சேலம் தொகுதிஎம்.பி.தேர்தலில் யார் போட்டி? யாருக்கு வெற்றி?

சேலம் தொகுதிஎம்.பி.தேர்தலில் யார் போட்டி? யாருக்கு வெற்றி?

lok sabha election 2024

வருகிற நாடாளுமன்ற தேர்தலில் சேலம் மக்களவை தொகுதியில் எந்தெந்தக் கட்சி போட்டியிடப்போகிறது என்ற தகவலும், யாருக்கு வெற்றிவாய்ப்பு கிடைக்கும் என்பது பற்றிய களநிலவர ஆய்வுகளும் வெளியாகி உள்ளது. இது பற்றிய விரிவான செய்தித்தொகுப்பை பார்ப்போம்.

சேலம் மக்களவைத் தொகுதியில் சேலம் மேற்கு, சேலம் தெற்கு, சேலம் வடக்கு, வீரபாண்டி, எடப்பாடி, ஓமலூர் ஆகிய 6 சட்டமன்றத் தொகுதிகள் இடம் பெற்றுள்ளன. கொங்கு மண்டலத்தின் முக்கிய மக்களவைத் தொகுதியாக இருக்கும் சேலத்தில், தமிழகத்தின் மிகப் பெரிய நீர்த்தேக்கமான மேட்டூர் அணை உள்ளது. இருப்பினும், மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளுக்குக் கூட்டுக் குடிநீர்த் திட்டம் மூலமாக மேட்டூர் காவிரி நீர் கிடைத்துவருகிறது. ஏரிப் பாசனத்தை நம்பியிருந்தாலும் மாவட்டத்தில் நெல், கரும்பு, வாழை, மஞ்சள், சிறு தானியங்கள் உள்ளிட்டவை பரவலாகப் பயிரிடப்படுகிறது. மரவள்ளிப் கிழங்கும் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. வேளாண்மைக்கு அடுத்தபடியாக, ஜவுளி உற்பத்தி உள்ளிட்டவை முக்கியமானத் தொழிலாக இருக்கின்றன.

சேலம் மக்களவைத் தொகுதியை பொறுத்தவரை கடந்த 1952-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் தொடங்கி கடந்த 2019-ம் ஆண்டு தேர்தல் வரை காங்கிரஸ் கூட்டணியில் உள்ள கட்சி வேட்பாளர்களே அதிகமுறை வெற்றி பெற்றுள்ளனர்.

சேலம் எம்.பி தொகுதியில் காங்கிரஸ் கட்சி 6 முறையும், தமிழ் மாநில காங்கிரஸ், திவாரி காங்கிரஸ் என காங்கிரஸ் சார்ந்த கட்சி வேட்பாளர்கள் 8 முறையும் வென்றுள்ளனர். அதிமுக 4 முறையும், திமுக 3 முறையும் வெற்றி பெற்றுள்ளது.

இந்த எம்.பி தொகுதியில் வன்னியர் சமுதாயத்தினர் வெற்றியைத் தீர்மானிக்கும் சமூகத்தினராக உள்ளனர். அடுத்ததாக கொங்கு வேளாளக் கவுண்டர் சமூகத்தினர், முதலியார் சமுதாயத்தினர், பட்டியலினச் சமூகத்தினரும் கணிசமான அளவில் உள்ளனர்.

கடந்த 2019ல் நடந்த தேர்தலில் 7 வேட்பாளர்கள் கட்சி சார்பாகவும், மற்றும் 15 வேட்பாளர்கள் சுயேட்சையாகவும் மொத்தம் 22 பேர் போட்டியிட்டனர். இதில் திமுக வேட்பாளர் எஸ். ஆர். பார்த்திபன், அதிமுக வேட்பாளரான சரவணனை, ஒரு லட்சத்து 46 ஆயிரத்து 926 வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயித்தார். கடந்த மக்களவை தேர்தலில் இத்தொகுதியில் திமுக ஜெயிக்கவும், அதிமுக தோற்கவும் முக்கிய காரணங்களாக இரண்டு விவகாரங்கள் பெரிதாக இருந்தது. முதலாவது

