திருவள்ளூரில் சாலையில் சுற்றி திரியும் மாடுகள்; வாகன ஓட்டிகள் அவதி!!
Cow
திருவள்ளூர் நகர் பகுதியில் மாடுகள் அதிக அளவில் கூட்டம், கூட்டமாக சாலையில் ஹாயாக சுற்றி வருகின்றன. சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலை உட்பட முக்கிய சாலைகளில் போக்குவரத்திற்கு இடையூறாக மாடுகள் நிற்பதால் வாகன ஓட்டிகள் திணறி வருகிறார்கள். கடந்த சில மாதங்களுக்கு முன் மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் போக்குவரத்துக்கு இடையூறாக சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளை பறிமுதல் செய்து அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார். இதன் பின்னர் சில நாட்கள் சாலையில் சுற்றிய மாடுகள் பிடிக்கப்பட்டு அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. தற்போது அதிகாரிகள் கண்டு கொள்ளாததால் திருவள்ளூர் நகர் பகுதியில் மாடுகள் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கி உள்ளது. எந்த சாலையில் திரும்பினாலும் மாடுகள் ஹாயாக சுற்றி வருகின்றன. குறிப்பாக திருவள்ளூரின் முக்கிய பகுதியான ரெயில் நிலையத்தில் இருந்து கலெக்டர் அலுவலகம் வரை செல்லும் சாலையில் பஸ், லாரி, ஆட்டோ, ஆம்னி வேன், இருசக்கர வாகனங்கள் உள்ளிட்டவைகளை வழிமறித்து மாடுகள் கூட்டமாக செல்வதால் அந்த சாலையில் போக்கு வரத்து நெரிசல் மற்றும் விபத்துக்கள் ஏற்பட்டு வருகின்றன. போக்குவரத்து போலீசாரும், வாகன ஓட்டிகளும் சாலையில் நிற்கும் மாடுகளை விரட்ட கடும்பாடுபட்டு வருகிறார்கள். ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து காமராஜர் சிலை வரை தினந்தோறும் 100-க்கும் மேற்பட்ட மாடுகள் வாகனங்க ளுக்கு இடையே புகுந்து சாலையில் படுத்து கொள்கின்றன. இதனால் அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் உயிரை கையில் பிடித்தபடி பயணம்செய்து வருகிறார்கள்.மேலும் முக்கிய சாலையின் சிக்னல் கம்பம் அருகேயும் மாடுகள் படுத்து கொள்வதால் போக்குவரத்து போலீசார் அதனை விரட்ட தினந்தோறும் தவித்து வருகிறார்கள். எனவே திருவள்ளூர் நகர் பகுதியில் போக்குவரத்திற்கு இடையூறாக விபத்து ஏற்படும் வகையில் சுற்றும் மாடுகளை அப்புறப்படுத்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.