கூட்டணி முறிவு அறிவிப்பு; ஒரு வாரமாக தயாரான பழனிசாமி

கூட்டணி முறிவு அறிவிப்பு; ஒரு வாரமாக தயாரான பழனிசாமி

பொதுச்செயலர் பழனிசாமி.

பா.ஜ.,வுடன் கூட்டணி வேண்டாம் என முடிவெடுப்பதற்கு முன், நிறைய விஷயங்கள் குறித்து, கட்சியின் முக்கிய தலைவர்களுடன் ஆலோசித்துள்ளார், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி.

பா.ஜ.,வுடனான கூட்டணி முறிவை அறிவிப்பது என, ஒரு வார காலத்துக்கு முன்பே, பழனிசாமி தீர்மானித்து விட்டார். அதை தன்னுடைய ஆத்மார்த்த நண்பரும், சேலம் புறநகர் மா.செ.,வுமான இளங்கோவனிடம் சொல்லி விட்டார்.

பழனிசாமியின் ஒவ்வொரு அசைவுக்கும், ஒரு அர்த்தம் உண்டு என, வெளிப்படையாகவே சொல்லும் இளங்கோவன், பா.ஜ.,வுடனான கூட்டணி முறிவு முடிவு குறித்து அறிந்ததும், இதுகுறித்து, மா.செ.,க்களின் எண்ணம் அறியும் முயற்சியில் ஈடுபட்டார்.

நன்மை என்ன?

இதற்காக, ஒவ்வொரு மா.செ.,விடமும் பேசிய இளங்கோவன், 'பா.ஜ.,வோடு கூட்டணி இருந்தால் நன்மை என்ன; தீமை என்ன' என்று கேட்டிருக்கிறார். அப் போது, பெரும்பாலான மா.செ.,க்கள் கூறியுள்ளதாவது:

தமிழக பா.ஜ., தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்ற பின், அக்கட்சியை அதிரடியாக வளர்க்க விரும்பும் அவர், அ.தி.மு.க., ஊழல்களும் வெளியிடப்படும் என்று சொன்னதும், கட்சித் தொண்டர்கள் தரப்பில், இதற்கு கொந்தளிப்பு ஏற்பட்டது. அண்ணாமலையை அப்போதே கண்டித்திருக்க வேண்டும்.

அடுத்த கட்டமாக, கட்சிக்கு ஆதாரமாக விளங்கும் ஜெயலலிதாவை, ஊழல் செய்தவர் என, அண்ணாமலை விமர்சித்தார். அப்போதும், அ.தி.மு.க., தரப்பு கொதித்து எழவில்லை.

கட்சியின் பெயரிலேயே இருக்கும் அண்ணாதுரை குறித்து, அண்ணாமலை விமர்சித்தார். அதற்கும் தி.மு.க., தரப்பில் ஆர்.எஸ்.பாரதி பதிலடி தந்த பின் தான், அ.தி.மு.க., தாமதமாக கொந்தளித்தது.

இதுவும் விமர்சனத்துக்கு உள்ளானது. உச்சபட்சமாக, மதுரையில் நடந்த அ.தி.மு.க., மாநாட்டுக்கு, ஆட்கள் பணம் கொடுத்து கூட்டி வரப்பட்டதாக, எழுச்சி மாநாட்டை கொச்சைப்படுத்தி பேசினார் அண்ணாமலை; அதையும் கண்டிக்கவில்லை.

விலக முடிவு

இந்தியாவுக்கு பிரதமர் மோடி; தமிழகத்துக்கு முதல்வர் பழனிசாமி என, அ.தி.மு.க.,வினர் சொன்ன விருப்பத்தை அப்படியே விட்டிருக்கலாம். 'மோடி பிரதமர் என்பதை ஏற்றுக் கொள்கிறேன்.

பழனிசாமி முதல்வர் என்பதை எல்லாம், கட்சி மேலிடம் தான் முடிவெடுக்கும்' என அண்ணாமலை, அக்கருத்தை ஏற்க முடியாது என்பது போல சொல்கிறார்.

இத்தனைக்கும் பின், பா.ஜ.,வோடு கூட்டணி என்றால், கட்சியினர் ஒருவர் கூட, தேர்தல் வேலை பார்க்க வரமாட்டார்கள்.

இவ்வாறு, மா.செ.,க்கள் கூறியுள்ளனர்.

இந்த விஷயங்கள் அனைத்தையும், பழனிசாமியிடம் ஒப்பித்தார் இளங்கோவன். அதையடுத்தே, கட்சியின் மூத்த நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள் ஒவ்வொருவரிடமும், பழனிசாமி பேசியுள்ளார்.

