கோவை எம்.பி தொகுதியில் யார் போட்டி? யாருக்கு வெற்றி?
வருகிற நாடாளுமன்ற தேர்தலில் கோவை மக்களவை தொகுதியில் யார்? யார்? போட்டியிடப் போகிறார்கள்? யாருக்கு வெற்றிவாய்ப்புள்ளது என்பது பற்றி இன்றைய செய்தித் தொகுப்பில் விரிவாக காண்போம்.
கொங்கு நாட்டின் தலைநகரம், தென்னிந்தியாவின் மான்செஸ்டர், தமிழகத்தின் தொழில் நகரம் என்ற பெருமைக்கு கோயம்புத்தூர் சொந்தமானதாகும். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் கோவையில் யார் ஜெயிப்பார் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக இருப்பதற்கு காரணம் அதிமுக மற்றும் பாஜக இடையிலான மோதல் தான். கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் கோவை மாவட்டம் அதிமுகவின் கோட்டையாக மாறியது. இந்த வெற்றிக்கு அதிமுக-பாஜக கூட்டணி கைகொடுத்தது முக்கிய காரணமாக அமைந்தது. வருகிற நாடாளுமன்ற தேர்தலை பொறுத்தவரை களம் மாறியிருக்கிறது.அதற்கு முன்னதாக தொகுதியின் சில தேர்தல் பின்னணி பற்றி அறிவோம்.
பல்லடம், சூலூர், கவுண்டம்பாளையம், கோவை - வடக்கு, கோவை - தெற்கு, சிங்காநல்லூர் ஆகிய ஆறு சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியது கோயம்புத்தூர். இவற்றில் எதுவும் தனித் தொகுதி அல்ல. சுமார் 23 லட்சம் வாக்காளர்களை கொண்ட இத்தொகுதியில் ஆண்களை விட பெண்களே அதிகமாக உள்ளனர்.
இதுவரை முடிந்துள்ள 17 மக்களவை தேர்தல்களிலும்,திமுக இரண்டு முறையும் அதிமுக ஒரு முறையுமே கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதியில் வெற்றிபெற்றுள்ளன. கோவை குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு பிறகு தமிழகத்தில் பாரதிய ஜனதா செல்வாக்குள்ள தொகுதிகளில் முக்கியமானதாக கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதி மாறிவிட்டது.
1998 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணி அமைந்த போதும்,1999ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் திமுக - பாஜக கூட்டணி அமைந்த போதும் கோவை தொகுதியில் பாஜக வேட்பாளராக சி.பி. ராதாகிருஷ்ணன் போட்டியிட்டு வென்றுள்ளார். இதேபோல்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பார்வதி கிருஷ்ணன் கோவை தொகுதியில் ஐந்து முறை போட்டியிட்டு, மூன்று முறை வென்றுள்ளார்.1999 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி சார்பில் கோவையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளராக போட்டியிட்ட அக்கட்சியின் முன்னாள் மாநிலச் செயலாளர் ஆர். நல்லகண்ணுவை, பாஜகவுடன் சேர்ந்து திமுக தோற்கடித்தது என்பது முக்கியமானது. இன்று கம்யூனிஸ்டுகளுடன் நட்பு பாராட்டுவதும், மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் இரா.நல்லகண்ணுவை பெரிதும் மதிப்பதாக கூறிவரும் திமுக, 25 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த மக்களவை தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி சேர்ந்து கொண்டு கோவை தொகுதியில் இரா.நல்லகண்ணுவை தோற்கடித்தது என்பது இக்கால தலைமுறையினர் தெரிந்து கொள்ள வேண்டும். கோவை தொகுதியில் கம்யூனிஸ்ட் கட்சி 6 முறையும், காங்கிரஸ் கட்சி 5 முறையும், திமுக, பாஜக கட்சிகள் தலா இரு முறையும், அதிமுக ஒருமுறையும் வெற்றி பெற்றுள்ளன.கோவை தொகுதியில் வென்றவர்கள் பெரும்பாலும் தேசிய கட்சியை சேர்ந்தவர்களாக உள்ளனர்.
