இந்த உலகக் கோப்பையில், இந்திய அணியின் வெற்றிகள் யாவும், ஒரு அழகான ஒத்திசைவுக் கோர்வை...

இந்த உலகக் கோப்பையில், இந்திய அணியின் வெற்றிகள் யாவும், ஒரு அழகான ஒத்திசைவுக் கோர்வை...

உலகக் கோப்பை

இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையே 5ஆம் தேதி நடந்த போட்டி...

ரோகித் சர்மா, நின்று ஆடினால், அவருடைய புள்ளி விபரங்கள் முன்னேறியிருக்கக் கூடும். ஆனால், கோலியின் சதத்திற்க்கு சற்றும் குறைவில்லாதது, ரோகித்தின் அதிரடியான 40 ரன்கள்!

மிக முக்கியமாக, அந்த அதிரடிதான், ஸ்ரேயாஸ், கோலி பார்ட்னர்ஷிப், எந்த வித அழுத்தமும் இன்றி அமைய அடிப்படை. இன்னிங்ஸ் முழுக்க ஏறக்குறைய 6 ரன் ரேட்டிலேயே அணியின் ஸ்கோர் செல்லுமளவுக்கு உதவி புரிந்த ஆட்டம் அது!

ஸ்ரேயாஸ் 34 பந்துகளுக்கு, வெறும் 11 ரன்கள் என்று செல்லும் போது, கோலி, ஓரளவு அதைச் சமன் செய்வது போல் ஆடியதும், ஒரு கட்டத்திற்க்கு மேல் ஸ்ரேயாஸ் அதிரடியாக ஆடியதும், ஒரு பியுட்டிஃபுல் டூயட் சாங்!

எந்த இடத்திலும், அதிக பந்தை வீணடிக்கிறோமோ என்ற அழுத்தம் அவர்களுக்கு வராத காரணம், அவர்களுக்குள் இருந்த புரிந்துணர்வும், பிட்ச்சின் தன்மையை உணர்ந்ததும், ரோகித் மற்றும் டிராவிட்டிடம் இருந்து வந்த தெளிவான கம்யூனிகேஷனும்!

சொல்லப் போனால், கோலியால் மிகப் பெரிய அதிரடியை அதன் பின் ஆடவே முடியவில்லை! ஆனால், ஒரு முனையில், நங்கூரம் போன்று நிலைத்து நின்றது, சூர்யா, ஜடேஜாவை அதிரடி ஆட வைத்தது! இந்த மாதிரி பிட்ச்சுகளில், மிக நன்றாக ஆடக் கூடிய கே எல் ராகுல் விக்கெட் வீழ்ந்தாலும், கோலியின் இருப்பு, நம்பிக்கையை தொடர்ந்து மற்றவர்களுக்கு கொடுத்துக் கொண்டே வந்தது! அணிக்குள் எனர்ஜி பூஸ்டராக இருப்பது போல, இந்த ஆட்டத்திலும்! பிறந்த நாளில், சச்சினின் சாதனையை சமன் செய்யும் சதம் என்பது, அழகான டூயட்டை, மிகச் சிறந்த லொகேஷனில் காட்சிப்படுத்துவது போல!

ஆர்டினரி பந்து வீச்சில் மட்டும் எக்ஸ்டிரார்டினரி ப்ளேயர் என்ற விமர்சனத்துக்கு பதிலளித்த இன்னிங்ஸ் ஸ்ரேயாசுடையது! இந்தப் போட்டியில் மட்டுமல்ல, எல்லாப் போட்டிகளிலும், ரோகித்தோ, கோலியோ, ராகுலோ, என யாராவது நிலைத்து நிற்பதும், தேவைப்படும் நேரங்களில் கை கொடுக்கும் ஆட்டத்தை மற்றவர்கள் கொடுப்பதும் என A perfect sync ல் இருக்கிறார்கள்!

பேட்டிங்கை விட, பந்து வீச்சில் அந்த Sync இன்னும் அதகளம்! கேசவ் மகாராஜ், சம்சியின் பந்து வீச்சின் போதே, இது இந்தியாவின் கேம் என்ற உள்ளுணர்வு இருந்தாலும், டியு வருமோ என்ற எண்ணமும், டி காக், க்ளாசன் போன்றோரின் ஃபார்ம் கொஞ்சம் சந்தேகத்தைக் கொடுத்தது. டிகாக்கை இரண்டாவது ஓவரில் தூக்கியதும், அதற்கடுத்த அவர்கள் வீசிய டைட்டான ஓவர்களும் அந்த வெற்றியை ஓரளவு பறை சாற்றி விட்டது!

