5அடி பள்ளத்திற்குள் உள்வாங்கிய தேர்: மீட்கும் பணி தீவிரம்
உள்வாங்கிய தேர்
108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி திருக்கோயிலில் சித்திரைப்பெருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. தமிழ்நாட்டின் மிகப்பெரிய தேர்களில் ஒன்றான இத்தேர் சுமார் 110 அடி உயரமும், 47 அடி அகலமும், 500 டன் எடையும் கொண்ட சாரங்கபாணி கோயில் பெரிய தேரின் தேரோட்டம் வெகுவிமரிசையாக நடைபெற்றது.
அப்போது பிரம்மாண்டமாக அலங்கரிக்கப்பட்ட தேரில் ஸ்ரீதேவி, பூமிதேவி சமேத சாரங்கபாணி சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். தேர் நான்கு வீதிகள் வழியாக வலம் வந்து கொண்டிருந்தது. அப்போது தெற்கு வீதி வழியாக வந்த தேர் ராமசாமி கோவில் அருகே சென்ற போது தேரின் வலதுபுற முன் பக்க சக்கரம் சாலையில் உள்வாங்கி 5அடிக்கு உள்ளே இறங்கியது.
தற்போது 5 ஜேசிபி எந்திரங்கள் உதவியுடன், தேரை ஜாக்கி வைத்து மேலே தூக்கும்பணி நடைபெறுகிறது. தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து சாலையில் புதைந்த தேரை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதனால் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக தேர் நிலைக்கு கொண்டு செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.