திருவாரூர் தியாகராஜர் கோயில் !!!
தியாகராஜர் கோயில்
இந்தியாவில் உள்ள மிகப்பெரிய கோயில்களில் தியாகராஜர் கோயிலும் ஒன்று .திருவாரூரையும், தியாகராஜர் கோயிலையும் பிரித்து வரலாறே எழுத முடியாது. இந்த ஊரின் சிறப்பை பற்றி சுந்தரர் தேவாரத்தில் "திருவாரூரில் பிறந்தார்கள் எல்லோருக்கும் அடியேன்" என்று கூறுகிறார். 64 சக்தி பீடங்களில் திருவாரூர் முக்கியமான ஊர்.
இக்கோயிலில் கமலாம்பிகை ஞானசக்தியாகவும், கொண்டி இச்சா சக்தியாகவும், வடிவு கொண்டு அருள் புரிகிறாள். திருஞானசம்பந்தர் ,அப்பர் ,சுந்தரர், மாணிக்கவாசகர் ,ஆகிய நால்வராலும் பாடப்பெற்றது திருவாரூர். 330 தேவாரப் பாடல்களும் திருவாசகப் பாடல்களும் உள்ளன. இது தவிர திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, பெரியபுராணம், பன்னிரு திருமுறைகளிலும் போற்றப்படுகிறது. 63 நாயன்மார்களில் இருபத்துமூவர்க்கு தொடர்புடைய தலமா கும் . இவ்வாலயம் கோயில்களின் கூடாரம் என்று அழைக்கப்படுகிறது.
9 ராஜகோபுரங்கள் ,என்பது விமானங்கள் ,பன்னிரண்டு பெரிய மதில்கள், 13 மண்டபங்கள், 15 தீர்த்த கிணறுகள் ,மூன்று நந்தவனங்கள்,மூன்று பெரிய பிரகாரங்கள், நூற்றிற்கும் மேற்பட்ட சன்னதிகள் ஆகியவற்றுடன் இத் திருக்கோயில் பிரம்மாண்டமாக பரந்து விரிந்து சிறப்பாக அமைந்துள்ளது. அருள்மிகு தியாகராஜ ஸ்வாமி கருவறை விமானத்துக்கு தங்கத்தகடு போர்த்திய முதலாம் ராஜேந்திரன் குடமுழுக்கும் செய்வித்ததாக இக்கோயிலின் கல்வெட்டு குறிப்பிடுகிறது.
இக்கோயிலில் உள்ள ஆயிரங்கால் மண்டபம் ,கல் தூண்களை மட்டுமே உடையது. இம்மண்டபத்தை சேக்கிழார் கட்டியுள்ளார் .கண்டீசர் இருக்கும் இடத்தில் எமன் இருப்பதும், நின்ற நிலையில் நந்தி அமர்ந்திருப்பதும் இக்கோயிலின் பிற சிறப்புகள் ஆகும். இக்கோயிலில் உள்ள தியாகராசருடைய 'அசபா நடனம்' இவ்வூர் திருவிழாக்களில் சிறப்பாக நடைபெறுகிறது.
இக்கோயிலில் உள்ள சித்தீஸ்வரம், மேதா தட்சிணாமூர்த்தி, சன்னதியில் தருமபுர ஆதின நிறுவனர் உபதேசம் பெற்றதாக கருதப்படுகிறது. 17 ஆம் நூற்றாண்டில் தஞ்சையை ஆண்ட மன்னன் சமாஜி திருவாரூர் தியாகராஜர் மீது தமிழில் பல நூறு கீர்த்தனைகள் பாடியுள்ளார் .இவரும் இவருக்கு பின்னர் முதல் சரபோஜியும் ஆண்டபோது திருவாரூரில் மன்னரின் பிரதிநிதியாக சாமந்தனார் ஒருவர் பணிபுரிந்தார்.
அவருடைய மந்திரியாய் பணிபுரிந்த சிறந்த ஓவியரான சிங்காதனம் வரைந்த ஓவியங்கள் கோயிலின் மண்டபத்தில் இன்றும் உள்ளது. அதன் வாயிலாக 17ம் நூற்றாண்டில் ஆரூர் திருக்கோயில் எப்படி திகழ்ந்துள்ளது என்றும் ஆரூர் மக்களின் பண்பாடு, அவர்களின் இயல்,இசைக்கூத்துகள் பற்றி விளக்கமாக நாம் காண முடிகிறது.