வல்லக்கோட்டை முருகன் கோயிலில் நடிகர் சரவணன் சாமி தரிசனம்
சாமி தரிசனம் செய்த நடிகர் சரவணன்
கோயில் நகரம் என அழைக்கப்படும் காஞ்சிபுரத்தில் பல்வேறு திவ்ய தேசங்களும் பரிகார தளங்களும் அமைந்துள்ளது. இது மட்டும் இல்லாது காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் பல்வேறு அம்மன் ஆலயங்கள் முருகன் ஆலயங்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை. அவ்வகையில் காஞ்சி குமரக்கோட்டம் என அழைக்கப்படும் முருகன் திருக்கோயில், வல்லக்கோட்டை அருள்மிகு ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், குன்றத்தூர் முருகன் திருக்கோயில் ஆகியவை காஞ்சிபுரம் மாவட்டத்தில் மிகவும் புகழ்பெற்ற முருகன் திருத்தலங்கள் ஆகும்.
இங்கு சஷ்டி விரதம், கார்த்திகை மாதம் மற்றும் பிரம்மோற்சவங்கள் சூரசம்ஹாரம் நிகழ்வுகள் என மாதந்தோறும் பல்வேறு சிறப்பு நிகழ்வுகளும் செவ்வாய்க்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் இந்த திருக்கோயிலில் காணப்படும். அவ்வகையில் ஒரகடம் அடுத்த வல்லக்கோட்டை பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடப்பெற்ற இக்கோயில் கருவறையில் முருகப்பெருமான் கம்பீரமாக 7 அடி உயரத்துடன் காட்சியருளுகின்றார்.
இங்கு 6 செவ்வாய்க்கிழமைகள் , 6 வெள்ளிக் கிழமைகள் வந்து வழிபடுவோருக்கு சொந்த வீடு , திருமணம், குழந்தைப் பேறு ஆகியன கிடைப்பதால் விஷேச நாட்களில் இக்கோயிலுக்கு அதிகளவில் பக்தர்கள் வந்து வழிபடுகின்றனர். புராண காலத்தில் பகீரதன் எனும் அரசன் வல்லக்கோட்டைக்கு வந்து முருகப் பெருமானை வழிபட்டு இழந்த அரசாட்சியினை மீண்டும் பெற்றதாகவும் இந்திரன் வந்து பூசித்து இந்திராணியை மணந்ததாகவும் தல வரலாறு கூறுகிறது.
பல சிறப்புகள் பெற்ற இத்திருக்கோயிலில் செவ்வாய்க் கிழமையினை முன்னிட்டு மூலவர் ஶ்ரீ வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கும் உற்சவர் கோடையாண்டவருக்கும் திருநீறு அபிஷேகம் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து கருவறையில் உள்ள ஶ்ரீ வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியசுவாமி சந்தன காப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். உற்சவர் முருகப்பெருமான் இரத்தினாங்கி சேவையில் காட்சியருளினார்.
இந்நிலையில் இன்று இத் திருக்கோயிலில் பிரபல திரைப்பட நடிகர் சரவணன் வருகைதந்து ஆறுமுறை திருக்கோயிலை வலம்வந்து பயபக்தியுடன் முருகப்பெருமானை வழிபட்டார். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார். திருக்கோயில் நிர்வாகத்தின் சார்பில் அவருக்கு பிரசாதம் , முருகர் படங்கள் வழங்கப்பட்டது. சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் செங்கல்பட்டு மற்றும் பிற மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு வந்து நேர்த்திக்கடன் செலுத்தி அரோகரா அரோகரா என்று கோஷமிட்டு வல்லக்கோட்டை முருகப்பெருமானை வழிபட்டனர்.
மேலும் கோயிலுக்கு வந்திருந்த பக்தர்களுக்கு கோடை காலத்தை முன்னிட்டு திருக்கோயில் நிர்வாகத்தின் சார்பில் மோர், குடிநீர் ஆகியன வழங்கப்பட்டன.