விஜயகாந்த் இறுதி ஊர்வலம்: அரசு செலவில் அனைத்தையும் மு.க.ஸ்டாலின் செய்தது ஏன்?

மறைந்த தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்தின் இறுதி ஊர்வலம் முதல் இறுதிச்சடங்கு வரை செய்ய வேண்டிய அனைத்து கடமைகளையும், எவ்வித சலசலப்பும் இன்றி செவ்வனே செய்து முடித்து, இருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். அரசியலை கடந்த நட்பின் அடையாளமாக இந்த கடமையை அவர் செய்ததற்கான காரணம் பற்றிய தொகுப்பை இப்போது காண்போம்.

தமிழ் திரை உலகில் முன்னணி கதாநாயகனாக சுமார் 40 ஆண்டு காலம் வலம் வந்து, தேசிய முற்போக்கு திராவிட கழகத்தை ஆரம்பித்தவர் கேப்டன் விஜயகாந்த். தமிழக அரசியலில் 18 ஆண்டு காலமும் சிறப்பாக செயல்பட்டு, தமிழக சட்டப்பேரவையில் இரண்டு முறை உறுப்பினராகவும், ஒரு முறை எதிர் கட்சி தலைவராகவும் பொறுப்பு வகித்தவர். கேப்டன் என்று எல்லோராலும் அன்பாக அழைக்கபட்டவருமான விஜயகாந்த் டிசம்பர் 28ம் தேதி உடல் நலமின்றி காலமானார்.

மறைந்த விஜயகாந்த் உடல் அவரின் சாலிகிராம இல்லத்துக்கு முதலில் கொண்டுச் செல்லப்பட்டது. அங்கு குடும்ப உறுப்பினர்கள், தமிழக முதல்வர் ஸ்டாலின், முக்கிய பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக சாலிகிராமத்தில் இருந்து சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்துக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.

சாலிகிராமத்தில் இருந்து கோயம்பேடு வரை ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. அப்போது வழிநெடுகிலும் மறைந்த நடிகர் விஜயகாந்தின் உடலுக்கு பொது மக்கள் மலர்களை தூவி அஞ்சலி செலுத்தினர். விஜயகாந்தின் உடல் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்படும் என்ற அறிவிப்பு வெளியானது முதலே, அங்கு ஏராளமான தொண்டர்களும், பொதுமக்களும் குவியத் தொடங்கிவிட்டனர். இதனால் அந்தப் பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கோயம்பேடு தேமுதிக அலுவலகத்தின் வாசலில் திரண்ட கட்சியினர், பொதுமக்கள் என பலரும் கண்ணீர் மல்க விஜயகாந்தின் உடலை காணக் கூடினர். இதனால், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து வெளியேற முடியாத அளவுக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும், விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்துவதற்காக ஏராளமான தொண்டர்கள் கட்சி அலுவலகத்துக்குள் நுழைய முயன்றதால், அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. கூட்டம் கட்டுக்கடங்காமல் சென்றதால், சென்னை தீவுத்திடலில் விஜயகாந்த் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டது. லட்சக்கணக்கானோர் அங்கு அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து தீவுத்திடலில் இருந்து விஜயகாந்த் உடல் வைக்கப்பட்ட வாகனம் மக்கள் பேரணியுடன் கோயம்பேடு தேமுதிக அலுவலகம் கொண்டுவரப்பட்டது. இறுதிச்சடங்குகள் நிறைவடைந்ததையடுத்து, விஜயகாந்தின் உடல் தேமுதிக அலுவலகத்தின் வளாகத்தில் 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