சேலம் எஃகு ஆலையை. ஆயிரத்து 902 கோடி மதிப்பில் விரிவுபடுத்தி, நவீனமயப்படுத்தும் திட்டத்துக்கு முந்தைய பிரதமர் மன்மோகன் சிங் அரசு அடிக்கல் நாட்டியது. அடுத்து பாஜக ஆட்சி மாறிய நிலையில், இந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டது. இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டிருந்தால் ஆண்டுக்கு 1.80 லட்சம் டன் எஃகு பாளங்கள் உற்பத்தி செய்யும் திறன் பெற்ற முழுவதும் ஒருங்கிணைந்த தொழிற்சாலையாக இந்த ஆலை தரம் உயர்ந்திருக்கும். ஆனால், அந்த வாய்ப்பை பாஜக அரசு முடக்கிவிட்டது என்று மக்கள் அதிருப்தி தெரிவித்தனர். அடுத்ததாக ஏராளமான விளைநிலங்களை கையகப்படுத்தி சேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டத்தை மத்திய அரசும், மாநில அரசும் கொண்டு வந்தன. இதற்கு எதிராகப் போராடிய மக்களை எடப்பாடி பழனிசாமி அரசு மோசமாக முடக்கியது. இந்த இரண்டு விவகரங்களும் கடந்த தேர்தலில் எதிரொலித்ததால், அதிமுக தோல்வி அடைந்தது.

இதையடுத்து முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி தமது சொந்த மாவட்டத்தின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினார். சேலம் மாநகரில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் வகையில் ஈரடுக்கு மேம்பாலத்தை எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

ஐந்து ரோடு பகுதியை மையமாகக் கொண்ட இந்த ஈரடுக்கு மேம்பாலம் 7.87 கிலோமீட்டர் நீளம் கொண்டது. இது தமிழகத்தின் மிக நீண்ட ஈரடுக்கு மேம்பாலம் என்ற சிறப்பையும் பெற்றுள்ளது.

இதுமட்டுமல்லாமல் 46 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட ரயில்வே மேம்பாலத்தையும் EPS திறந்துவைத்தார். இன்று இந்த ஊருக்கு பெயர் சேலமா? அல்லது பாலமா? என்ற பெயர் உருவாகியுள்ளது.

இந்த முறை சேலம் மக்களவைத் தொகுதி, அதிமுகவும், திமுகவும் நேரடியாக மோதும் களமாக உள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் எடப்பாடி சட்டமன்ற தொகுதியும் அவரது சொந்த மாவட்டமாகவும் இருப்பதால் சேலம் முக்கிய கவனத்தை ஈர்த்துள்ளது.

இங்கு அதிமுக வேட்பாளராக முன்னாள் எம்.பியும், முன்னாள் அமைச்சருமான செம்மலை அல்லது இளங்கோவன் ஆகிய இருவரில் ஒருவர் களம் இறங்க வாய்ப்புகள் உள்ளன. இருவரில் செம்மலைக்கே 90 சதவீதம் வாய்ப்புகள் இருப்பதாக அதிமுக வட்டாரத்தில் பேசப்படுகிறது.

திமுகவை பொறுத்தவரை இம்முறை 4 பேரின் பெயர்கள் பரிசீலனையில் இருப்பதாக பேசப்படுகிறது. ரேசில் முதலில் இருப்பவர் முன்னாள் அமைச்சரும், தற்போதைய சேலம் மாவட்ட செயலாளருமான டி.எம். செல்வகணபதி, அடுத்ததாக முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் மகன் டாக்டர் பிரபு, வீரபாண்டி ஆறுமுகத்தின் பேத்தி டாக்டர் மலர்விழி, தற்போதைய எம்.பி. எஸ்.ஆர் பார்த்திபன். இந்த நால்வரில் டி.எம். செல்வகணபதிக்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாக கூறப்படுகிறது.

இவர் கடந்த 1991-96ம் ஆண்டுகளில் அ.தி.மு.க., ஆட்சிக்காலத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சராக பதவி வகித்தவர். அப்போது ஜவஹர் வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ், தமிழ்நாடு முழுவதும் சுடுகாடுகளுக்கு கூரை அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தில் ஊழல் நடந்தது தொடர்பாக முன்னாள் அமைச்சர் செல்வகணபதி, ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள் ஆச்சார்யலு, எஸ்.சத்தியமூர்த்தி உள்ளிட்டோருக்கு எதிராக சி.பி.ஐ., வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது. விசாரணைக்குப் பின்

வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், சுடுகாட்டு கூரை அமைத்ததில் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, 23 லட்சம் ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியுள்ளதாக சாட்டப்பட்ட குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, முன்னாள் அமைச்சர் செல்வகணபதி, ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஆச்சார்யலு, எஸ்.சத்தியமூர்த்தி உள்ளிட்டோருக்கு தலா 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து கடந்த 2014ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தீர்ப்பளித்தது. இதையடுத்து திமுக மாநிலங்களவை உறுப்பினராக இருந்த செல்வகணபதி பதவி விலகினார். தண்டனை விதிக்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து செல்வகணபதி உள்ளிட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த மேல்முறையீட்டு வழக்கை நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் விசாரித்தார். சி.பி.ஐ., தரப்பில் சிறப்பு குற்றவியல் வழக்கறிஞர் சீனிவாசன் ஆஜராகி வாதிட்டார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார்.

