கவர்னர் ரவி, உளவுத்துறை அளித்த அறிக்கை; கூட்டணி முறிவுக்கு காரணமா?

கவர்னர் ரவி, உளவுத்துறை அளித்த அறிக்கை; கூட்டணி முறிவுக்கு காரணமா?

கூட்டணி முறிவு

அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி முறிவுக்கு தமிழக கவர்னர் ரவி மத்திய உளவுத்துறை கொடுத்த சில புள்ளி விபரங்களும் காரணம் என தகவல் வெளியாகி உள்ளது.

தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து பா.ஜ.,வுக்கு அடுத்த பெரிய கட்சியாக இருந்த அ.தி.மு.க., விலகி கொண்டது. தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலைக்கும் அ.தி.மு.க., தலைமைக்கும் இடையே ஏற்பட்ட மோதல் கூட்டணி முறிவுக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, தங்கள் கட்சியையும் கட்சி தலைவர்களையும் விமர்சித்ததால் கூட்டணியில் இருந்து விலகும் முடிவை எடுத்ததாக அ.தி.மு.க., அறிவித்துள்ளது. பா.ஜ., தேசிய தலைவர்கள் குறித்தோ, பிற பா.ஜ.,வினர் மீதோ எந்த குற்றச்சாட்டும் சுமத்தவில்லை.

அதேநேரம் அண்ணாமலை விவகாரத்தை விட கவர்னர் ரவி மற்றும் மத்திய உளவுத்துறை தரப்பில் அளிக்கப்பட்ட சில புள்ளி விபரங்கள் அடிப்படையில் பா.ஜ., தேசிய தலைமை, அதிக தொகுதிகளை கேட்டதே கூட்டணி முறிவுக்கு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. இது குறித்து பா.ஜ., வட்டாரங்கள் கூறியதாவது:

அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி செப்.14ம் தேதி டில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார். அதற்கு முன்பாக தமிழக கவர்னர் ரவி டில்லி சென்றிருந்தார். அவர் அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி தொடர்பாக, சில தகவல்களை தெரிவித்துள்ளார்.

மத்திய உளவுத்துறை அறிக்கை ஒன்றை அளித்துள்ளது. அதில் 2014 லோக்சபா தேர்தலில் பா.ஜ., தலைமையில் அமைந்த கூட்டணி தமிழகத்தில் இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றது. அ.தி.மு.க., கூட்டணி 37 இடங்களில் வென்றது. தி.மு.க., கூட்டணி எதிலும் வெற்றி பெறவில்லை.

ஜெயலலிதா இருந்தபோதே பா.ஜ., கூட்டணி இரண்டு இடங்களில் வென்றது. அவரது மறைவுக்கு பிறகு, 2019 லோக்சபா தேர்தலில் அ.தி.மு.க., கூட்டணியில் பா.ஜ., இணைந்தது. இக்கூட்டணி ஒரு தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றது.

ஏனெனில் அப்போது லோக்சபா தேர்தலுடன் 22 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்தது. அதில் கணிசமான வெற்றியை பெற்றால் மட்டுமே ஆட்சியை தக்க வைக்க முடியும் என்ற நிலை இருந்தது.

இதன் காரணமாக பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க., சட்டசபை இடைத்தேர்தலில் அதிக கவனம் செலுத்தியது. லோக்சபா தேர்தலில் கவனம் செலுத்தவில்லை

இந்தத் தேர்தலில் ஒன்பது சட்டசபை தொகுதிகளில் அ.தி.மு.க., வென்று ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது. ஆனால் லோக்சபா தொகுதிகளில் ஒரு இடத்தில் மட்டும் அ.தி.மு.க., வென்றது. அதன் கூட்டணி கட்சிகள் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை.

அடுத்து 2021 சட்டசபை தேர்தலில், அ.ம.மு.க.,வை சேர்த்துக் கொள்ள வேண்டும் என பா.ஜ., கூறியதை பழனிசாமி ஏற்கவில்லை. இதனால் ஆட்சியை இழக்க நேரிட்டது. பழனிசாமியை பொறுத்தவரை, தன் நலனை மட்டும் பார்க்கிறார். தற்போதும் அவர் பா.ஜ., கூட்டணியை விட காங்கிரஸ் கூட்டணியை அதிகம் விரும்புகிறார். லோக்சபா தேர்தல் வெற்றியை விட அடுத்து வரும் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று முதல்வராவதிலே கவனமாக உள்ளார். அவரை நம்பி கூட்டணி வைத்து போட்டியிட்டால் வெற்றி வாய்ப்பு குறைவு என, அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதைத் தொடர்ந்து அமித்ஷா தரப்பில் 'லோக்சபா தேர்தலில் 25 தொகுதிகளை எங்களிடம் கொடுங்கள். அதை கூட்டணி கட்சிகளுக்கு, நாங்கள் பிரித்து கொடுக்கிறோம். தினகரன் பன்னீர்செல்வம் ஆகியோரையும் கூட்டணியில் சேர்த்துக் கொள்வோம்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை பழனிசாமி தரப்பு ஏற்கவில்லை. இதுவே கூட்டணி முறிவுக்கு முக்கிய காரணம்.இவ்வாறு, பா.ஜ., வட்டாரங்கள் கூறின.

Tags

Read MoreRead Less
Next Story