கேப்டன் விஜயகாந்தின் மறைவு செய்தி அறிவிக்கப்பட்டதற்கு முன்பே சென்னை மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் போலிஸ் பாதுகாப்பு, பின்னர் சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்தின் வீட்டுக்கு போலிஸ் பாதுகாப்பு, அங்கிருந்து அவரது உடலை கோயம்பேடு தேமுதிக அலுவலகம் கொண்டு வரும் வரை போக்குவரத்தை சரி செய்து போலிஸ் பாதுகாப்பு, கோயம்பேடு அலுவலகம் மற்றும் அதனை கற்றிலும் விடியவிடிய போலிஸ் பாதுகாப்பு, பின்னர் தீவுத்திடவில் அதிகாலை முதல் பாதுகாப்பு, தீவுத்திடலில் இருந்து கோயம்பேடு தேமுதிக அலுவலகம் வரை சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவுக்கு போலிஸ் பாதுகாப்பு, தேமுதிக அலுவலகத்தில் இறுதிக் கட்ட பாதுகாப்பு, விஜயகாந்த் உடலுக்கு 72 குண்டுகள் முழங்க போலீஸ் மரியாதை, இறுதிச்சடங்கு முடிந்து விஜயகாந்த் நல்லடக்கம் செய்யும் வரை, கூடியிருந்த ஆயிரக்கணக்கான தொண்டர்களை கட்டுப்படுத்தி பாதுகாப்பு அளித்தது, நல்லடக்கத்திற்க பிறகு மக்கள் கலைந்து செல்லும் வரை பாதுகாப்பு, அனைவரும் சென்ற பிறகும் தேமுதிக அலுவலகத்துக்கு மறுநாள் வரை பாதுகாப்பு கொடுத்தது என்று தமிழக காவல்துறை மிகவும் அர்ப்பணிப்புடன் ஈடுபட்டது. இதற்கு ஒரே காரணம் முதல்வர் ஸ்டாலினின் உத்தரவு மட்டுமே. எந்தப் பிரச்சனையும் இல்லாமல், அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொடுங்கள் என்று காவல் துறைக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டதால், இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் சாத்தியமானது.

கேப்டன் விஜயகாந்தின் இறுதி ஊர்வலமும், இறுதி மரியாதை செலுத்தும் நிகழ்வுகள் மிகச் சிறப்பாக அரங்கேறியதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மிக முக்கிய காரணம் என்பதை வரலாறு பதிவு செய்துள்ளது. எந்த ஒரு ஆட்சி இருந்திருந்தாலும் இந்த அளவுக்கு விஜயகாந்த்க்கு பெருமை சேர்த்திருக்க முடியாது. தேமுதிக அலுவலகத்தில் இட நெருக்கடியால் பலர் கேப்டனுக்கு அஞ்சலி செலுத்த தயங்கி இருந்தார்கள். கேப்டன் இறந்த அடுத்த நொடியே அரசு மரியாதை அளிப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார்.ஒரு முதலமைச்சருக்கு அளிக்கும் அத்தனை மரியாதையையும்... தற்போது சட்டமன்ற உறுப்பினராக கூட இல்லாத ஒரு கட்சித் தலைவருக்கு அளிக்க முதல்வர் ஸ்டாலின் மட்டுமே காரணம்...

தீவு திடலை ஒரே இரவில் பல்வேறு ஏற்பாடுகளை செய்து, எந்த தள்ளும் முள்ளும் இன்றி... அனைத்து தரப்பினரையும் அஞ்சலி செலுத்த வரவழைக்கும் விதமாக ஏற்பாடு செய்து கொடுத்தவர் தமிழ்நாடு முதலமைச்சர். இதற்கான பணிகளில் விடிய விடிய சென்னை மாநகராட்சி நிர்வாகம் செய்து கொடுத்தது. மாநகராட்சி ஆணையர் டாக்டர் ராதாகிருஷ்ணன் பம்பரமாக சுழன்று தீவுத்திடலில் அஞ்சலி செலுத்துவதற்கான பணிகளை செய்து கொடுத்தார்.

அரசியல் போட்டி, விமர்சனங்கள் இருந்தாலும், எந்த ஈகோவும் இல்லாமல் சாலிகிராமத்தில் உள்ள வீட்டுக்கும், தேமுதிக அலுவலகத்துக்கும் சென்று இரண்டு முறை நேரில் சென்று அஞ்சலி செலுத்தியவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

அதேபோல விஜயகாந்த் உடலுக்கு மூன்று முறை அஞ்சலி செலுத்தியவர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். விஜயகாந்த் மறைவையொட்டி சென்னையில் சுமார் 4 ஆயரம் போலிசாரை ஈடுபடுத்த, பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. இதைவிட மிகச் சிறப்பாக எந்த அரசாங்கத்தினாலும் செய்ய முடியாது.கேப்டனின் மீது பற்று கொண்ட அனைவரையும் இந்த நிகழ்வில் பங்கேற்க வைத்த பெருமை தமிழ்நாடு முதலமைச்சரை சாரும்.

