ரஞ்சி கோப்பை தொடர் - அசாம் அணியுடன் மோதும் தமிழ்நாடு !!!
ரஞ்சி கோப்பை தொடர்
ரஞ்சி கோப்பை தொடரின் 4வது சுற்று ஆட்டங்கள் இன்று ஆரம்பம் ஆக உள்ளது. நாட்டின் 19 நகரங்களில் நடைபெறும் இப்போட்டியில் 38 அணிகள் களமிறங்குகின்றனர்.
எலைட் டி பிரிவில் உள்ள தமிழ்நாடு இதுவரை விளையாடிய 3 போட்டிகளில் ஒரு வெற்றி, 2 டிரா கண்டுள்ளது. முதல் ஆட்டத்தில் சவுராஷ்டிராவை 70 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி 7 புள்ளிகள் பெற்ற தமிழ்நாடு, அடுத்து டெல்லியுடன் டிரா செய்தாலும் முதல் இன்னிங்ஸ் முன்னிலை காரணமாக 3 புள்ளிகள் பெற்று சத்தீஸ்கருடன் நடந்த 3வது ஆட்டத்திலும் டிரா செய்தாலும், முதல் இன்னிங்சில் பின்தங்கியதால் 1 புள்ளி மட்டுமே பெற்றது. டி பிரிவில் முதலிடத்தில் இருந்த தமிழ்நாடு இப்போது (11 புள்ளி) 3வது இடத்தில் உள்ளது. சண்டிகர், ரயில்வே அணிகள் தலா 13 புள்ளிகள் பெற்று முதல் 2 இடங்களில் உள்ளன.
எஞ்சிய ஆட்டங்களில் அசாம், ரயில்வே, ஜார்க்கண்ட் அணிகளை வீழ்த்தினால் தமிழ்நாடு காலிறுதிக்கு எளிதில் முன்னேறலாம். டிரா அல்லது தோல்வியை சந்தித்தால், மற்ற அணிகளின் முடிவுகளைப் பொறுத்தே தமிழ்நாட்டின் காலிறுதி போட்டிக்கு முன்னேறும்.
இந்நிலையில், கவுகாத்தியில் இன்று தொடங்கும் 4வது சுற்று ஆட்டத்தில் அசாம் அணியுடன் தமிழ்நாடு மோதுகிறது. எமர்ஜிங் ஆசிய கோப்பைக்கான இந்தியா ஏ அணியில் இடம் பெற்றிருந்த கேப்டன் சாய் கிஷோர் மீண்டும் அணிக்கு வந்தது கூடுதல் பலம் அளிக்கும் என கூறப்படுகிறது.