சபரிமலை ஐயப்பன் கோவிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் !!
ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த 16-ந்தேதி திறக்கப்பட்டு தினமும் பூஜை நடந்து வருகிறது. ஐயப்பனைதரிசிக்க தினமும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். (திங்கட்கிழமையன்று ( 21.10.2024)மாதாந்திர பூஜை நிறைவடைகிறது.
இந்த மாத பூஜையில் சபரிமலையில் வரலாறு காணாத கூட்டத்தால் நிரம்பி வழிகிறது. மாத பூஜை நாட்களில் வழக்கமாக பக்தர்கள் கூட்டம் நடை பந்தல் வரை மட்டுமே இருக்கும். ஆனால் தற்போது பக்தர்கள் சரம் குத்தி வரை (2 கி.மீ தூரத்திற்கு) நீண்ட வரிசையில் தரிசனத்திற்காக காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது.
பொதுவாக மாத பூஜை சமயத்தில் சபரிமலையில் பாதுகாப்பு பணிக்கு குறைவான போலீஸ் மட்டுமே நியமிக்கப்படுவார்கள். அதன்படி தற்போது170 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த போலீசாரால் பக்தர்கள் கூட்டத்தை சமாளிக்க முடியவில்லை.
இதனால் பக்தர்கள் 10 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்ய வேண்டிய நிலை உள்ளது. 18-ம் படிக்கு கீழ் வாவரு நடை, கற்பூர ஆழி மற்றும் மகாகாணிக்கைபெட்டியை சுற்றியுள்ள பகுதியில், எப்போதும் கூட்ட நெரிசல் இருந்து கொண்டே இருக்கிறது.
மாத பூஜையில் வரலாறு காணாத கூட்டம் குவிந்ததை சமாளிக்க முடியாமல் போனதற்கு போதிய பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்படாததேகாரணம் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
இனி மண்டல, மகர விளக்கு சீசனுக்காக அடுத்த மாதம் 15-ந்தேதி சபரிமலை கோவில் நடை திறக்கப்படுகிறது. இந்த சீசன் காலங்களில் தினமும் 80 ஆயிரம் பக்தர்கள் வரை வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
சீசனையொட்டி இந்த ஆண்டு தொடக்கம் முதலே தினசரி 18 மணி நேர தரிசனத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆன்லைன் மற்றும் உடனடி தரிசன முன்பதிவு மூலம்தினசரி 70 ஆயிரமும் மற்றும் உடனடி தரிசனம்மூலம் 10 ஆயிரமும் மொத்தம் 80 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. இதனால் கூட்டநெரிசலை தவிர்க்கலாம் என திருவிதாங்கூர் தேவஸ்தானம் சொல்கிறது.
சீசன் காலத்தில் நிம்மதியாக ஐயப்பனை தரிசிக்க முடியாது என நினைத்த பக்தர்கள், முன்கூட்டியே இந்த ஐப்பசி மாத பூஜைக்கு ஒருசேர ஐயப்பனை தரிசனம் செய்ய குவிந்தனர் .இதனால் மாத பூஜையில் வரலாறு காணாத பக்தர்கள் கூட்டம் அலைமோதியது என்பது குறிப்பிடத்தக்கது