ராகுல் காந்திக்கு வேலை இல்லை என்றால் இளைஞர்களுக்கு வேலை இல்லை என அர்த்தம் இல்லை-அண்ணாமலை!
அண்ணாமலை
நாடாளுமன்ற தேர்தல் களம் சூடு பிடித்துள்ள நிலையில் கோவை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காங்கேயம் பாளையம், காடம்பாடி,செங்கத்துறை, சாமளாபுரம்,கருமத்தம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பாஜகவின் மாநிலத் தலைவர் அண்ணாமலை இன்று பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது பாஜக தொண்டர்கள் மற்றும் பொதுமக்களிடையே பேசிய அவர் சூலூர் சுற்றுவட்டார பகுதி விவசாய பெருமக்களும் தொழில் செய்யக்கூடிய மக்களும் அதிகமாக இருக்கக்கூடிய பகுதியாக உள்ளது.பிரதமர் 400 பாராளுமன்ற உறுப்பினர்களுடன் அமரும் பொழுது நாம் அதை எப்படி பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதுதான் நம் முன்னால் உள்ள கேள்வி. தமிழ்நாடு அரசு மின் கட்டணத்தை பன்மடங்கு உயர்த்தி இருக்கின்றனர்.
பீக்ஹவர் கட்டணம்,நிலை கட்டணம் போன்றவை உயர்த்தப்பட்டுள்ளது.15 முதல் 55 சதவீதம் வரை மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு ஒரு தீர்வு சோலார் கொண்டு வருவது மட்டுமே. மத்திய அரசில் மீண்டும் பா.ஜ.க அமர்ந்தவுடன் பவர் டெக்ஸ் திட்டம் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு கொண்டு வரப்படும். அதன் மூலம் விசைத்தறிகளுக்கு அனைத்தும் சோலார் கொண்டு வந்து பயன்படுத்தப்படும்.மத்திய அரசு சோமனூரில் ஜவுளி சந்தை கொண்டு வரும். பவர்லூம் இப்பொழுதே அனைவரும் உடைக்க ஆரம்பித்துவிட்டனர்.
ஜவுளி சந்தையை இங்கே கொண்டு வந்து ஏற்றுமதி வளாகத்தை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஜவுளி பூங்காவை அமைப்பதை மத்திய அரசால் மட்டுமே செய்ய முடியும். நொய்யல் ஆறு பக்கத்திலேயே இருக்கிறது.இதை சீரமைக்க 940 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. பணத்தை சாப்பிடுவதற்காகவே ஒரு கூட்டம் இருக்கிறது.இந்த ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் பணத்தை பார்த்துக் கொள்வதற்காகவே ஒரு நபர் தேவைப்படுகிறார். ஆனைமலை நல்லாறு திட்டத்தை கண்டிப்பாக செயல்படுத்துவோம்.நீர் மேலாண்மைக்கு உறுதுணையாக இருப்போம் என தெரிவித்தார்.
கருமத்தம்பட்டி பகுதியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அண்ணாமலை பாஜக ஆட்சியில் இளைஞர்கள் வேலை இல்லாமல் இருப்பதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்த கருத்துக்கு ப.சிதம்பரமும் அவரது குடும்பத்தினரும் தான் வேலை இல்லாமல் இருக்கிறார்கள். இளைஞர்களுக்கு வேலை இருக்கிறது என பதிலளித்தார். ப.சிதம்பரத்தின் தலைவராக உள்ள ராகுல் காந்தியும் வேலையில்லாமல் இருப்பதாக விமர்சித்த அண்ணாமலை ராகுல் காந்திக்கு வேலை இல்லை என்றால் இந்தியாவில் இருக்கக்கூடிய இளைஞர்களுக்கு வேலை இல்லை என அர்த்தம் இல்லை என காட்டமாக தெரிவித்தார்.பிரதமர் தமிழகம் வருகை குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பிரதமர் வருகை இன்னும் உறுதி செய்யப்படவில்லை. இன்று மாலைக்குள் அது குறித்த விவரங்கள் தெரியவரும் என தெரிவித்தார்.