பரந்தூர் விவகாரத்தில் நாடகமாடுகிறது தி.மு.க: விஜய்

பரந்தூர் விவகாரத்தில் நாடகமாடுகிறது தி.மு.க: விஜய்
X

Vijay

பரந்தூர் விவகாரத்தில் தி.மு.க நாடகமாடுவதாக தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் விமர்சனம் செய்துள்ளார்.

பரந்தூர் பசுமை வெளி விமான நிலையம் அமைக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 909 நாட்களாக தொடர் போராட்டத்தில் கிராம மக்கள் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபடும் கிராம மக்களையும் போராட்ட குழுவினரையும் சந்தித்து ஆதரவு தெரிவிக்க தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் சார்பில் காவல் துறையிடமும் மாவட்ட நிர்வாகத்திடமும் அனுமதி கேட்டு விண்ணப்பித்து இருந்தார். போராட்ட குழுவினரையும் கிராம மக்களையும் இன்று விஜய் சந்திக்க அனுமதி அளித்த காவல்துறை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து இருந்தனர். போராட்டத்தில் ஈடுபடும் கிராம மக்களையும் போராட்ட குழுவினரையும் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். பின்னர் பேசிய தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய், உங்கள் போராட்டத்தை பற்றி ராகுல் என்ற சிறுவன் பேசியதை கேட்டு உங்களை சந்திக்க வந்தேன். கிட்டத்தட்ட 910 நாட்களுக்கு மேலாக நடக்கும் போராட்டம் குறித்து சிறுவன் ராகுல் பேசியதை கேட்டு மனம் ஏதோ செய்தது. சிறுவன் ராகுல் பேசியதை கேட்டு பரந்தூர் மக்களை சந்திக்க வந்துள்ளேன். பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு குழுவினருக்கு எனது முழு ஆதரவு உண்டு. நாட்டிற்கு முக்கியமான உங்களை போன்ற விவசாயிகளை காலடி மண்ணை தொட்டு தான் என் பயணத்தை தொடங்குகிறேன். ஓட்டு அரசியலுக்காக இயற்கை வள பாதுகாப்பு பற்றி நான் பேசவில்லை. பரந்தூரில் 1000-க்கும் ஏக்கர் பரப்பளவில் நீர்நிலைகளை அழித்து சென்னையை வெள்ளக்காடாக்கும் திட்டத்தை கைவிடுக. விவசாயத்திற்கு எதிரான திட்டத்தில் நான் உங்களுடன் உறுதியாக நிற்பேன். நான் ஊருக்கும் வருவதற்கும், நமது த.வெ.க.வினர் நோட்டீஸ் கொடுப்பதற்கும் தடை விதிக்கப்படுவது ஏன் என தெரியவில்லை. உங்களின் வசதிக்காக மக்களோடு இருப்பதை போன்று நம்பும் வகையில் நீங்கள் நடத்தும் நாடகத்தை பார்த்துக்கொண்டு மக்கள் சும்மா இருக்க மாட்டார்கள். நாடகம் ஆடுவதில் கில்லாடிகள் தி.மு.க.வினர். மத்திய, மாநில அரசுகள் நடத்தும் நாடகத்தை மக்கள் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க மாட்டார்கள். விமான நிலையத்திற்கு வேறு இடத்தை ஆய்வு செய்ய வேண்டும். விவசாய நிலம் இல்லாத இடத்தில் விமான நிலையத்தை கொண்டு வாருங்கள் என்று மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துகிறேன். நான் வளர்ச்சிக்கு எதிரானவன் இல்லை. ஏர்போர்ட் கட்ட வேண்டாம் என்று நான் சொல்லவில்லை. ஆனால், இங்க வேணாம்னுதான் சொல்கிறேன். அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் வேண்டாம் என முடிவெடுத்த தமிழக அரசு பரந்தூர் விமான நிலையம் வேண்டாமென ஏன் சொல்லவில்லை. பரந்தூர் திட்டத்தால் ஆட்சியாளர்களுக்கு ஏதோ லாபம் இருப்பதாக அவர் கூறினார். மேலும் உங்கள் ஊர் கிராம தேவதைகளான கொல்லம்வட்டாள் அம்மன் மேலையும், எல்லையம்மன் மேலையும் ரொம்பவே நம்பிக்கை வைத்துள்ளீர்கள் என்பது எனக்கு தெரியும். அந்த நம்பிக்கையை இழந்துவிடாதீர்கள். உங்கள் வீட்டு பிள்ளையான நானும், தமிழக வெற்றிக் கழக தோழர்களும் சட்டத்திற்கு உட்பட்டு எல்லா வழிகளிலும் உங்களோடு உறுதியாக இருப்பேன். ஏகனாபுரம் திடலில்தான் எல்லோரையும் சந்திக்க நினைத்தேன். நான் ஏன் ஊருக்குள் வர தடை என்று தெரியவில்லை. கொஞ்ச நாளைக்கு முன் நமது புள்ளைங்க நோட்டீஸ் கொடுத்ததற்கு தடைவிதித்தார்கள். ஒரு துண்டுச்சீட்டு நம்ம பிள்ளைகள் தந்ததற்கு கைது செய்தது ஏன் என்று புரியவில்லை. நம்பிக்கையோடு இருங்கள். நல்லதே நடக்கும். வெற்றி நிச்சயம். மீண்டும் சந்திக்கும் வரை நன்றி வணக்கம். மீண்டும் உங்கள் ஏகனாபுரம் ஊருக்குள்ளே நான் வருவேன் என விஜய் பேசினார்.

Tags

Next Story