உலக பாரா தடகள போட்டி - தங்க மகன் மாரியப்பன்
தங்க மகன் மாரியப்பன்
மாற்றுத் திறனாளிகளுக்கான 11-வது உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டி ஜப்பானின் கோபே நகரில் நடந்து வருகிறது. இதில் 100 நாடுகளைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். போட்டியின் 5-வது நாளான நேற்று இந்தியா 3 தங்கப்பதக்கங்களை அறுவடை செய்து அமர்க்களப்படுத்தியது.
ஆண்களுக்கான உயரம் தாண்டுதலில் டி63 பிரிவில் கலந்து கொண்ட இந்திய வீரர் மாரியப்பன் தங்கவேலு 1.88 மீட்டர் உயரம் தாண்டி தங்கப்பதக்கத்தை சொந்தமாக்கினார்.அமெரிக்க வீரர்கள் எஸ்ரா பிரிச் (1.85 மீ.), சாம் கிரேவ் (1.82 மீ.) முறையே வெள்ளி, வெண்கலம் பெற்றனர். ‘
தங்க மகன்’ மாரியப்பனின் சொந்த ஊர் சேலம் மாவட்டம் பெரியவடகம்பட்டியாகும். சிறு வயதில் பள்ளிக்கு சென்ற போது வலது காலில் பஸ் சக்கரம் ஏறி நசுக்கியதால் முட்டிக்கு கீழ் ஊனமடைந்தார். அவரது தாயார் சரோஜா காய்கறி வியாபாரம் செய்து குடும்பத்தை காப்பாற்றினார். வறுமை, ஊனத்தை பின்னுக்கு தள்ளி சாதிக்க வேண்டும் என்ற வெறியுடன் விளையாட்டில் கவனம் செலுத்திய மாரியப்பன் 2016-ம் ஆண்டில் ரியோ பாரா ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்று ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்த்தார். 2020 டோக்கியோ பாரா ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றினார். தொடர்ந்து வீறுநடை போடும் அவருக்கு இன்னொரு மகுடமாக இந்த பதக்கம் அமைந்துள்ளது.