ஆனால் இவ்வளவு பெரிய வெற்றியா என்ற ஆச்சரியமும், விக்கெட் விழா விட்டாலும், மிக நம்பிக்கையுடன் அவர்கள் வீசிய லைன் அண்ட் லெந்த்களும், அதை மேலும் மேம்படுத்திய ஷமி, ஜடேஜாவின் பந்து வீச்சும் அந்த ஒத்திசைவின் மிகச் சிறந்த வெளிப்பாடு! 9 வது ஓவரில் ஜடேஜாவை கொண்டு வந்ததெல்லாம், மிக ஆழமான திட்டமிடல் மற்றும் பிரில்லியண்ட் கேப்டன்சியின் எடுத்துக்காட்டு!

2019, 2015 வருட உலகக் கோப்பையிலும், லீக் போட்டிகளில், நாம் முதலிடத்தில்தான் வந்தோம், ஆனால் செமியில் வெளியே வந்தோம் என்று நினைக்கலாம். ஆனால், அடிப்படை வித்தியாசம், 2019 ல், லீக்கில் ஒரு போட்டியில் தோற்றிருக்கிறோம். 2015ல், க்ரூப் போட்டிகளில், நாம் சில அணிகளுடன் மோதவே இல்லை! கூடுதலாக, அந்தப் போட்டிகள், இந்தியாவில் நடைபெறவில்லை! மிக முக்கியமாக, நம் பந்து வீச்சும், பவுலர்களில் ஃபார்முக்கு இந்தளவிற்க்கு இருந்ததில்லை! ஏறக்குறைய, எல்லா பவுலர்களும் ஃபார்மில் இருக்கிறார்கள். இருப்பதிலேயே, ஃபார்ம் கம்மி என்றால், 5 விக்கெட் எடுத்த ஜடேஜாதான்!

இதையெல்லாம் தாண்டி, இந்தத் தொடரில், இந்திய அணியை வித்தியாசப்படுத்துவது, அவர்கள் வெற்றி பெறும் விதம். பெரிய அணி, சின்ன அணி என்ற பாரபட்சம் பார்க்காமல், அனைவரையும் அடித்து நொறுக்கிக் கொண்டு, முன்னேறுவது!

ரமணா படத்தில் திருநெல்வேலில்லாம் தோலை உரிச்சிடுவாங்கன்னு சொல்லும் போது, அந்த ஊர்லயே என்ன பண்றதுன்னு தெரியாம முழிச்சுகிட்டுதான் இருக்காங்க என்ற தகவல் வருவதைப் போல, நியுசிலாந்து இருக்குற ஃபார்முக்குன்னு ஆரம்பித்த பேச்சு, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கான்னு எல்லாரையும் துவம்சம் செய்து விட்டு இந்த இடத்திற்க்கு வந்திருக்கிறோம்!

ஏறக்குறைய 2003ல் இருந்த ஆஸ்திரேலியா அணியைப் போல!

ஒரு மேட்ச்சுனாச்சும் தோத்துட்டா பரவாயில்லை என்ற குரல்களைக் கேட்க முடிகிறது! அது நாம், கண்ட கனவு, நனவகும் போது வரும் அதீத மகிழ்ச்சியின் விளைவு! இயல்பான இந்தியன் மெண்ட்டாலிடியின் வெளிப்பாடு! நமக்கு மிகப் பிடித்த ஒன்று கையில் கிட்டியதும், இது நிலைக்குமா என்ற சராசரி சந்தேகத்தின் வெளிப்பாடு. நாம் பொதுவாக இப்படித்தான் சிந்திப்போம்.

ஆனால், ஆஸி அணி இது போல் அடித்து நொறுக்கி வந்த போது, அவர்கள் யாரும், இப்படி நினைக்க வில்லை. ஒரு மேட்ச் கூட தோற்கக் கூடாது என்ற எண்ணம் மட்டுமே இருந்தது. 2007ல், இந்தியா டி20 கோப்பையை வென்ற போது கூட, கோப்பைகள், எங்களுக்குதானே சொந்தமாக இருக்க வேண்டு, அதெப்படி, இன்னொரு அணி வெல்லலாம் என்பது போல்தான், ஆஸியின் எண்ணம் இருந்தது!

என்னைப் பொறுத்த வரை, இந்த இந்திய அணியை இனி யாரேனும் வீழ்த்தினால், அவர்களின் மிகப்பெரிய வாழ்நாள் சாதனையாகச் சொல்லிக் கொள்ளக் கூடிய ஒன்றாக மாறும்! அந்தளவிற்கு விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது! இந்தத் தொடரில், இந்திய அணியை ஓரளவு சவால் கொடுத்த அணி என்றால், அது ஆஸியும், நியுசியும் மட்டும்தான்!

கோப்பையை வெல்வதென்பது சாதனை! ஆனால், இந்த இந்திய அணி ஏற்கனவே வரலாற்றைப் படைத்து விட்டது! சாதனையும், படைத்தால், அது ஒரு மைல்கல்லாக மாறும்!

Tags

Next Story