வெளியான டெஸ்ட் தொடருக்கான அட்டவணை!

வெளியான டெஸ்ட் தொடருக்கான அட்டவணை!

டெஸ்ட் தொடர் 

இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு பின் இந்திய அணி வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இதன்பின் செப்டம்பர் மாதம் வங்கதேசம் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்கவுள்ளது. பின்னர் நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாடவுள்ளது.

அதன்பின் தென்னாப்பிரிக்கா உடனான டி20 தொடர் நடக்கவுள்ள நிலையில், இன்னொரு பக்கம் இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. ஜனவரி மாதம் முதல் வாரத்தில் இந்த டெஸ்ட் தொடர் முடிவடைந்த பின், சாம்பியன்ஸ் டிராபி, ஐபிஎல் தொடர் என்று இந்திய அணியின் பயணம் அமைந்துள்ளது.

அதன்பின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான இறுதிப்போட்டி லண்டனில் நடக்கவுள்ளது. அதன்பின் பிசிசிஐ தரப்பில் இங்கிலாந்து அணியுடன் டெஸ்ட் தொடரில் பங்கேற்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்பட்டது. இந்த நிலையில் இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

இந்த இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ஜூன் 20ஆம் தேதி முதல் ஜூன் 24ஆம் தேதி வரை லீட்ஸ் மைதானத்தில் நடக்கவுள்ளது. அதன்பின் 2வது டெஸ்ட் போட்டிக்கு சுமார் ஒரு வாரம் இடைவெளி விட்டு ஜூலை 2ஆம் தேதி முதல் ஜூலை 6ஆம் தேதி வரை எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. பின்னர் 3வது டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் ஜூலை 10 முதல் ஜூலை 14 வரை நடத்தப்படவுள்ளது. இதன்பின் 9 நாட்கள் இடைவெளி கொடுத்து 4வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டர் மைதானத்தில் ஜூலை 23 முதல் 27 வரை நடக்கவுள்ளது. பின்னர் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் ஜூலை 31 முதல் ஆகஸ்ட் 4 வரை நடக்கவுள்ளது.

கடந்த முறை விராட் கோலி தலைமையில் இந்திய அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்த போது, இந்திய அணி டெஸ்ட் தொடரை வெல்ல மிகச்சிறந்த வாய்ப்பு கிடைத்தது. ஆனால் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் செய்த சூழ்ச்சி காரணமாக கடைசி டெஸ்ட் போட்டி நீண்ட இடைவெளிக்கு பின் நடந்தது. அதில் இந்திய அணி தோல்வியடைந்ததால், டெஸ்ட் தொடர் 2-2 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. அதனால் இந்தமுறை இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் தொடரை வென்று இந்திய அணி வரலாறு படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags

Next Story