர். இந்த சூழலில், வரும் 15 ம் தேதி தமிழகம் வரும் பிரதமர் மோடி, கன்னியாகுமரி விவேகானந்தா கல்லூரி மைதானத்தில் நடைபெறும் தேர்தல் பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் பேச உள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், தமிழகத்தில் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் பிரதமர் மோடி, ஏற்கெனவே பல்லடம், திருநெல்வேலியில் நடந்த பாஜக பொதுக் கூட்டங்களில் பேசியுள்ளார். அதன் தொடர்ச்சியாக கன்னியாகுமரிலும் பிரதமர் பிரச்சாரம் செய்ய உள்ளார்.

வடமாநிலங்களில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு அதிக மதிப்பு இருப்பதால் தேர்தலில் பாஜக வெற்றிப்பெறுகிறது. அதே பாணியை தமிழகத்தில் கையாண்டு வருகிறார் பிரதமர் மோடி. ஆனாலும், அவருக்கு பாஜக எதிர்பார்க்கும் அளவுக்கு தமிழக மக்கள் வாய்ப்பளிப்பார்களா என்பது கேள்விக்குறியாகியுள்ளது.

Tags

Next Story