ஜெயந்தியன்று நாமக்கல் ஆஞ்சநேயருக்கு வடை மாலை அலங்காரம் ரத்து

ஜெயந்தியன்று நாமக்கல் ஆஞ்சநேயருக்கு வடை மாலை அலங்காரம் ரத்து

ஜெயந்தியன்று நாமக்கல் ஆஞ்சநேயருக்கு 1 லட்சத்து 8 வடை மாலை அலங்காரம் ரத்து

ஜெயந்தியன்று நாமக்கல் ஆஞ்சநேயருக்கு 1 லட்சத்து 8 வடை மாலை அலங்காரம் ரத்து

நாமக்கல்லில் வரும் ஜன.11 ஆம் தேதி ஆஞ்சநேயர் ஜெயந்தி விழாவில், சுவாமிக்கு 1 லட்சத்து 8 வடைமாலை சாத்துப்படி செய்வதைத் தவிர்க்க கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளதால் பக்தர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். நாமக்கல் நகரின் மையப்பகுதியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ ஆஞ்சநேயர் கோயில் அமைந்துள்ளது. 18 அடி உயரத்தில், கைகூப்பி வணங்கிய கோலத்தில் சுவாமி பக்தர்களுக்கு இரவு பகல் 24 மணி நேரமும் அருள்பாலித்து வருகிறார். தமிழகம் மட்டுமின்றி, வட மாநிலங்களில் இருந்தும், வெளி நாடுகளில் இருந்தும் தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு வந்து ஆஞ்சநேயரை தரிசனம் செய்து வருகின்றனர். தினசரி காலை 9 மணிக்கு ஆஞ்சநேயருக்கு 1,008 வடை மாலை சாத்துபடி செய்யப்படும். பின்னர் 10 மணிக்கு அபிசேகம் நடைபெறும். மதியம் 1 மணியளவில் தங்கக்கவசம், வெள்ளிக்கவசம், முத்தங்கி, மலர் அங்கி உள்ளிட்ட சிறப்பு அலங்காரம் நடைபெற்று, தீபாராதணை நடைபெறும். ஒரு நாளில் ஒரு முறை மட்டுமே சாமிக்கு வடை மாலை சாத்துபடி மற்றும் அபிசேகம் நடைபெறும்.

மார்கழி மாதம் அமாவாசை தினத்தில் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில், கடந்த 2013 முதல் ஒவ்வொரு ஆண்டும் ஆஞ்சநேயர் ஜெயந்தி அன்று சுவாமிக்கு, அதிகாலை 5 மணிக்கு 1,00,008 வடைமாலை சாத்துபடி செய்யப்பட்டு தீபாராதனை செய்ப்படும். பின்னர் பக்தர்களுக்கு வடை பிரசாதம் வழங்கப்படும். 1 லட்சத்து 8 வடை தயாரிப்பதற்காக, திருச்சியில் இருந்து ரமேஷ் என்பவரது தலைமையில், 30-க்கும் மேற்பட்ட பட்டாச்சாரியார்கள் நாமக்கல் வந்து, ஆஞ்சநேயர் கோயில் மண்டபத்தில் வடைகளை தயார் செய்வார்கள். பின்னர் வடைகள் மாலையாக கோர்த்து ஆஞ்சநேயருக்கு அணிவிக்கப்படும். வடை மாலை சாத்துபடி கட்டளைதாரர்கள் மூலமே செய்யப்பட்டது. இந்த கட்டளைக்கு ரூ. 5 முதல் 7 லட்சம் வரை செலவு ஆகும். ஆரம்பத்தில் நாமக்கல்லைச் சேர்ந்த பிரபல வக்கீல் ஒருவர் வடைமலைக்கான செலவை ஏற்று உபயதாரராக இருந்தார்.

பின்னர், நாமக்கல் பரமத்தி ரோடு பகுதியை சேர்ந்த சிலர் கூட்டாக சேர்ந்து வடை மாலை செலவை ஏற்றுக்கொண்டனர். கடந்த 2 ஆண்டுகளாக தி.மு.க. பிரமுகர்கள் இதற்கு கட்டளைதாரர்களாக இருந்தனர். இந்த நிலையில் வரும் ஜன. 11ம் தேதி நடைபெற உள்ள ஆஞ்சநேயர் ஜெயந்தி விழாவிற்கு 1 லட்சத்து 8 வடை மாலை சாத்துபடிக்கு கட்டளைதாரர் யாரும் முன்வரவில்லை என்று கூறப்படுகிறது. மேலும், வழக்கமாக நாள்தோறும் கோயிலில் உள்ள மடப்பள்ளியில்தான், சாமிக்கு வடை தயார் செய்து அணிவிப்பார்கள். ஆஞ்சநேயர் ஜெயந்திக்கு 1 லட்சத்து 8 வடை தயாரிக்க வேண்டி உள்ளதால், கோயில் மண்டபத்தில், 3 நாள்கள் வடைகளை தயார் செய்து அவற்றை சுவாமிக்கு சாத்துபடி செய்வது ஆகம முறைக்கு எதிரானது என்று கோயில் பட்டாச்சாரியார்கள் சிலர், கோயில் நிர்வாகத்திடம் கூறியதாக சொல்லப்படுகிறது. இதைக் கருத்தில் கொண்டு, வருகிற ஜன. 11ம் தேதி, ஆஞ்சநேயர் ஜெயந்தி விழாவில், கோயில் மடப்பள்ளியில் தயாரித்து, குறைந்தபட்சம் 5,000 முதல் 10,000 வடைகளை மட்டும் சாத்துபடி செய்யப்படும் என கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

Tags

Read MoreRead Less
Next Story