சையத் முஷ்டாக் அலி டி20 கிரிக்கெட் போட்டி - சவுராஷ்டிரா – தமிழ்நாடு அணிகள் பலபரீட்சை !!
தமிழ் நாடு
சையத் முஷ்டாக் அலி டி20 கிரிக்கெட் போட்டிகள், நாட்டின் பல்வேறு நகரங்களில் நடக்கின்றன. அவற்றில் தமிழ்நாடு இடம் பெற்றுள்ள பி பிரிவு ஆட்டம் மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் நடக்கிறது.
தமிழ்நாடு அணி, ஷாருக்கான் தலைமையில் இதுவரை 5லீக் ஆட்டங்களில் விளையாடி உள்ளது. முதல் ஆட்டத்தில் திரிபுராவை 43 ரன் வித்தியாசத்திலும், சிக்கிமை 134ரன் வித்தியாசத்தில் திணறடித்து வென்ற தமிழ்நாடு, காலிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை பெற்றது.
ஆனால், அடுத்த 3 ஆட்டங்களில் நிலைமை மாறியது. பரோடாவிடம் 3 விக்கெட் வித்தியாசத்திலும், குஜராத்திடம் 19ரன் வித்தியாசத்திலும், கர்நாடகாவிடம் 7 விக்கெட் வித்தியாசத்திலும் தமிழ்நாடு தொடர் தோல்வி கண்டது.
அதனால் பி பிரிவு புள்ளிப் பட்டியலில் 8 புள்ளிகளுடன் 5வது இடத்தில் தமிழ்நாடு உள்ளது. அதனால் காலிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பையும் இழந்துள்ளது.
இந்நிலையில், இன்று நடக்கும் 6வது லீக் ஆட்டத்தில் சவுராஷ்டிரா – தமிழ்நாடு அணிகள் மோத உள்ளன. ஜெயதேவ் உனத்கட் தலைமையிலான சவுராஷ்டிரா இதுவரை விளையாடிய 5 லீக் ஆட்டங்களில் 4ல் வென்று பி பிரிவு புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.
இன்றைய ஆட்டத்தில் அந்த அணி வென்றால் காலிறுதி வாய்ப்பை உறுதி செய்யும். சவுராஷ்டிராவை எதிர்த்து களமிறங்கும் தமிழ்நாடு அணியிலும் திறமைக்கு பஞ்சமில்லை.
சையத் முஷ்டாக் அலி டி20 தொடரில் முதல் சாம்பியனும் முன்னாள் சாம்பியனும் தமிழ்நாடு என்பது குறிப்பிடத்தக்கது.