234 தொகுதிகளுக்கு செல்லும் உதயநிதியின் பைக் ரைடர்ஸ் ...- அசத்தும் திமுக இளைஞரணி

234 தொகுதிகளுக்கு செல்லும் உதயநிதியின் பைக் ரைடர்ஸ் ...- அசத்தும் திமுக இளைஞரணி

திமுக இளைஞரணி

திமுக இளைஞர் அணி மாநாட்டையொட்டி, தமிழகத்தின் 234 தொகுதிகளுக்கும் செல்லவுள்ள, திமுக பைக் ரைடர்ஸ் பிரச்சாரக்குழுவின் சுற்றுப்பயணத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கவுள்ளார். இது பற்றிய விரிவான தகவல்களை காண்போம்.

திமுக இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாடு சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள பெத்தநாயக்கன்பாளையம் பகுதியில் அடுத்த மாதம் 17ஆம் தேதி அன்று நடைபெற உள்ளது. மாநாட்டிற்கான அனைத்து ஏற்பாடுகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், மாநாட்டு பணிகளை சேலம் மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சர் கே.என்.நேரு மேற்பார்வையிட்டு ஆலோசனை வழங்கி வருகிறார். இந்த மாநாட்டை தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியாவே திரும்பிப்பார்க்கும் வகையில் நடத்த பணிகள் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் சுமார் 10 லட்சம் இளைஞர்கள் பங்கேற்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. ஒரு சட்டசபை தொகுதிக்கு 4000 பேர் என்ற கணக்கில் 234 தொகுதிகளில் இருந்து கமார் 10 லட்சம் பேர் திமுக இளைஞர் அணி மாநாட்டுக்கு வருகை தருவார்கள் என்று திட்டமிடப்படுள்ளது. இதுவரை சுமார் 7 லட்சம் பேருக்கு சீருடை தயாராகி விட்டதாகவும், சேலம் பயணத்துக்காக ஒரு தொகுதியில் இருந்து சுமார் 70 முதல் 90 பேருந்துகள் இதற்காக புக்கிங் செய்யப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மாநாட்டு பந்தலில் 5 லட்சம் முதல் 7 லட்சம் பிளாஸ்டிக் சேர்கள் போடப்பட உள்ளதாகவும், 40 வயதுக்கு உட்பட்ட திமுக இளைஞரணியினர் மட்டும் தான் மாநாட்டுக்கு வர வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாநாடு அன்று மாங்கனி நகரமான சேலம் முழுவதும் எங்கு பார்த்தாலும் சீருடை அணிந்த திமுக இளைஞரணியினர் தான் நடமாட வேண்டும் என்ற இலக்குடன் மாநாட்டுப் பணிகள் நடைபெறுகிறது.

திமுக இளைஞரணி செயலாளரும், விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், மாவட்டந்தோறும் பயணம் செய்து ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி வருகிறார்.

இந்த நிலையில், திமுக இளைஞர் அணி மாநாட்டை ஒட்டி திமுக பைக் ரைடர்ஸ் குழுவின பிரச்சாரப் பேரணியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கன்னியாகுமரியில் நாளை தொடங்கி வைக்கவுள்ளார். கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை அருகே தொடங்கும் பேரணி வருகிற 27ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.

இக்குழுவினர் தமிழகம் முழுவதும் 8647 கிலோ மீட்டர் பயணித்து, சுமார் 3 லட்சம் இளைஞர்களை நேரில் சந்தித்து மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கப்படவுள்ளனர். மொத்தம் 188 இரு சக்கர வாகனங்களில் பயணிக்கும் திமுக ரைடர்ஸ் பிரசாரக் குழு,, 38 மாவட்டங்களில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கு செல்லவுள்ளனர். இந்தக்குழு பயணிக்கும் மாவட்டங்களானது வள்ளுவர் மண்டலம், பெரியார் மண்டலம், அண்ணா மண்டலம், கலைஞர் மண்டலம் என நான்காக பிரிக்கப்பட்டுள்ளது.

504 இடங்களில் பிரச்சார முனையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 38 இடங்களில் தெரு முனைப் பிரசாரக் கூட்டங்களுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக திமுக இளைஞரணி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திமுக பைக் ரைடர்ஸ் பிரசாரக் குழுவில் பயணிப்பவர்களுக்கு மூன்று வேளை உணவு, தங்குமிடம், தலைக்கவசம், கொள்கை முழக்க டி ஷர்ட், டிராவல் பேக், முதலுதவி கிட் குடிநீர் என அனைத்து அடிப்படை வசதிகளும் திமுக இளைஞரணி சார்பில் செய்துக் கொடுக்கப்படுகிறது.

இளைஞர்களை கவரும் வகையில் திமுக இளைஞரணியின் பைக் ரைடர்ஸ் குழுவின் தமிழக பயணம் மாபெரும் வெற்றியாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பைக் ரைடர்ஸ் குழுவின் பயணம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாளான நவம்பர் 27ம் தேதி நிறைவடையும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

Tags

Next Story