சென்னைக்கு அடுத்தபடியாக மென்பொருள் துறை, கல்வி, மருத்துவத் துறையிலும் கோவை மாநகரம் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. அதேசமயம், ஊரகப் பகுதிகளில் விவசாயமும் முக்கியப் பங்கு வகிக்கிறது.
சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் இங்கு அதிகமாக உள்ளன.இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான சிறு-குறு தொழில்கள் அமைந்துள்ள பகுதிகளில் கோயம்புத்தூரும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. கோவை மாவட்டத்தில் உற்பத்தியாகும் கிரைண்டர்கள், வாகனங்களுக்கான ரேடியேட்டர், வேளாண் மோட்டார் பம்புகள் ஆகியவை நாடு முழுவதும் விற்பனை செய்யப்படுகின்றன. அதே போல் ஜவுளி மற்றும் தறி தொழில்களும் இங்கு சிறப்பாக நடைபெறுகின்றன.
கோவை மக்களவை தொகுதிக்குள் சுமார் 22 லட்சம் முதல் 25 லட்சம் வாக்காளர்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இங்குள்ள மக்கள் தொகையில் கொங்கு வேளாளர் கவுண்டர் சமூகம் பெரும்பான்மையாக முதலிடத்தில் இருக்கிறது. இச்சமூகத்திற்கு அடுத்ததாக நாயுடு மற்றும் அருந்ததியர் சமூகம் உள்ளது. அடுத்ததாக இஸ்லாமியர்கள், ஒக்கலிகா கவுடர்கள், கிறிஸ்தவர்கள், முதலியார்கள், செட்டியார்கள், ஆசாரிகள், வேட்டுவக் கவுண்டர்கள், ஊராளிகவுண்டர்கள், நாடார்கள், தேவேந்திரகுல வேளாளர்கள், பறையர்கள், மலையாளிகள், மார்வாடிகள், தேவர்கள், யாதவர்கள் உள்ளிட்ட சமூகங்கள் பரவலாக உள்ளன.
கடந்த 2019 மக்களவை தேர்தலில் இங்கு திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் பி.ஆர். நடராஜன் வெற்றி பெற்றார்.அதிமுக - பாஜக கூட்டணி சார்பில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணன் இரண்டாம் இடம் பிடித்து தோல்வி அடைந்தார். மூன்றாவது இடத்தை மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளராக போட்ட டாக்டர் மகேந்திரனும், நான்காவது இடத்தை நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் பேராசிரியர் கல்யாணசுந்தரமும் பிடித்தனர். கோவையை பொறுத்தவரை கொங்கு வேளாளர் கவுண்டர் சமூகம் பெரும்பான்மையாக இருந்தாலும், முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களின் 12 சதவீத வாக்குவங்கி வெற்றியை நிர்ணயிக்கும் முக்கிய காரணங்களில் ஒன்றாக உள்ளது.
வருகிற நாடாளுமன்ற தேர்தலில் இப்போதைய நிலவரப்படி 4 முனைப் போட்டி ஏற்பட வாய்ப்புள்ளது. கோவை தொகுதியில் வெற்றி பெற்றாக வேண்டும் என்று தீவிரமாக இருப்பது பாஜக மட்டுமே. இந்த தொகுதியில் மீண்டும் போட்டியிட சி.பி. ராமகிருஷ்ணன் விருப்பம் தெரிவித்து வந்தார். இரண்டு முறை வெற்றி பெற்ற தமக்கு இம்முறை மீண்டும் வாய்ப்பு அளித்தால் வெற்றி உறுதி என்று கட்சி மேலிடத்தில் சி.பி.ஆர். கூறிவந்தார். மீண்டும் மீண்டும் இவருக்கே இத்தொகுதியை வழங்கினால், கட்சியில் உள்ள மற்றவர்கள் சோர்ந்து போவார்கள் என்று முடிவு செய்த பாஜக மேலிடம், சி.பி.ஆருக்கு கவர்னர் பதவி கொடுத்து, தீவிர கட்சிப் பணியில் இருந்து விலக்கியது. அவர் தற்போது ஜார்க்கண்ட் மாநில கவர்னராக உள்ளார். இதனால் கோவை தொகுதியில் போட்டியிட பாஜகவின் புதியவர்களுக்கு வாய்ப்பு உருவாகியுள்ளது. இங்கு போட்டியிட சீட் கேட்டுவருவதில் வானதி சீனிவாசன், ஏ.பி.முருகானந்தம் ஆகியோர் முன்னனியில் உள்ளனர். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் ஆதரவு கட்சியின் மாநில பொதுச்செயலாளர் ஏ.பி. முருகானந்தத்திற்கு மட்டுமே இருப்பதால், ஏ.பி.முருகானந்தம் போட்டியிட வாய்ப்புகள் அதிகம் என்று பேசப்படுகிறது.
