இன்றிரவு தீர்ப்பு - வினேஷ் போகத் வெள்ளிப் பதக்கத்தை பெறுவாரா !!
வினேஷ் போகத்
பாரீஸ் நகரில் கடந்த 26-ஆம் தேதி தொடங்கிய 33-வது ஒலிம்பிக் போட்டி, 17 நாள்கள் நடைபெற்ற நிலையில் நேற்று இரவு நிறைவடைந்தது. முன்னதாக பாரிஸ் ஒலிம்பிக்கில் நடைபெற்ற பெண்கள் மல்யுத்தத்தின் 50 கிலோ எடைப்பிரிவில் இந்தியா சார்பில் வினேஷ் போகத் கலந்து கொண்டார்.
இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இந்திய வீராங்கனை வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். 100 கிராம் எடை கூடுதலாக இருந்ததால் அவரது பதக்கம் பறிபோனது.இதையடுத்து, மல்யுத்தத்தில் இருந்து ஓய்வு பெறுவதாக வினேஷ் போகத் அறிவித்தார்.இதை தொடர்ந்து தனக்கு வெள்ளிப் பதக்கம் வழங்க வேண்டும் என்று கோரி சர்வதேச விளையாட்டு நடுவர் நீதிமன்றத்தில் வினேஷ் போகத் மேல்முறையீடு செய்தார்.
இறுதிப்போட்டிக்கு முன்பு வரை தனது எடை சரியாக இருந்ததால் வெள்ளிப்பதக்கம் வழங்க வேண்டும் என்றும் அதில் கூறியிருந்தார். வினேஷ் போகத் வழக்கில் வாதங்கள் முடிவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்படவுள்ளது. எந்த ஒரு மோசடியிலும், பதக்கத்தைப் பெறுவதற்கு தவறான முயற்சியில் அவர் ஈடுபடவில்லை.
அவரது கடின உழைப்பைக் கருத்தில் கொண்டு வெள்ளிப் பதக்கத்தையாவது வழங்க வேண்டும்” என வினேஷ் போகத் தரப்பில் வாதம் வைக்கப்பட்டுள்ளது. வாதங்கள் நிறைவடைந்து இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ள நிலையில் அவர் வெள்ளிப்பதக்கம் பெற வேண்டும் என நாடே ஆவலுடன் எதிர்பார்த்துள்ளது.