ரம்ஜான் - பக்ரீத்...இரண்டு பண்டிகைகளுக்கும் வேறுபாடு என்ன ?

ரம்ஜான் - பக்ரீத்...இரண்டு பண்டிகைகளுக்கும் வேறுபாடு என்ன ?

ஆன்மிகம்

இஸ்லாமியர்களின் மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்றான பக்ரீத் பண்டிகை இந்த ஆண்டு ஜூன் 16 அல்லது ஜூன் 17 ம் தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இதனால் பக்ரீத் பண்டிகையை கொண்டாடுவதற்கு உலகம் முழுவதிலும் உள்ள இஸ்லாமியர்கள் உற்சாகமாக தயாராகி வருகின்றனர். பக்ரீத்தின் மிக முக்கியமான சடங்கு ஆடுகள் பலியிடுவது என்பதால், ஆடு விற்பனையும் உலகம் முழுவதிலும் அதிகரித்து வருகிறது.

ஒவ்வொரு ஆண்டும் இஸ்லாமியர்கள் இரண்டு பண்டிகைகளை மிக முக்கியமானதாக கொண்டாடுகிறார்கள். ஒன்று ரம்ஜான், மற்றொரு பக்ரீத். இவை இரண்டுமே இஸ்லாமியர்கள் மகிழ்ச்சியுடன், இஸ்லாமியர்களின் கடமையாக கொண்டாடப்படும் பண்டிகைகள் ஆகும். இவை இரண்டிற்கும் அப்படி என்ன வேறுபாடுகள் பார்க்கலாம்.

ரம்ஜான் பண்டிகையை ஈத் அல் ஃபிர் என்றும், பக்ரீத் பண்டிகையை ஈத் அல் அதா என்றும் குறிப்பிடுகிறார்கள். அதாவது, ஈத் அல் ஃபிர் என்றால் விரதத்தை நிறைவு செய்யும் திருவிழா என்று அர்த்தம். இது புனித ரமலான் மாதத்தின் இறுதியில் கொண்டாடப்படுவதாகும்.

அதாவது, ரமலான் மாதம் முழுவதும் சூரிய உதயம் துவங்கி, சூரிய அஸ்தமனம் வரை உணவு, தண்ணீர் ஏதும் சாப்பிடாமல் இருந்து, மாலையில் பேரிச்சம்பழம், பழச்சாறு ஆகியவற்றை சாப்பிட்டு விரதத்தை நிறைவு செய்து கொள்வது ஆகும். பரிசுகளை பகிர்ந்து கொள்வது, தான தர்மங்கள் செய்வது ஆகிய நல்லொழுக்கங்களை வளர்க்கும் பண்டிகையாக ஈத் அல் ஃபிர் கொண்டாடப்படுகிறது.

அதே சமயம் ஈத் அல் அதா என்பது தியாகத்தை போற்றும் திருநாளாகும். ஈத் அல் அதா என்ற சொல்லுக்கு தியாக திருவிழா அல்லது தியாக பண்டிகை என்பதாகும். பக்ரா ஈத் என்பதை பக்ரீத் என மாறி குறிப்பிடப்படுகிறது. இஸ்லாமியர்களின் இறை தூதர்களில் ஒருவரான இப்ராஹீம், இறைவன் இட்ட கட்டளையை நிறைவேற்ற தன்னுடைய மகனையே பலியிட துணிந்ததன் தியாகத்தை போற்றும் திருநாளாகும்.

பக்ரீத் பண்டிகை சமயத்தில் தான் இஸ்லாமியர்களின் புனித கடமைகளில் ஒன்றான ஹஜ் யாத்திரையும் இஸ்லாமியர்களால் மேற்கொள்ளப்படுகிறது. பக்ரீத் பண்டிகையின் போது உலகம் முழுவதிலும் உள்ள இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை நடத்தி, குர்பானி எனப்படும் விலங்குகளை பலியிடுவது வழக்கம். பிறகு அந்த இறைச்சியை தங்களின் நண்பர்கள், உறவினர்கள் ஆகியோருடன் பகிர்ந்து கொள்வார்கள்.

இவை இரண்டு பண்டிகைகளுமே தியாகம், பக்தி, பகிர்தல் ஆகியவற்றை வலியுறுத்துவதாக இருந்தாலும் இரண்டும் கொண்டாடப்படுவதன் நோக்கம் வேறாகும். ரம்ஜான், புனித ரமலான் மாதம் திருக்குரானை இறைதூதரம் அருளிய மாதமாக கொண்டாடப்படுகிறது. ஆனால் பக்ரீத், இறை தூதர் இப்ராஹீமின் தியாகத்தை போற்றுவதற்காக கொண்டாடப்படுவதாகும். இதனால் இவை இரண்டுமே இஸ்லாமியர்களுக்கு மிக முக்கியமான பண்டிகைகளாக குறிப்பிடப்படுகின்றன.

ரம்ஜான் பண்டிகையின் போது சேமியா, பேரீச்சம்பழம், நோம்பு கஞ்சி ஆகியவை கட்டாயமாக செய்யப்படுவது உண்டு. அதே போல் பக்ரீத் பண்டிகையின் போது ஒவ்வொரு நாட்டிலும் தயாரிக்கப்படும் உணவு வகைகள் வேறுபடுவதாக இருந்தாலும், விலங்குகளை பலியிடுவது பொதுவானதாகும். பிரியாணி, கபாப் போன்றவைகளும் பெரும்பாலும் தயாரித்து வழங்குவது வழக்கம்.

Tags

Next Story