ஸ்ரீ விசாலாட்சி அம்பிகா சமேத ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோவில் கும்பாபிஷேகம்
கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்டவர்கள்
மதுரை தெற்காவணி மூல வீதியில் அமைந்துள்ள ஆயிர வைசிய காசுக்கார செட்டியார்களுக்கு பாத்தியமான மதுரை வெள்ளியம்பலம் திருப்பரங்குன்றம் ஒடுக்கம் வகையறா தர்ம டிரஸ்டிக்கு சொந்தமான மாணிக்க மண்டபத்தில் எழுந்தருளி இருக்கும் ஸ்ரீ விசாலாட்சி அம்பிகா சமேத ஸ்ரீ காசி விஸ்வநாதர் திருக்கோவில் திருக்குட நன்னீராட்டு பெருவிழா கடந்த 14ஆம் தேதி கணபதி ஹோமம் விக்னேஸ்வர பூஜை யாகசாலை வேள்விகளுடன் துவங்கியது.
திருப்பரங்குன்றம், மீனாட்சி அம்மன் திருக்கோவில் தலைமை அர்ச்சகர் ராஜா பட்டர் தலைமையில் நடைபெற்ற நான்கு கால யாகசாலை பூஜைகளை தொடந்து திருக்குட நன்னீராட்டு பெருவிழாவை முன்னிட்டு கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து விசாலாட்சி அம்பிகா காசி விஸ்வநாதர் ஸ்வாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் தீபாராதனைகளும் நடைபெற்றன. இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
கும்பாபிஷேக விழா ஏற்பாடுகளை தலைவர் அதிசேகரன் துணைத் தலைவர் ஜெயக்குமார் செயலாளர் பத்மநாபன் பொருளாளர் பாபு டிரஸ்டி உறுப்பினர்கள் செந்தில்குமார் குட்டி வெங்கடாசலம் சீனிவாசன் உட்பட குழுவினர்கள் சிறப்பாக செய்திருந்தனர்