திமுகவுடன் எந்த காலத்திலும் கூட்டணியில் இல்லாத தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு பெருந்தன்மையுடன் சிறப்பு செய்தவர் முதலமைச்சர் மு க ஸ்டாலின் என்பதை எவராலும் மறுக்க முடியாது. திமுக மீது நிறைய பேருக்கு மாற்று கருத்துக்கள் இருக்கலாம்,

ஆனால் கேப்டன் விஜயகாந்த் இறுதி நிகழ்வுகளில் முதலமைச்சர் ஸ்டாலின் இல்லாவிட்டால் இது போன்ற ஏற்பாடுகள் நடந்திருக்க வாய்ப்பே இல்லை.

மறைந்த 'கேப்டன்' விஜயகாந்த் வசித்து வந்த சென்னை சாலிகிராமம் அல்லது விருகம்பாக்கம் பகுதியில் உள்ள பிரதான சாலைக்கு 'கேப்டன்' விஜயகாந்த் சாலை அல்லது 'புரட்சிக்கலைஞர்' விஜயகாந்த் சாலை என பெயரிட வேண்டும். தமிழக அரசால் வழங்கப்படும் திரைத்துறை விருதுகளில், இனி 'கேப்டன்' விஜயகாந்த் விருது அல்லது 'புரட்சிக்கலைஞர்' விஜயகாந்த் பெயரில் சிறப்பான விருது வழங்க ஆவண செய்ய வேண்டும் . சென்னை அல்லது மதுரையில் அரசு சார்பில் 'கேப்டன்' விஜய்காந்த் முழு உருவ சிலை ஒன்றை நிறுவ வேண்டும் என பல கோரிக்கைகள் எழுந்துள்ளன.

அதே நேரத்தில் விசயகாந்த் விஷயத்தில் முதல்வர் ஸ்டாலின் இவ்வளவு அக்கறை காட்டியதற்கு பின்னணியில் இரண்டு சம்பவங்கள் உள்ளன. முதலில் மறைந்த கலைஞர் கருணாநிதி மீது அளவற்ற பாசமும், நேசமும் கொண்டவர் விஜயகாந்த். இவருக்கு எழுச்சிக் கலைஞர் என்று கலைஞர் கருணாநிதி பட்டம் சூட்டினார். விஜயகாந்த் புகழின் உச்சியில் இருந்த போது, எந்த நடிகரும் முன்வராத நிலையில் சென்னை மெரினா கடற்கரையில் கலைஞருக்கு பாராட்டு விழா நடத்தி தங்கப் பேனாவை விஜயகாந்த் பரிசளித்தார். தமிழகமே திரும்பிப் பார்க்கும் வகையில் அந்த விழாவை நடத்தியவர் விஜயகாந்த். அதே போல், 2018ல் கலைஞர் மறைந்த போது வெளிநாட்டில் சிகிச்சை பெற்று வந்த விஜயகாந்த், கண்ணீர் மல்க கலைஞருக்கு விஜயகாந்த் இரங்கல் தெரிவித்து பேசிய வீடியோ வைரலானது. அதனை பார்த்தவர்கள் கண்ணீர் விட்டனர். பின்னர்,வெளிநாட்டில் இருந்து சென்னை திரும்பியதும் வீட்டுக்கு கூட போகாமல், நேராக மெரினா பீச்சில் உள்ள கலைஞர் நினைவிடத்துக்கு அழுதுகொண்டே சென்றது பார்ப்பவர்களை உருகச் செய்தது. கலைஞர் மீது விஜயகாந்த் வைத்திருந்த பாசத்தை பார்த்து திமுகவினரே கலங்கினார்கள். கலைஞர் மீது வைத்திருந்த பாசத்தால் தான் விஜயகாந்துக்கு உரிய மரியாதையை செய்ய முதல்வர் ஸ்டாலின் முன்வந்தார். தமது தந்தை கலைஞர் மீது பாசமும், நேசமும் வைத்திருந்தவருக்கு உரிய கடமையை சிறப்பாக செய்ய முன்வந்தார் முதல்வர் ஸ்டாலின்.

முதல்வர் மட்டுமல்ல அவரது மகன் அமைச்சர் உதயநிதி, சகோதரி செல்வி, சகோதரன் மு.க. தமிழரசு ஆகியோரும் விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story