பாகிஸ்தானை வீழ்த்திவிட்டு .. நாம் கொண்டாடுவோம் யாரும் கவலைப்பட தேவை இல்லை - முகமது கைஃப் | கிங் நியூஸ்24x7

பாகிஸ்தானை வீழ்த்திவிட்டு .. நாம் கொண்டாடுவோம் யாரும் கவலைப்பட தேவை இல்லை - முகமது கைஃப் | கிங் நியூஸ்24x7

 Mohammad Kaif

மும்பை: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடரை 3-1 என்ற கணக்கில் இழந்த இந்திய அணியை முன்னாள் வீரர் முகமது கைஃப் கடுமையாக விமர்சித்துள்ளார். ஆனால் இதே இந்திய வீரர்கள் அடுத்த மாதம் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தானை வீழ்த்திய பின் வானளவிற்கு புகழப்படுவார்கள் என்றும் நக்கல் செய்துள்ளார்.

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடரில் இந்திய அணி 3-1 என்ற கணக்கில் படுதோல்வியை சந்தித்துள்ளது. அடிலெய்டு டெஸ்ட் போட்டியின் போது மழை வரவில்லை என்றால், 4-1 என்ற மோசமான தோல்வியை இந்திய அணி அடைந்திருக்கும். இதனால் பும்ரா, சிராஜ், ஜெய்ஸ்வாலை தவிர்த்து இந்திய அணியின் அத்தனை வீரர்கள் மீதும் கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகிறது.



குறிப்பாக சீனியர் வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரையும் இந்திய அணியில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்ற குரல்கள் அதிகரித்துள்ளது. ஆனால் அடுத்த மாதம் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடக்கவுள்ளதால், அடுத்த டெஸ்ட் தொடருக்கு முன்பாகவே இருவரின் எதிர்காலம் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று பார்க்கப்படுகிறது. இதுகுறித்து இந்திய முன்னாள் வீரர் முகமது கைஃப் பேசுகையில், குறித்து வைத்து கொள்ளுங்கள்.. பிப்.23ஆம் தேதி இதே இந்திய அணி வீரர்கள் பாகிஸ்தான் அணியை சாம்பியன்ஸ் டிராபி தொடரில் வீழ்த்திய பின், அனைவரும் வானளவிற்கு புகழ்ந்து தள்ளுவார்கள். அப்போது ஒயிட் பால் கிரிக்கெட்டில் இந்திய அணி ஒரு சாம்பியன் என்று கொண்டாடுவாரக்ள். அதில் எந்த சந்தேகமும் கிடையாது.


ஆனால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் அடைந்த தோல்வி மாறாது. நாம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை வெல்ல வேண்டும் என்றால், சிறந்த டெஸ்ட் அணியை உருவாக்க வேண்டும். அந்த அணிக்கு வேகப்பந்துவீச்சாளர்களை சிறப்பாக எதிர்கொள்ளும் அளவிற்கு திறமை இருக்க வேண்டும். இந்தியாவிலும் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு சாதகமான பிட்ச்களை பிசிசிஐ உருவாக்க வேண்டும்.


ஒயிட் பால் கிரிக்கெட்டில் நாம் சிறப்பாக செயல்படுகிறோம். ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் நீண்ட தூரம் பின் தங்கியிருக்கிறோம். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் வெல்வதற்கு, இந்திய அணி வீரர்கள் உள்ளூர் கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாட வேண்டும். ஸ்பின் பிட்ச்களிலும், வேகப்பந்துவீச்சாளர்களுக்கு உதவும் பிட்சிலும் ஆட பயிற்சி மேற்கொள்ள வேண்டும். அதுவரை நம்மால டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்த முடியாது. தூக்கத்தில் இருந்து எழுவதற்கு இதுதான் நேரம். கவுதம் கம்பீரை மட்டும் குறை சொல்ல முடியாது. அனைவருக்கும் ரஞ்சி டிராபியில் விளையாட வாய்ப்பு அளிக்கப்படுகிறது. ஆனால் ஒவ்வொரு முறையும் ரஞ்சி டிராபியில் ஆடுவதற்கு பதிலாக வீரர்கள் ஓய்வு எடுப்பதிலேயே குறியாக இருக்கின்றனர். ரஞ்சி டிராபி விளையாடாமலோ, பயிற்சி ஆட்டங்களில் விளையாடாமலோ எப்படி அவர்களால் சிறந்த பேட்ஸ்மேனாக பவுலர்களாக உருவாக முடியும் என்று தெரியவில்லை. இந்தியாவில் ஸ்பின்னர்களை எதிர்த்து விளையாடுவது எவ்வளவு கடினமோ, அதே அளவிற்கு தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவில் வேகப்பந்துவீச்சிற்கு சாதகமான ஆடுகளங்களில் விளையாடுவது கடினம்.



அதனால் எவ்வளவு நாட்கள் பயிற்சியை தள்ளி வைக்கிறீர்களோ, அவ்வளவு நாட்கள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வெற்றி தள்ளிப்போகும். என்ன நடந்தாலும் அது நல்லதுக்கே என்று எடுத்து கொண்டு, உடனடியாக டெஸ்ட் கிரிக்கெட்டில் வெற்றி பெறுவதற்கான அடிப்படையை தொடங்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.


Tags

Next Story