தஞ்சை பெருவுடையார் கோயில் !

தஞ்சை பெருவுடையார் கோயில் !

தஞ்சை பெருவுடையார் கோயில்

உலக பிரசித்தி பெற்ற தஞ்சை பெருவுடையார் கோயிலை ராஜராஜ சோழன் கட்டினான். புவி அதிர்வுகளாலோ இடி மின்னல்களாலோ பாதிப்பு ஏற்படாத அளவிற்கு தொழில்நுட்பத்துடன் கட்டப்பட்டுள்ளது. அதனால் தான் பெருவுடையார் கோயில் இன்றும் நிமிர்ந்து நிலைத்து நிற்கிறது .இக் கோயில் ஒரு லட்சத்து 30 ஆயிரம் டன் எடை கொண்ட கிரானைட் கற்களால் கட்டப்பட்டது. வரலாற்று ஆசிரியர்களும் கட்டடக்கலை நிபுணர்களும் தங்கள் தேடலின் நிறைவான இடமாக இதை கருதுகிறார்கள். 1000- ஆண்டுகளைக் கடந்து தமிழினத்தில் பெருமைமிகு அடையாளமாக உயர்ந்து நிற்கும் இந்த தஞ்சை பெரிய கோயில் 82 அடி சதுர மேடை ஒன்றை எழுப்பி அதன் மீது 13 அடுக்குக் கொண்ட கோபுரம் ஒன்று இக்கோயிலில் எழுப்பப்பட்டுள்ளது. இங்குள்ள கோபுரத்தின் உயரம் 216 அடி. வெளிசுவரும் விமானத்தின் சுவரும் மேலே ஒன்று சேரும் இடத்தில் 80 டன் எடையுள்ள சதுர கருங்கல்லில் பிரம்மாந்தர தளம் அமைகிறது. மிகப் பெரிய உயர்ந்த விமானத்தைக் கொண்ட முதல் கோயில் இதுதான் . கோபுரத்தின் உள்ள லிங்கமும் பெரியது .நந்தியும் பெரியது. தமிழகத்தில் வேறு எங்கும் இவ்வளவு பெரிய அளவு சிற்பங்கள் கிடையாது .ஒரே கல்லால் ஆனவை இவை. மிக கம்பீரமாக விளங்கும் இந்த நந்தி பார்ப்பவர்களின் கருத்தை கவரும் வண்ணம் உயிருள்ள நந்தி போல் காட்சியளிக்கிறது. கருவறை கோபுர நிலைகளின் உள்ளே ஆடவல்லான் ஆடிய 108 கரணங்களுள் 81 மட்டும் உள்ளன. இதன் சுற்றுச்சுவர்களில் 10 ஆம் நூற்றாண்டு சோழர் கால ஓவியங்கள் கிடைத்துள்ளன. கோயிலே கோட்டை போல காணப்படுகிறது .கோயிலை சுற்றி அகழி இருக்கிறது. அகழிக்கு கல்லணை கால்வாயில் இருந்து தண்ணீர் வருகிறது .திருவிளையாடல் புராணத்தில் கூறப்பட்டுள்ள கதைகளை சிற்ப வடிவிலும், சித்திரங்களாகவும் அழியாநிலையில் நிலைப்படுத்திய திருக்கோயில் இதுதான். ஆடல்கலை, நாடகக்கலை, சிற்பக்கலை, சித்திரக்கலை, கட்டிடக்கலை, முதலான கலைகளை வளர்த்த இக்கோயிலில் வேலை செய்த கணக்கர்கள், இசையாளர்கள், நாட்டியம் ஆடுபவர்கள், பாட்டு பாடுபவர்கள், வீணை வாசிப்பவர்கள், உடுக்கை அடிப்பவர்கள், பக்கவாத்தியம் இசை போர், என அனைத்து தரப்பினரின் பெயர்களையும் பொறித்துள்ளனர். இக்கட்டிடக் கலை ஒரு சுற்றுலா தலமாகும்.

Tags

Next Story