அதிமுகவை பொறுத்தவரை இங்கு முன்னாள் அமைச்சரும் அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி.வேலுமணி கைகாட்டுபவர் தான் அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என்று பேசப்படுகிறது. அதற்கு காரணம் இந்த தேர்தலில் கோவை, நீலகிரி, பொள்ளாச்சி, திருப்பூர் ஆகிய 4 தொகுதிகளில் அதிமுகவை வெற்றி பெற வைக்க வேண்டிய பொறுப்பு அவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதிமுக வேட்பாளர் பட்டியலில் முதலிடத்தில் இருப்பது வடவள்ளி சந்திரசேகரனின் மனைவியும் கோவை மாமன்ற உறுப்பினருமான ஷர்மிளா சந்திரசேகர். அதிமுக இளைஞரணியில் முக்கிய பொறுப்பு வகிக்கும் வடவள்ளி சந்திரசேகர் தனக்கோ அல்லது தனது மனைவிக்கோ சீட் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார். அதேபோல் வேட்பாளர் பட்டியலில் மேலும் இரண்டு டேர் அதாவது முன்னாள் மேயர் செ.ம.வேலுச்சாமி, நாம் தமிழர் கட்சியில் இருந்து அதிமுகவில் சேர்ந்த பேராசிரியர் கல்யாணசுந்தரம் ஆகியோரும் உள்ளனர்.
திமுக கூட்டணியை பொறுத்தவரை கடந்த தேர்தலில் இந்த தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு வழங்கப்பட்டது. இம்முறை அக்கட்சிக்கு வாய்ப்பு வழங்க திமுக மறுத்து விட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த தொகுதியை இம்முறை காங்கிரஸ் அல்லது மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு வழங்க திமுக தலைமை ஆலோசித்து வருகிறது. காங்கிரசை விட மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு வழங்கவே திமுக விரும்புவாக தெரிகிறது. காங்கிரசின் கை சின்னத்தில் அல்லது மக்கள் நீதி மய்யம் கட்சியின் சின்னத்தில் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் போட்டியிட வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரசுக்காக, காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து கமல்ஹாசன் பிரச்சாரம் செய்தார். அப்போதே அவருக்கு கோவை எம்.பி. சீட் வழங்கப்படும் என்று திமுக மற்றும் காங்கிரஸ் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒரு வேளை இந்த தொகுதி காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டால் காங்கிரஸ் வேட்பாளராக மயூரா ஜெயக்குமார் போட்டியிடுவார் என்று காங்கிரஸ் ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.
நாம் தமிழர் கட்சியை பொறுத்தவரை இஸ்லாமிய பெண் ஒருவரை வேட்பாளராக நிறுத்துவதற்கான ஏற்பாடுகள் குறித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.
களநிலவரப்படி கோவை தொகுதி திமுக கூட்டணிக்கு ஆதரவாக உள்ளது. இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், அருந்ததியர்கள் ஆதரவு திமுக கூட்டணிக்கு பெரும் பலமாக அமையும் என்று தெரிகிறது. இங்கு அதிமுக இரண்டாவது இடத்தை பிடிப்பதற்கு வாய்ப்புகள் இருப்பதாகவும் தெரிகிறது