எல்லாருடைய கருத்துக்களும் ஒன்று போல இருக்கவே, தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவது என, முடிவெடுத்தார் பழனிசாமி என்கிறது, அ.தி.மு.க., வட்டாரம்.

'அரசியலே தெரியலை'

கடந்த 25ல் நடந்த அ.தி.மு.க., -- மா.செ.,க்கள் கூட்டத்தில் பழனிசாமி, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து அ.தி.மு.க., விலகும் முடிவை அறிவிக்கும் முன், கட்சியின் அவைத் தலைவர் தமிழ் மகன் உசேனை பேசும்படி சொல்லி இருக்கிறார். அவர் பேசியதாவது:கூட்டணிக் கட்சி என்றும் பாராமல், அ.தி.மு.க.,வை இன்னது தான் என்றில்லாமல், அண்ணாமலை விமர்சித்துள்ளார். அவரை தலைவர் பொறுப்பில் இருந்து மாற்றுங்கள் என, பா.ஜ.,வுக்கு பலமுறை கோரிக்கையும், கெடுவும் வைத்தாகி விட்டது. அவர்களுக்கு கட்சி நடத்த வேறு ஆள் கிடைக்கவில்லையோ என்னவோ, அண்ணாமலையை போட்டு கட்சி நடத்துகின்றனர். அவருக்கு அரசியலே தெரியவில்லை. ஏதோ தத்து பித்தென்று உளறுகிறார், இந்த சூழ்நிலையில், ஜெயலலிதா, அண்ணா துரை என எல்லாரையும் மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார். பழனிசாமியையும் விட்டு வைக்கவில்லை. இனி, பா.ஜ.,வுடன் கூட்டணி தேவையில்லை; எப்போதும் வேண்டாம். அனைவருடைய கருத்துக்களும் அப்படியே உள்ளதால், அதையே பொதுச்செயலரும் ஏற்று அறிவிப்பார். இவ்வாறு அவர் பேசியுள்ளார்.

'ரியாக்ஷன்' என்ன?

மா.செ.,க்கள் கூட்டத்தில் தமிழ் மகன் உசேன் பேசியதும், கையில் தீர்மான நகலுடன் வந்த பழனிசாமி, கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும், 'மைக்' கொடுக்கச் சொல்லி, 'ஒரே வரியில் கூட்டணி வேண்டுமா, வேண்டாமா என கருத்து சொல்லுங்கள்' என்று கேட்டுள்ளார். செங்கோட்டையன், காமராஜ், விஜயபாஸ்கர், தங்கமணி, கே.சி.வீரமணி என முன்னாள் அமைச்சர்கள் துவங்கி, கடைசி வரிசையில் இருந்த மா.செ.,க்கள் வரை அனைவரும், 'பா.ஜ.,வுடன் கூட்டணி வேண்டாம்' என, ஒருமித்த கருத்தாக கூறியுள்ளனர்.மா.செ.,க்கள் கூட்டம் முடிந்து, இரண்டு மணி நேரம் வரை, கட்சி தலைமை அலுவலகத்தில் அமர்ந்திருந்த பழனிசாமி, தமிழகத்தின் அனைத்துப் பகுதியிலும், கூட்டணி முறிவு அறிவிப்புக்கு என்ன 'ரியாக்ஷன்' என்றும், கேட்டறிந்துள்ளார்.

டில்லி சென்றது நன்றி சொல்ல!

கூட்டணி முறிவு அறிவிப்பு; ஒரு வாரமாக தயாரான பழனிசாமி

கூட்டணி முறிவு அறிவிப்புக்கு சில நாட்களுக்கு முன், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் குழு புதுடில்லி சென்று, அமைச்சர் பியுஷ் கோயலை சந்தித்துப் பேசினர். அப்போது, அண்ணாமலையை தலைவர் பதவியில் இருந்து விடுவிக்க வேண்டும் என, வலியுறுத்தியதாக தகவல் பரவியது. அது உண்மை அல்ல என்கிறது, அக்கட்சி வட்டாரம். பழனிசாமி ஆட்சி, 4 ஆண்டுகள் நடப்பதற்கு ஒத்துழைத்த பா.ஜ.,வுக்கும், அதன் தலைவர்களுக்கும் நன்றி சொல்லவும், கூட்டணியில் இருந்து கனத்த இதயத்தோடு விலகுவதை சொல்லவும்தான் புதுடில்லி சென்றனராம்.

Tags

Next Story