"சிறந்த பேட்டர் சச்சின் டெண்டுல்கர்தான்” - ஜேம்ஸ் ஆண்டர்சன்
ஜேம்ஸ் ஆண்டர்சன்
மேற்கு இந்தியத்தீவுகளுக்கு எதிராக நடைபெற்று வரும் லார்ட்ஸ் டெஸ்ட் போட்டிதான் ஜேம்ஸ் ஆண்டர்சனின் கடைசி டெஸ்ட் போட்டி. அவர் 700 விக்கெட்டுகளைக் கடந்த ஒரே வேகப்பந்து வீச்சாளர். இந்நிலையில், சச்சின் டெண்டுல்கர் தான் எதிர்கொண்ட சிறந்த பேட்டர் என்று கூறியுள்ளார்.
''சிறந்த பேட்டர் சச்சின் டெண்டுல்கர் என்றே கூறுவேன். அவருக்கு எதிராக ஒரு குறிப்பிட்ட ஆட்ட உத்தியை வகுக்க முடிந்ததாக நான் கருதவில்லை. சச்சின் இறங்கும் போதெல்லாம் நான் நினைப்பது ‘மோசமான பந்துகளை அவருக்கு வீசக்கூடாது’ என்பதைத்தான். ஏனெனில், மோசமான பந்துகளை அவர் அடித்து நொறுக்கி விடுவார். அப்படிப்பட்ட பிளேயர் அவர். அவர் எனக்கு எதிராக வெற்றியும் அடைந்திருக்கிறார். எங்களுக்கு எதிராக அதிக ரன்களைக் குவித்துள்ளார். எனது கரியர் சாதனையாக நான் நினைப்பது இந்தியாவுக்கு எதிராக ட்ரெண்ட் பிரிட்ஜில் பேட்டிங்கில் 81 ரன்களை எடுத்ததையே கருதுகிறேன். விக்கெட் எடுத்ததையோ, சிறந்த பவுலிங்கையோ என்னால் கூற முடியும். ஆனால், அன்று பேட்டிங்கில் 81 ரன்கள் எடுத்தது என்னாலேயே நம்ப முடியாத விஷயம்'' எனத் தெரிவித்தார்.