ரஞ்சி கோப்பையின் 2வது சுற்று ஆரம்பம் - தமிழ்நாடு - டெல்லி இன்று மோதல் !!

ரஞ்சி கோப்பையின் 2வது சுற்று ஆரம்பம் - தமிழ்நாடு - டெல்லி இன்று மோதல் !!

ரஞ்சி கோப்பை

நாட்டின் முக்கிய உள்நாட்டு டெஸ்ட் தொடரான ரஞ்சி கோப்பையின் 2வது சுற்று ஆட்டங்கள் இன்று ஆரம்பம் ஆகின்றன. மொத்தம் 38 அணிகள் மோதும் ஆட்டங்கள் நாட்டின் 19 நகரங்களில் நடக்கின்ற நிலையில் எலைட் டி பிரிவில் இடம் பெற்றுள்ள தமிழ்நாடு தனது 2வது சுற்று லீக் ஆட்டத்தில் டெல்லி அணியை இன்று எதிர் கொள்கிறது. டெல்லியில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் தமிழ்நாடு புதியக் கேப்டனுடன் களம் காண உள்ளனர். தமிழ் நாடு கேப்டன் சாய் சுதர்சன் இளம் வீரர்களுக்கான ஆசிய கோப்பை போட்டியில் விளையாட இந்திய அணியுடன் இணைந்துள்ள காரணத்தால் புதியக் கேப்டனாக துணைக் கேப்டன் நாரயண் ஜெகதீசன் கேப்டன் பொறுப்பை ஏற்றுள்ளார்.

சாய் கிஷோர் இல்லாவிட்டாலும் தமிழ்நாடு அணியில் ஜெகதீசனுடன் இணைந்து விஜய சங்கர், இந்தரஜித், சாய் சுதர்சன் அஜித் ராம், ஆந்த்ரே , மணிமாறன், ஷாருக்கான், முகமது ஆகியோருடன் வட மாநில வீரர்களும் அதிரடி களம் இறங்க உள்ளனர். கூடவே முதல் ஆட்டத்தில் சவுராஷ்டிராவை வீழ்த்திய உற்சாகத்தில் தமிழ்நாடு இன்று டெல்லியுடன் மொத உள்ளது. அதே நேரத்தில் ஹிம்மாத் சிங் தலைமையிலான டெல்லி முதல் ஆட்டத்தில் சட்டீஸ்கரிடம் டிரா தான் செய்துள்ளது.


அதனால் முதல் வெற்றி முனைப்பில் நவ்தீப் சைனி, ஹிம்மான்சு சவுகான், ஜான்டி சித்து, சிம்ரன்ஜித் சிங் ஆகியோர் அசத்த காத்திருக்கின்றனர். சாய் கிஷோர் போல் டெல்லியின் முக்கிய வீரர்கள் அனுஜ் ராவத், ஆயுஷ் பதோனி ஆகியோர் இந்தியா ஏ அணியில் விளையாட சென்றுள்ளனர். எப்படி இருந்தாலும் இந்த 2 அணிகளும் மோதிய ரஞ்சி ஆட்டங்கள் பெரும்பாலும் டிராவில்தான் முடிந்துள்ளன. அதிலும் கடைசியாக மோதிய 5 ஆட்டங்களும் டிராவில்தான் முடிந்து இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வரலாறு இந்த ஆட்டத்தில் தமிழ்நாடு மாற்றும் என்று வாய்ப்பு உள்ளது என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags

Next Story