முருகன் சிவபெருமானின் இடது காதில் உபதேசித்தது ஏன்?
முருகன் கோயில்
சுவாமி மலை அறுபடை வீடுகளில் ஒன்று. முருகன் தந்தைக்கே பிரணவப் பொருளை உபதேசித்த தலம் என்பதால், இங்கே தகப்பன் சுவாமியாக அருள்கிறார் என்பதை அறிவோம். வேதம் முதலான சகலத்துக்கும் மூலம் சிவம். அவர் ஏன் பிள்ளை யிடம் பிரணவப் பொருளை உபதேசமாகப் பெறவேண்டும்.
அந்த உபதேசத்தையும் முருகன் ஏன் சிவனாரின் இடது செவியில் உரைக்க வேண்டும். வலது செவியில் உரைத்திருக்கலாம் அல்லவா... ஏன் அப்படிச் செய்யவில்லை? அதுபற்றி சிலிர்ப்பூட்டும் கதை ஒன்று உண்டு. ஒரு முறை ‘பிருகு’ மகரிஷி தீவிர தவத்தில் ஆழ்ந்தார். தனது தவத்துக்குத் தடை ஏற்படுத்துபவர் எவராக இருந்தாலும், அவர்கள் தம் சிறப்பை இழப்பார்கள் என்று ஆணையிட்டிருந்தார். நெடுங்காலம் நீடித்தது பிருகு முனிவரின் தவம்.
அதனால் அகில உலகமும் தகித்தது. தேவர்கள் அனைவரும் சிவனாரைச் சரணடைந்தனர். சிவபெருமான் பிருகு முனிவரின் தலையில் கை வைத்து தகிப்பை கட்டுப்படுத்தினார். அதனால் முனிவரின் தவம் கலைந்தது. முனிவரது ஆணைப்படி சிவனார் பிரணவ மந்திரத்தை மறந்தார். இதன் பிறகு, பிரம்மனுடன் முருகப் பெருமான் நிகழ்த்திய அருளாடலின் போது, அவரிடமே பிரணவப் பொருள் உபதேசம் பெற்றார் ஈசன் என்கிறது புராணம். தந்தைக்கு வலக் காதில் பிரணவப் பொருள் உபதேசித்த வேலவன், தன் தாயாகிய பராசக்தியும் அதன் அர்த்தத்தை அறிய வேண்டும் என்பதற்காக சிவனாரின் இடக் காதிலும் உபதேசம் செய்தாராம்.
இங்கே சுவாமிநாத சுவாமி, கருவறையில், அகரம்- உகரம்- மகரம்- நாதம்- பிந்து... என ஐவகையான ஓங்காரத்தின் உருவினனாக, மெய்ஞான குருவாக அருள்பாலிக்கிறார். அவரை உன்னிப்பாகக் கவனித்தால்,
அவர் எழுந்தருளியுள்ள பீடம், சிவ லிங்கத்தின் ஆவுடையாராகவும் முருகன் லிங்கத்தின் பாணமாகவும் காட்சியளிப்பதைக் காணலாம். இது, ‘ஈசனே முருகன்; முருகனே ஈசன்!’ என்ற தத்துவத்தை உணர்த்துவதாக உள்ளது.