அமாசோம விரதத்தின் பலன்கள்

அமாசோம விரதத்தின் பலன்கள்

அரசமரம்.

அமாவாசையும், திங்கள் கிழமையும் சேர்ந்து வரும் நாளில் மேற்கொள்ளப்படும் அமாசோம விரதத்தின் பலன்கள் குறித்து பார்க்கலாம்.

அமாசோம விரதம் ! நம் முன்னோர், மழை தரும் மரங்களையும் தெய்வாம்சமாக நினைத்துப் பூஜித்து வழிபட்டனர் . மரங்களின் அரசனாக விளங்குவது அரசமரம். 'மரங்களில் நான் அரசமரம்' என்று ஸ்ரீ கிருஷ்ணபரமாத்மாவே, கீதையில் அருளுகிறார் என்றால் (அஸ்²வத்த²: ஸர்வவ்ருக்ஷாணாம் தே³வர்ஷீணாம் ச நாரத³:|), அரச மரத்தின் பெருமையினை விவரிக்கத் தேவையில்லை. மரங்களின் அரசன் என்பதாலேயே 'அரசமரம்' என்று அழைக்கப்படும் இம்மரம், கரியமில வாயுவை உள்வாங்கி, மற்ற மரங்களை விடவும் மிக அதிக அளவில் ஆக்ஸிஜனை வெளியிடும் தன்மை படைத்தது. திங்கட்கிழமையும்(சோமவாரம்), அமாவாசையும் சேர்ந்து வரும் தினங்களில், விரதமிருந்து, அரசமரத்தை பிரதட்சிணம் செய்வது கிடைத்தற்கரிய பலன்களைத் தரும்.

இதுவே 'அமாசோம விரதம்' என்று சிறப்பிக்கப்படுகிறது. இந்த நன்னாளில், அரசமரத்தைப் பிரதட்சிணம் செய்து, பின் சிவாலய தரிசனம் செய்வதும், அஸ்வத்த நாராயண பூஜை செய்வதும் மிக விசேஷமாகக் கருதப்படுகிறது. அஸ்வத்த பிரதட்சணம் ! அமாவாசை திதியும் திங்கட்கிழமையும் சேர்ந்து வரும் நாளை அமாசோமவாரம் என்பர். அந்த நாளில் அரச மரத்தை வழிபட்டு வலம் வருதல் சிறப்பாகும். இதையே அஸ்வத்த பிரதட்சணம் என்பார்கள். அஸ்வத்தம் எனில் அரச மரம் என்று பொருள். பிரம்மா, விஷ்ணு, ருத்திரன் என்னும் மும்மூர்த்திகளின் வடிவமே அரச மரம். மரங்களின் அரசனான அரசுக்கு பிப்பலம் என்னும் பெயரும் உண்டு.

அரசங்குச்சிகளைக் கொண்டு ஹோமம் செய்யும்பொழுது அதனிடமிருந்து வெளிவரும் புகை பல நோய்களை நீக்கவல்லது. இது ஹோமம் செய்யும் இடத்தை சுத்தம் செய்வதுடன், அங்குள்ளவர்களின் உடல்நலத்தையும் சீர்படுத்துகிறது. இந்த மரத்தை அஸ்வத்தம் என்றும் கூறுவர். அஸ்வத்தம் என்ற சொல்லிற்கு “இப்புனித மரத்தை வணங்கியவர்களின் பாவங்கள் மறுநாள் இருப்பதில்லை’ என்று பொருளாகும். கபம், பித்தம் போன்ற நோய்களையும் மற்றும் பெண்களுக்கு ஏற்படும் சரும நோய்களையும் போக்கக்கூடிய குளிர்ச்சி தரும் மரம் அரச மரமாகும். மும்மூர்த்திகளின் அருள் நல்கும் அமாஸோமவார பிரதட்சணம்! திங்கட்கிழமையும், அமாவாசையும் ஒன்று சேரும் நாளை பிரதான அமாவாசை என்று நமது சாஸ்திர சம்பிரதாயங்களில் கூறப்பட்டுள்ளது.

