கார்த்திகை பிரம்மோற்சவ விழா - பத்மாவதி தாயார் வீதிஉலா !!
கார்த்திகை பிரம்மோற்சவ விழாவை தொடர்ந்து சூரிய, சந்திர பிரபை வாகனங்களில் பத்மாவதி தாயார் வீதிஉலா நடைபெற்றது.
திருப்பதி, ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வருடாந்திர கார்த்திகை பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடந்து வருகிறது. விழாவின் 7-வது நாளான நேற்று காலை 8 மணியில் இருந்து 10 மணிவரை சூரிய பிரபை வாகன வீதிஉலா நடைபெற்றது.
அதில் உற்சவர் பத்மாவதி தாயார் `கோவர்த்தனகிரிதாரி ஸ்ரீகிருஷ்ணர்' அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
அதைத்தொடர்ந்து நேற்று இரவு 8 மணியில் இருந்து 9 மணிவரை சந்திர பிரபை வாகன வீதிஉலா நடந்தது. அதில் உற்சவர் பத்மாவதி தாயார் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்குமாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
வாகன வீதிஉலா முன்னால் மங்கள வாத்தியங்கள் முழங்கின. பக்தி பஜனை பாடல்களை பக்தர்கள் பாடி சென்றனர். மகாவிஷ்ணு, பத்மாவதி தாயார், லட்சுமி தேவியர் வேடமிட்ட பக்தர்கள் ஊர்வலமாக சென்றனர்.