அசுரனாக மாறிவரும் பாஜக, இந்தியா கூட்டணி மீண்டும் எடுபடுமா?

அசுரனாக மாறிவரும் பாஜக, இந்தியா கூட்டணி மீண்டும் எடுபடுமா?

 பாஜக

5 மாநில சட்டசபை தேர்தலில் பாஜகவுக்கு மக்கள் சம்மட்டி அடி கொடுப்பார்கள் என்று எதிர்க்கட்சிகள் பிரச்சாரம் செய்து வந்த நிலையில், 4 மாநில தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு வளர்ச்சிப் பாதையை அமைத்துக் கொடுத்துள்ளது.

மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கர் ஆகிய 3 மாநிலங்களில் பாஜக பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க உள்ளது, தெலுங்கானா மாநிலத்தில் மூன்றாவது கட்சியாக வளர்ந்துள்ளது. பாஜகவின் இந்த வெற்றி, காங்கிரசை மட்டுமல்ல இந்தியா கூட்டணியை மிரள வைத்துள்ளது. தெலுங்கானாவில் மட்டும் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் நிலைக்கு வந்துள்ளது.

இந்த சூழலில் இந்தியா கூட்டணியின் அடுத்த கூட்டம் நாளை டெல்லியில் நடைபெறவிருப்பதாக காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நடைபெற உள்ள கூட்டத்தில் கூட்டணி கட்சிகள் அனைத்தும் கலந்து கொள்ளுமாறும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜகவைத் தோற்கடிக்கும் முடிவுடன் 26 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து பாஜகவுக்கு எதிராக கூட்டணி அமைத்துள்ளன. கடந்த ஜூன் மாதம் இக்கூட்டணியின் முதல் கூட்டம் பாட்னாவில் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து இரண்டாவது கூட்டம் ஜூலையில் பெங்களூருவிலும் மூன்றாவது கூட்டம் மும்பையிலும் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் 5 மாநில சட்டசபைத் தேர்தல் முடிவுகள், இந்தியா கூட்டணியின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்படும் எனத் தெரிகிறது.

இந்தியா கூட்டணியின் கடந்த ஆலோசனை கூட்டத்தின்போது, மத்தியப்பிரதேசத்தில் பொதுக்கூட்டம் ஒன்றை நடத்துவது பற்றி முடிவு செய்யப்பட்டது. அதன் பிறகு அந்தக் கூட்டம் தள்ளிவைப்பதாக அறிவிக்கப்பட்டது. இதனிடையே தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சனாதன கொள்கைகளை டெங்கு, மலேரியா, கொரோனா போன்று ஒழிக்க வேண்டும் என்று பேசிய விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சுக்கு காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், சிவசேனா உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதையடுத்து இந்த விவகாரத்தில் திமுகவின் நிலைப்பாடு மென்மையாக மாறியது.

இதைத்தொடர்ந்து இந்தியா கூட்டணியில் பல்வேறு கருத்து வேறுபாடுகள் உருவாகின. அரசியலில் நேரெதிர் துருவமாக இருக்கும் காங்கிரசுடன் நீண்டகாலம் பயணிக்க முடியாது என்று கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அறிவித்து அதிரடியை கிளப்பியது. இதே போல் மேற்குவங்கத்தில் அரசியல் எதிரியாக இருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டுடன் கைகோர்த்து தேர்தலை சந்திப்பது ஆபத்தாக அமையும் என்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தியது. காங்கிரசுடன் கைகோர்த்து தேர்தலை சந்திப்பது தங்கள் கட்சிகளின் எதிர்காலம் பாதிக்கும் என்று சமாஜ்வாதி கட்சியும், ஆம் ஆத்மி கட்சியும் ஏற்கனவே தெரிவித்திருந்தன.

5 மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் தனித்து களம் கண்டது. ஆம் ஆத்மி தனித்து களம் கண்டது. இந்தியா கூட்டணி நாடாளுமன்ற தேர்தலுக்கு மட்டும்தான், சட்டசபை தேர்தல்களுக்கு அல்ல என்பதை மக்களுக்கு உணர்த்தியது போன்ற செயல்பாடுகள் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளிடம் இருந்தன. 5 மாநில தேர்தல் பிரச்சாரங்கள் கூட அதே போன்று இருந்தது. காங்கிரஸ் கட்சி தன்னை முன்னிலைப் படுத்துவதிலேயே கவனம் செலுத்தியது. இந்த நிலையில்தான் 5 மாநில தேர்தலில் வெற்றிபெற்று அசுர பலத்துடன் பாஜக உள்ளது. இதன் மூலம் இந்தியா கூட்டணி வெற்றி பெற ஒற்றுமை அவசியம் என்பதை எதிர்கட்சித் தலைவர்கள் உணர்ந்துள்ளனர். அதற்கு காரணம், பாஜகவுக்கும், காங்கிரசுக்கும் இடையே உள்ள குறைந்த வாக்குசதவீதம் தான்.

மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி 1 கோடியே 75 லட்சத்து 64 ஆயிரத்து353 வாக்குகள் பெற்றது. பாஜக 2 கோடியே 11 லட்சத்து,13 ஆயிரத்து 278 வாக்குகள் பெற்றது. மொத்தத்தில் காங்கிரஸ் 40.40 சதவீத வாக்குகளையும் பாஜக 48.55 சதவீத வாக்குகளையும் பெற்று இருக்கிறது.

