திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில்!

அருணாச்சலேஸ்வரர் கோயில்
அண்ணாமலை பூவார் மலர் கொண்டு அடியார் தொழும் பெருமை உடையது. இங்குள்ள அண்ணாமலையார் கோவில் ராஜேந்திர சோழன் காலத்திற்கு முன்னரே இருந்ததை கல்வெட்டுகளால் அறிய முடிகிறது. இத்தலம் பஞ்சபூதங்களில் நெருப்புக்குரிய தலமாகும். கி.பி. 1516 இல் ஆயிரம் கால் மண்டபத்தையும், திருக்குளத்தையும் ,11 நிலை கோபுரத்தையும், பல்வேறு திருப்பணிகளையும், கிருஷ்ணதேவராயர் செய்தமையை கல்வெட்டுகளால் அறிய முடிகிறது .திருவண்ணாமலை சோனாசலம், சோனகிரி, அருணாச்சலம், அருணகிரி, என பல பெயர்களால் அழைக்கப்படுகிறது. இச்சோண சைலம் சிவப் பரம்பொருள் சோதி வடிவாக தோன்றிய மலையாகும். வல்லாளன்கோபுரம், சக்தி விலாசம், கிளி கோபுரம் கல்யாண மண்டபம், முதலியன காணத்தக்கன. இக்கோயில் உள்ளும் வெளியிலுமாக மலைப்பகுதிகளிலும் 360 தீர்த்தங்கள் உள்ளன. இவற்றில் முக்கியமான தீர்த்தங்கள் சிவகங்கை, பிரம்ம தீர்த்தம், அக்னி தீர்த்தம், இந்திர தீர்த்தம் முதலியனவாகும். 24 ஏக்கர் நிலப்பரப்பில் இக்கோவில் அமைந்துள்ளது. ஆறு பிரகாரங்கள் (கிரிவலப் பாதையை சேர்த்தால் ஏழு பிரகாரங்கள்) ஒன்பது கோபுரங்களுடன் அழகுற அமைக்கப்பட்டுள்ளது. கோவில் முன்புள்ள ராஜகோபுரம் 217 அடி உயரத்தில் 11 நிலைகளுடன் காட்சியளிக்கிறது. இக்கோவிலில் சுவாமிக்கு இடதுபுறத்தில் அம்பாளுக்கு தனி கோயில் உள்ளது. கோவிலில் ஏராளமான சிற்பங்களும், கல்வெட்டுகளும் உள்ளன. சாஸ்திரத்தில் உள்ள தாண்டவ இலட்சணம் எனப்படும் 108 நாட்டிய நிலைகளை விளக்கும் சிற்பங்கள் அற்புதம். கோவில் வளாகத்தில் அண்ணாமலையாரின் பாதம் உள்ளது. ராஜகோபுரம் வழியாக உள்ளே நுழைந்தால் வலது புறம் ஆயிரம் கால் மண்டபமும்,பாதாள லிங்கேஸ்வரர் கோவிலும் உள்ளது. இடதுபுறம் முருகப்பெருமான் கோவில் கொண்டுள்ளார். 3-ஆம் கோபுரத்தை தாண்டி சென்றால் சுவாமி சன்னதியும், அம்பாள் சன்னதியும் உள்ளன. இக் கோயிலின் தல விருட்சம் மகிழ மரம் ஆகும்.