விழுப்புரம் தொகுதி இறுதி வேட்பாளர் பட்டியல் சின்னத்துடன் வெளியீடு
வேட்பாளர் பட்டியல் வெளியீடு
விழுப்புரம் (தனி) மக்களவைத் தொகுதியில் 17 பேர் போட்டியிடுகின்றனர். இதற்கான இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. தமிழகத்தில் மக்களவைப் பொதுத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 19ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனுதாக்கல் மார்ச் 20ம் தேதி தொடங்கி 27ம் தேதி வரை நடைபெற்றது.
விழுப்புரம் (தனி) மக்களவைத் தொகுதியில் விசிக, அதிமுக, பாமக, நாதக, பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் என31 பேர் மனுதாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் மீதான பரிசீலனை மார்ச் 28ம் தேதி நடைபெற்றது. தங்களது வேட்புமனுக்களைத் திரும்பப் பெற மார்ச் 30ம் தேதி (சனிக்கிழமை) பிற்பகல் 3 மணி வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.
இதன்படி விழுப்புரம் தொகுதியில் போட்டியிட மனுதாக்கல் செய்திருந்த சுயேச்சை வேட்பாளர் ராஜ்குமார் மட்டும் தனது வேட்புமனுவை சனிக்கிழமை திரும்பப் பெற்றுக் கொண்டார். பிற்பகல் 3 மணி வரை மற்ற வேட்பாளர்கள் யாரும் மனுவைத் திரும்பப் பெறவில்லை. இதைத் தொடர்ந்து மாலை 4 மணிக்கு மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் வேட்பாளர்களுக்கு சின்னங்கள் ஒதுக்கீடு செய்யும் பணி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான பழனி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் ஊரக வளர்ச்சி முகமைத் திட்டக் கூடுதல் ஆட்சியர் ஸ்ருதன் ஜெய் நாராயணன், மாவட்ட வருவாய் அலுவலர் பரமேசுவரி மற்றும் அலுவலர்கள், வேட்பாளர்கள் மற்றும் அவர்களது முகவர்கள் பங்கேற்றனர். இதன்படி விழுப்புரம் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள்,
கட்சியின்பெயர், சுயேச்சைகள் அவர்களது சின்னங்கள் என்ற அடிப்படையில் விவரம்: துரை.ரவிக்குமார் (விடுதலைச்சிறுத்தைகள்) } பானை, ஜெ.பாக்யராஜ் (அதிமுக)} இரட்டை இலை, ச. முரளிசங்கர் (பாமக)} மாம்பழம், மு. களஞ்சியம் (நாம்தமிழர் கட்சி) }ஒலிவாங்கி, கோ. கலியமூர்த்தி} யானை, எம். ஆறுமுகம் (ஒருங்கிணைந்த இந்திய குடியரசுக் கட்சி)} வாயு சிலிண்டர், சுயேச்சை வேட்பாளர்கள் கே.அரசன்-
காலணி, க.குணசேகரன்-கண்ணாடி தம்ளர், நா.சத்திய ராஜ்-ஊக்கு, கா. சுரேஷ்-மட்டைப்பந்து, சு.தர்மா-பலாப்பழம், க. சுரேஷ்-கட்டில், அ. நாகராஜ்-திராட்சை, ஆ.பெரியான்-வாளி, ரா. விக்னேசுவரன்-செங்கல், ஏ.விவேகானந்தன்-ரம்பம், ஆ.விஜயன்-கணினி. துரை.ரவிக்குமாருக்கு-பானை சின்னம் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் துரை. ரவிக்குமாருக்கு பானை சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
மாநிலக் கட்சிப் பிரிவில் பதிவு செய்யப்பட்டு கட்சிகளுக்கு வழங்கப்படும் சின்னங்களில் முன்னுரிமை அடிப்படையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளருக்கு பானை சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று ஆட்சியர் பழனி தெரிவித்தார்.