பக்தர்கள் மட்டுமல்ல; பகவானும் கிரிவலம் வரும் திருவண்ணாமலை!

பக்தர்கள் மட்டுமல்ல; பகவானும் கிரிவலம் வரும் திருவண்ணாமலை!

திருவண்ணாமலை தீப திருவிழா 

சிவபெருமான் அருளும் பஞ்ச பூதத் தலங்களில் அக்னி தலமாக விளங்குவது திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில். நினைத்தாலே முக்தி தரும் புண்ணியத் தலமாகப் போற்றப்படுகிறது திருவண்ணாமலை திருத்தலம். இங்கு சிவபெருமானே மலையாக வீற்றிருந்து அருள்பாலிப்பதாக ஐதீகம். எனவேதான், பக்தர்கள் இந்த மலையை வலம் வந்து (கிரிவலம்) சிவபெருமானை வணங்குகின்றனர்.

குறிப்பாக, பௌர்ணமி நாளில் கிரிவலம் வருவது மகத்துவம் வாய்ந்தது. பல்வேறு நகரங்களிலிருந்தும் ஊர்களிலிருந்தும் எண்ணற்ற சித்தர்கள் இந்த புண்ணியத் தலத்துக்கு வந்து வாழ்ந்து சமாதி அடைந்து உள்ளனர். அவர்களில் ரமண மகரிஷி, சேஷாத்திரி ஸ்வாமிகள், விசிறி சாமியார், குரு நமச்சிவாயர், குகை நமச்சிவாயர் போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்களின் சமாதிகள் கிரிவலப் பாதையில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இப்படிப் பல்வேறு சிறப்புகள் வாய்ந்த திருவண்ணாமலையில் பக்தர்கள் மட்டுமல்ல, அண்ணாமலையாரும் வருடத்துக்கு இரண்டு முறை கிரிவலம் வருவதாக ஐதீகம்.அதாவது, கார்த்திகை தீபத் திருநாளுக்கு மறு தினமும், தை மாதம் மாட்டுப் பொங்கல் அன்றும் அண்ணாமலையார் திருவீதி உலாவாக கிரிவலம் வருகிறார்.

திருமஞ்சன கோபுர வீதியின் கடைசியில் உள்ள குமரக் கோயிலில் இந்த இரண்டு நாட்களும் இரவு தங்குகிறார். அதிகாலையில் அபிஷேகம் முடிந்ததும் அண்ணாமலையார் கிரிவலம் புறப்படுகிறார். அச்சமயம் 25 முதல் 30 இடங்களில் மண்டகப்படி நடைபெறும். அஷ்ட லிங்கம் மற்றும் அடி அண்ணாமலை ஆகிய கோயில்களில் அண்ணாமலையார் கிரிவலம் செல்லும்போது தீபாராதனைகள் நடைபெறும். ஒவ்வொரு மாத பௌர்ணமி தினத்தன்றும் கிரிவலம் செல்லும் பக்தர்களிடம் துஷ்ட தேவதைகள் அண்டாமல் இருப்பதற்காகவும், துஷ்ட தேவதைகளை விரட்டுவதற்காகவும் அண்ணாமலையார் இப்படி ஆண்டுக்கு இரண்டு முறை கிரிவலம் வருகிறார் என்பது ஐதீகம்.

Tags

Next Story