வடலூர் ராமலிங்கனார் !

வடலூர் ராமலிங்கனார் !

வடலூர் ராமலிங்கனார்

ராமலிங்கனார் வள்ளலார் ஆகவும் ,சமயக்குரவராகவும்,புலவராகவும்,புரட்சியாளராகவும் ,விளங்கியவர் .1823 ஆம் ஆண்டு கடலூர் மாவட்டத்தில் உள்ள மருதூர் என்னும் ஊரில் ராமையா பிள்ளை- சின்னம்மாள் என்பவருக்கு மகனாக அவர் பிறந்தார். இளமையிலேயே தந்தையை இழந்த அவர் தன் சகோதரன் ஆதரவில் வளர்ந்தார். பள்ளி படிப்பில் போதிய கவனம் செலுத்தாத காரணத்தினால் அவருடைய சகோதரரின் கோபத்திற்கு அடிக்கடி ஆளாவார். எல்லா வகை உயிரிடத்தும் பேரன்பும், இரக்கமும் கொண்டிருந்த ராமலிங்கனார், உலகத்தை சாதி சமய வேறுபாடற்ற ஒரே சமுதாயமாக மாற்ற வேண்டும் என்று கனவு கண்டார். அவர்தம் கொள்கைகளை நிறைவேற்ற சத்திய ஞான சபை, சத்ய தர்மசாலை, சமரச சன்மார்க்க சங்கம் என்ற மூன்றையும் உருவாக்கினார். வடலூரில் உள்ள சத்திய ஞான சபை தாமரை வடிவில் என் கோண முடைய தாய் புதிய முறையில் கண்ணையும், கருத்தையும் கவர்ந்து காட்சியளிக்கிறது. அதில் இறைவனை ஏழு திரைகள் விலக்கி ஒளி வடிவாய் காணும்' ஒளி வழிபாடு' நடைபெற்று வருகிறது. தைப்பூசத்தில் இந்த வழிபாடு நடப்பதே ஒரு தனி சிறப்பாகும்.வடலூர் அருகில் மேட்டுக்குப்பத்தில் தங்கி இருந்த மனைக்கு சித்தி வளாகம் என்பது பெயர். எளிய குடில் வடிவில் அது இன்றும் திகழ்கிறது. ராமலிங்க அடிகள் தம் வாழ் நாளின் இறுதியில் ஒருநாள் சித்தி வளாகத்தில் அறைக்குள் புகுந்து தாழிட்டுக் கொண்டதாகவும் ,அதன் பிறகு அவர் வெளியே வரவில்லை என்பதாகவும் சொல்லப்படுகிறது. 'மரணமில்லா பெருவாழ்வு வாழலாம் கண்டீர்' என்ற சாகா கலையை உலகிற்கு அறிவுறுத்திய அடிகளார் சாகா பெருநிலையை எய்தினார். ராமலிங்க அடிகளாரின் மாணவர்களுள் ஒருவர் தொழுவூர் வேலாயுதம் முதலியார் .இவர் அடிகளார் பாடிய பாடல்களை எல்லாம் "திருவருட்பா" என்னும் பெயரில் தொகுத்துள்ளார் .அருட்பாவில் இயல் தமிழ் பாக்களோடு கீர்த்தனம், கண்ணி, கும்மி, முதலிய இசைத்தமிழ் பாக்களும் உள்ளன .சீவகாருண்ய ஒழுக்கம், மனுமுறை கண்ட வாசகம் ,என்னும் உரைநடை நூல்களையும் அடிகளார் எழுதியுள்ளார்.


Tags

Next Story