ராஜஸ்தானில் காங்கிரஸ் - 1 கோடியே 56 லட்சத்து 66 ஆயிரத்து 731 வாக்குகளை பெற்றது. பாஜக ஒரு கோடியே,65 லட்சத்து 23 ஆயிரத்து 568 வாக்குகள் பெற்றது.மொத்தத்தில் காங்கிரஸ் 39.53 சதவீத வாக்குகளையும் பாஜக 41.69 சதவீத வாக்குகளையும் பெற்று இருக்கிறது.

தெலுங்கானாவில் காங்கிரஸ் -92 லட்சத்து 35 ஆயிரத்து 792 வாக்குகள் பெற்றது. பாஜக 32 லட்சத்து 57 ஆயிரத்து 511 வாக்குகள் பெற்றது.மொத்தத்தில் காங்கிரஸ் 39.40 சதவீத வாக்குகளையும் பாஜக 13.90 சதவீத வாக்குகளையும் பெற்று இருக்கிறது.

இதே போல் சத்தீஸ்கரில் காங்கிரஸ் 66 லட்சத்து இரண்டாயிரத்து 586 வாக்குகள் பெற்றது. பாஜக - 72 லட்சத்து 34 ஆயிரத்து 968 வாக்குகள் பெற்றது.மொத்தத்தில் காங்கிரஸ் 42. சதவீத வாக்குகளையும் பாஜக 46.27 சதவீத வாக்குகளையும் பெற்று இருக்கிறது.

இன்னும் குறிப்பிட வேண்டுமென்றால், காங்கிரஸ் கட்சிக்கு 4.91 கோடி வாக்குகள் கிடைத்துள்ளது. பாஜகவுக்கு 4.8 கோடி வாக்குகள் கிடைத்து இருக்கிறது. பாஜகவை விட காங்கிரஸ் அதிக வாக்குகளை பெற்றபோதிலும், ஆட்சியமைக்க முடியாமல போனதற்கு எதிர்கட்சிகளை ஒருங்கிணைக்காமல் விட்டது தான் என்ற குற்றச்சாட்டு உள்ளது.

இத்தேர்தல் மூலம் தென்னிந்தியாவில் உள்ள மாநிலங்களில் பாஜக ஆட்சி இல்லாத நிலை உருவாகியுள்ளது. மேலும் இத்தேர்தல் மூலம் வட இந்தியா பாஜக வசமாக உள்ளது என்பதும் நிருபணமாகியுள்ளது. தென்னிந்தியாவில் மட்டுமே இந்தியா கூட்டணி கட்சிகள் ஆட்சி நடைபெறும் நிலை உருவாகியுள்ளது.

நாடு காங்கிரஸை விரும்புகிறது, இந்தியா கூட்டணியின் ஒற்றுமை, பாஜகவை முடிவுக்கு கொண்டு வரும் என்று பேசப்பட்டாலும், இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகள் உள்ளூர் பகை மறந்து பாஜகவை வீழ்த்த திட்டமிட்டு ஆக்கப்பூர்வமாக செயல்பட வேண்டும் என்ற கருத்துகளை மூத்த காங்கிரஸ் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள், கொள்கை அடிப்படையில் இயங்கி, தேர்தல் களத்தில் தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறது. திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டில் பாஜகவுக்கு எதிராக கூட்டணி அமைத்தது போல, இந்தியா கூட்டணி தலைவர்களும் ஒருங்கிணைந்து செயல்பட்டால், அரசியல்வாதிகள், வணிகர்களுக்கு பாஐகவின் ஈடி மிரட்டல்கள், பாஐகவின் இந்துத்துவா என்ற பெயரில் ஊழல், கலவரங்கள், பெண்கள் துன்புறுத்தல், போதைப்பொருள், மோசடிகள், பொய்கள், முழுமையற்ற வாக்குறுதிகள் அனைத்தும் முடிவுக்கு வரும் என்றும் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கூறியுள்ளனர்.

வருகிற தேர்தலில் பிரதமர் வேட்பாளரை அறிவிக்காமல் இந்தியா கூட்டணி தேர்தலை சந்திப்பது பெரும் சவாலானது என்று மூத்த பத்திரிகையாளர்கள் கருத்து கூறியுள்ளனர். தமிழ்நாட்டில் பிரதமர் யார் என்பதை அறிவிக்காமல் நாம் கைக்காட்டுபவர்தான் பிரதமர் என்று திமுக கூட்டணியும், அதிமுக கூட்டணியும் அறிவித்திருப்பது மக்களை குழப்பத்தில் ஆழ்த்த வாய்ப்புகள் உள்ளன என்றும் மூத்த பத்திரிகையாளர்கள் கூறியுள்ளனர்.

2024-ல் ராகுல் காந்தி வெற்றி பெற்றால் அது ராகுல் காலம், 2024-ல் மோடி வென்றால் அது நாட்டுக்கு ராகு காலம் என்றும் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்தியா கூட்டணியின் ஒற்றுமை 5 மாநில தேர்தல்களில் இல்லை என்பதும் முக்கிய குற்றச்சாட்டாக கூறப்படுகிறது. வட இந்திய மாநிலங்களில் இந்தியா கூட்டணி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றே விமர்சிக்கப்படுகிறது. இந்தியா கூட்டணியிடம் ஒற்றுமை இல்லாவிட்டால், நாடாளுமன்ற தேர்தலிலும் பாதிப்பு வரும் என்றே கணிக்கப்படுகிறது.

Tags

Next Story