இந்தநிலையில், இந்த மேல்முறையீட்டு மனுக்கள் மீது இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதன்படி, முன்னாள் அமைச்சர் செல்வகணபதிக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டுகள் சிறை தண்டனையை ரத்து செய்தும், வழக்கில் இருந்து செல்வகணபதி உள்ளிட்டோரை விடுதலை செய்தும் நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் உத்தரவிட்டார். இந்த தீர்ப்பு செல்வகணபதியின் அரசியல் பயணத்தில் இரண்டாவது இன்னிங்சை தொடங்குவதற்கு வாய்ப்பை உருவாக்கி கொடுத்துள்ளது. சுமார் 9 ஆண்டுகாலம் சேலம் மாவட்ட செயலாளர் பதவியை மட்டுமே வைத்திருந்த செல்வகணபதிக்கு, இம்முறை எம்.பி. தேர்தலில் போட்டியிட திமுக தலைமை வாய்ப்பு வழங்கும் என்று சேலம் திமுக தொண்டர்களால் பேசப்படுகிறது. அரசியல் களத்தில் நெருப்பாக பணியாற்றும் செல்வகணபதி கடந்த 1999ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் சேலம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிட்டு ஜெயித்தவர். அந்த தேர்தலில் செல்வகணபதியால் வீழ்த்தப்பட்டவர் வாழப்பாடி ராமமூர்த்தி என்ற மூத்த காங்கிரஸ் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்ததாக, முன்னாள் அமைச்சரும் திமுகவின் தளகர்த்தாவாக விளங்கிய வீரபாண்டி ஆறுமுகத்தின் இளைய மகன் டாக்டர் பிரபு. இவர், சென்னையில் மருத்துவராக இருக்கிறார். 2019 நாடாளுமன்றத் தேர்தலில் சேலம் தொகுதிக்கும், 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் வீரபாண்டி தொகுதிக்கும் சீட் கேட்டு திமுகவில் விருப்ப மனு கொடுத்தார். ஆனால், வாய்ப்புக் கிட்டவில்லை. இப்போது திமுக இளைஞரணியில் பம்பரமாக சுழன்று, சேலம் திமுக இளைஞரணி மாநாட்டுப் பணிகளில் ஈடுபட்டுள்ளார். இவருக்கும் இங்கு வாய்ப்பு இருப்பதாக பேசப்படுகிறது. வீரபாண்டியாரின் வாரிசுகள் யாரும் திமுகவில் பதவியில் இல்லை என்ற மணக்குமுறல் மக்களிடையே உள்ளது. அந்த குறையை சரிசெய்ய டாக்டர் பிரபு களமிறக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேநேரத்தில் தற்போதைய எம்.பி. பார்த்திபனும் மீண்டும் போட்டியிட முயற்சி செய்து வருகிறார். இதற்காக சமீபத்தில் இவர் மத்திய அரசுக்கு திடீரென கோரிக்கை ஒன்றை எழுப்பினார். அதாவது, சேலம் விமான நிலையத்துக்கு கலைஞர் மு.கருணாநிதி பெயரை சூட்ட வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தார். ஆனால், அந்த கோரிக்கை பெரிய அளவுக்கு வரவேற்பை பெறவில்லை.

இந்நிலையில் சேலத்தில் டிசம்பர் 17 அன்று திமுக இளைஞரணி மாநாடு நடைபெற உள்ளது. இதற்காக சேலம் மாவட்ட திமுகவினர் இரவு பகலாக வேலை பார்த்து வருகின்றனர். சேலம் களம் நமக்குத்தான் என்ற நம்பிக்கையுடன் உடன்பிறப்புகள் பணியாற்று கின்றனர்.

பொதுவாக தற்போதைய நிலையில் சேலத்தில் திமுக - அதிமுக இரு கட்சிகளும் சமபலத்தில் உள்ளன. செல்வாக்குள்ள வன்னியர் சமூகத்தை சேர்ந்த வேட்பாளர்களை திமுக, அதிமுக அறிவிக்கும் போது களநிலவரம் மாற வாய்ப்புகள் உள்ளன.

Tags

Next Story