ஆங்கிலப் புத்தாண்டுக்கு ஆஞ்சநேயருக்கு 7 டன் மலர்களால் புஷ்பாஞ்சலி

ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு ஆஞ்சநேயருக்கு 7 டன் மலர்களால் புஷ்பாஞ்சலி

உலகப்புகழ் பெற்ற நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயர் சுவாமிக்கு ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு, 7 டன் மலர்களால், புஷ்பாஞ்சலி நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். நாமக்கல் நகரின் மையமான, கோட்டை பகுதியில், ஸ்ரீ நரசிம்ம சுவாமி மற்றும் நாமகிரித்தாயார் கோயில் எதிரில் ஒரே கல்லினால் 18 அடி உயரத்தில் உருவான ஸ்ரீ ஆஞ்சநேயர் கோயில் அமைந்துள்ளது. இங்கு வணங்கிய நிலையில் சாந்த சொரூபியாக ஸ்ரீ ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு இரவு பகல் 24 மணி நேரமும் அருள் பாலித்து வருகிறார்.

தினசரி காலையில் ஆஞ்சநேயருக்கு 1,008 வடை மாலை அலங்காரம் மற்றும் சிறப்பு அபிசேகம் நடைபெறும். நேற்று, ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு, அதிகாலை 3.30 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு வடைமாலை சாத்துபடி செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. பின்னர் நல்லெண்ணெய், சீயக்காய், திருமஞ்சள், 1,008 லிட்டர் பால், தயிர், பஞ்சாமிர்தம், மஞ்சள் சந்தனம், உள்ளிட்ட நறுமணப் பொருட்களால் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. கனகாபிசேகத்துடன் அபிசேகம் நிறைவு பெற்றது. தொடர்ந்து காலை 5 மணிக்கு, நாமக்கல் அருள்மிகு ஆஞ்சநேயர் அபிசேகக் குழு சார்பில், ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு, துளசி, முல்லை, மல்லிகை, அரளி, அல்லி, ரோஜா உள்ளிட்ட பல்வேறு வகையான, சுமார் 7 டன் மலர்கள் சுவாமி மீது கூடை கூடையாக தூவப்பட்டு, சிறப்பு புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, திரை விலக்கப்பட்டு மகா தீபாராதணை நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட தூரம் கியூவில் நின்று சாமி தரிசனம் செய்தனர். நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில் அறங்காவலர்கள் குழு தலைவர் தென்பாண்டியன் நல்லுசாமி, அறநிலையத்துறை உதவி கமிஷனர் இளையராஜா, அறங்கோவலர் குழு உறுப்பினர்கள் டாக்டர் மல்லிகா, சீனிவாசன், செல்வசீராளன், ரமேஷ்பாபு ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Tags

Next Story