அன்றைய தினம் காலையில் அஸ்வத்த மரத்தை (அரச மரம்) பூஜை செய்து 108 முறை வலம் வரவேண்டும். அதிலும் வேம்புடன் சேர்ந்திருக்கும் அஸ்வத்த மர பிரதட்ணம் விசேஷமாகச் சொல்லப்பட்டுள்ளது. இந்த அஸ்வத்த மரத்தின் மகிமையைப் பற்றி பிரம்மாண்ட புராணத்தில் கூறப்பட்டுள்ள சில செய்திகள்: அஸ்வத்த மரத்தின் வேரில் பிரம்ம தேவனும், நடுப்பாகத்தில் விஷ்ணுவும், நுனியில் சூலபாணியும் வசிக்கின்றார்கள். அதன் கிளைகளிலும் இலைகளிலும் சூரியன், இந்திராதி தேவதைகள் வசிக்கின்றனர். தவிர, கோ (பசு), பிராமணர், வேதம், யக்ஞம், சமஸ்த தீர்த்தங்கள், சப்த ஸாகரங்கள் வேரிலும், கிளைகளிலும் வாசம் செய்கின்றார்கள். அதன் மூலஸ்தானத்தை அ காரமாகவும், கிளைகளையும், இலைகளையும் உ காரமாகவும், பூ, பழங்களை ம காரமாகவும் அஸ்வத்த விருட்சம் ஓங்கார ரூபமாக வர்ணிக்கப்பட்டுள்ளது. இது ஒரு கல்ப விருட்சமாகும். எனவே புராணப் பெருமையுடன் சிறப்பாகப் பேசப்படும்.

இந்த அஸ்வத்த மரத்தை அமாஸோமவார னத்தில் காலை நீராடிவிட்டு மரத்தின் அருகில் சென்று அமாஸோமவார புண்யகாலே அஸ்வத்த பிரதக்ஷிணம் கரிஷ்யே' என்று சங்கல்பித்து, 108 முறை வலம் வரவேண்டும். எண்ணிக்கை சரியாக அமைய, பழங்கள், கல்கண்டு, பட்சணங்கள் ஆகியவற்றில் ஏதாவது ஒரு பொருளை மரத்தடியில் ஒவ்வொரு முறை வலம் வரும்போது போட்டு பிறகு முடிவில் அங்குள்ள குழந்தைகளுக்கு கொடுப்பது வழக்கம். மரத்தை வலம் வரும் போது, மூலதோ ப்ரஹ்ம ரூபாய மத்யதோ விஷ்ணு ரூபிணே, அக்ரத: சிவரூபாய வ்ருக்ஷ ராஜாய தே நம: என்று சொல்லவேண்டும். முறைப்படி அஸ்வத்த பிரதட்சணம் செய்வதால் பாபங்கள் விலகும். மும்மூர்த்திகளின் அருள் ஒரு சேர கிடைக்கும்.சந்தான பிராப்தி கிடைக்கும் என்று நமது முன்னோர்கள் அனுபவப் பூர்வமாகக் கண்டறிந்துள்ளனர்.

அரச மரத்தை ஞாயிறன்று வலம் வந்தால் நோய் அகலும்; திங்களன்று வலம் வந்தால் மங்களம் உண்டாகும்; செவ்வாய் தோஷங்கள் விலகும்; புதன் வியாபாரம் பெருகும்; வியாழன் கல்வி வளரும். வெள்ளி சகல சௌபாக்கியங்களும் கிட்டும்; சனி சர்வ கஷ்டங்களும் விலகி மகா லட்சுமியின் அருள் கிடைக்கும். மூன்று முறை வலம் வந்தால் இஷ்ட சித்திகளும்; ஐந்து முறை வலம் வந்தால் வெற்றியும்; ஒன்பது முறை வலம் வந்தால் புத்திர பாக்கியமும்; பதினொரு முறை வலம் வந்தால் சகல பாக்கியங்களும்; நூற்றியெட்டு முறை வலம் வந்தால் அஸ்வமேத யாகம் நடத்திய பலனும் கிடைக்குமென்று நூல்கள் சொல்கின்றன. அமாசோமவார விரதமன்று ஏழைகளுக்கு அன்னதானம் செய்யலாம்; ஆடைகள் வாங்கி வழங்கலாம். அமாவாசையும் திங்கட்கிழமையும் இணைந்து வரும் இந்த அற்புத நாளில் அரச மரத்தை வணங்கி நலம்பெறுவோம்.

Tags

Next Story