பஸ் - லாரி மோதல்: ஓட்டுநர்களின் சாதுர்யத்தால் பெரும் விபத்து தவிர்ப்பு
தஞ்சாவூர் அருகே செவ்வாய்க்கிழமை காலை தனியார் பேருந்தை முந்த முயன்ற லாரி, பேருந்து மீது மோதியது. இதில் பேருந்து ஓட்டுநர் மற்றும் லாரி ஓட்டுநர்களின் சாதுர்யத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. பட்டுக்கோட்டையிலிருந்து செவ்வாய்க்கிழமை காலை தஞ்சாவூர் நோக்கி தனியார் பேருந்து வந்து கொண்டிருந்தது. பேருந்தை தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி சாலை மாணிக்கம் நகரைச் சேர்ந்த வினோத்(33) என்பவர் ஓட்டிவந்தார். அதே போல் மன்னார்குடியிலிருந்து தஞ்சாவூரை நோக்கி டாரஸ் லாரி வந்தது. இந்த லாரியை கும்பகோணம் அருகே சீனிவாசநல்லூரைச் சேர்ந்த தங்கதுரை(38) என்பவர் ஓட்டி வந்தார்.
அப்போது தஞ்சாவூர் அருகே மன்னார்குடி பிரிவுசாலை என்ற இடத்தில் வந்தபோது, பட்டுக்கோட்டையிலிருந்து வந்த தனியார் பேருந்தை முந்த முயன்ற லாரி, பேருந்து மீது மோதி, பின்னர் வலது புறமாக சாலையில் உள்ள தடுப்புகளை உடைத்துக் கொண்டு எதிர்திசையில் இருந்த வாய்க்காலுக்குள் கவிழ்ந்தது. அதே போல் தனியார் பேருந்தும் லாரி மோதியதும், சாலையோரத்தில் இருந்த மின் கம்பத்தின் மீது மோதி அவை உடைந்து, விபத்துக்குள்ளானது. இரண்டு வாகனங்களும் மோதியதும் அதன் ஓட்டுநர்கள் சாதுர்யமாக செயல்பட்டுள்ளனர்.
இல்லையென்றால் பேருந்து சாலையோரம் கவிழ்ந்திருந்தால், அங்கிருந்த 10 அடி ஆழமுள்ள நீர் நிரம்பிய குட்டையில் மூழ்கி பெரும் விபத்து ஏற்பட்டிருக்கும். விபத்து ஏற்பட்டதும் மின்கம்பம் உடைந்ததால், உடனடியாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது. பேருந்து விபத்துக்குள்ளான போது அதிலிருந்த 80க்கும் மேற்பட்ட பயணிகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை. தகவலறிந்ததும் தஞ்சாவூர் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் பார்த்திபன், தஞ்சாவூர் வட்டாட்சியர் ப.அருள்ராஜ் ஆகியோர் பார்வையிட்டனர்.
அடிக்கடி விபத்து: தஞ்சாவூர் அருகே பட்டுக்கோட்டை- மன்னார்குடி பிரிவு சாலையில் அடிக்கடி விபத்து ஏற்படும் பகுதியாகும். இந்த இடத்தில் தற்போது சாலைகள் அகலப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் வாகனங்கள் அந்த இடத்தில் அதிவேகமாக வந்து செல்கிறது. இதை தடுக்க வேண்டுமானால், இந்த இடத்தில் உள்ள சாலை தடுப்பை ரவுண்டானாவாக மாற்றி அமைக்க வேண்டும், அதே போல் தற்காலிகமாக அங்கு டிவைடர்களை அமைத்து வாகனங்களின் வேகத்தை குறைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.