அஸ்தினாபுரத்தில் 23 அடி உயர முருகன் கோயிலில் திருத்தேரோட்டம்

அஸ்தினாபுரத்தில் 23 அடி உயர முருகன் கோயிலில்  திருத்தேரோட்டம்

தேரோட்டத்தில் கலந்து கொண்டவர்கள் 

அரியலூர் அருகே அஸ்தினாபுரத்தில் 23 அடி உயர முருகன் கோயிலில் திருத்தேரோட்டம் விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

சித்ரா பெளர்ணமியை முன்னிட்டு அஸ்தினாபுரம் கிராமத்திலுள்ள 23 அடி உயர முருகன் கோயிலில் நடைபெற்ற திருத்தேரோட்ட விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர்.

அரியலூர் அருகே உள்ள அஸ்தினாபுரம் கிராமத்தில் மலேசியாவில் உள்ளது போல் 23 அடி உயரமுள்ள முருகன் சிலை உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் பெளா்ணமி அன்று திருத்தேரோட்ட நிகழ்ச்சி விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இவ்வாண்டு திருவிழா கடந்த 15 ஆம் தேதி காப்பு கட்டுதல் மற்றும் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழாவில் தினந்தோறும் சுப்பிரமணியசுவாமி பல்வேறு வாகனங்களில் விதியுலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். சித்ரா பௌர்ணமி ஆன இன்று 10ம் நாள் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம்வெகு விமர்சையாக நடைபெற்றது. காலையில் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு பலவித திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, மாலை மற்றும் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டது.

இதனையடுத்து வள்ளி, தெய்வானை சமேத சுப்ரமணிய சுவாமி திருத்தேரில் எழுந்தருளினார். முன்னாள் அரசு கொறடா தாமரை. ராஜேந்திரன், முன்னாள் பாமக அரியலூர் மாவட்ட செயலாளர் சின்னதுரை, அரியலூர் மாவட்ட கூட்டுறவு பால்வளத்துறை தலைவர் பாஸ்கர் மற்றும் ஊரின் முக்கிய பிரமுகர்கள் பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க சுப்பிரமணிய சுவாமி முக்கிய வீடுகளின் வழியே வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். நாளை மஞ்சள் நீராட்டு விழா விடும் சித்ரா பௌர்ணமி ஆண்டு பெருவிழா நிறைவடைகிறது. 23 அடி உயர முருகன் சிலை முன்பு பெரும்பாலான பக்தர்கள் தாங்கள் மற்றும் தங்கள் குழந்தைகளுடன் நின்று செல்பி எடுத்து மகிழ்ந்தனர்..

Tags

Next Story