ரிதன்யா வழக்கை சிபிஐக்கு மாற்றுவதில் எந்த பலனும் இல்லை: ஐகோர்ட்

திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் திருமணமான இரண்டரை மாதங்களில் புதுமணப் பெண் ரிதன்யா விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வர மூர்த்தி, மாமியார் சித்ரா தேவி ஆகியோர் வரதட்சணை கேட்டு, உடல் மற்றும் மனரீதியாக கொடுமைப்படுத்தியதாக இறப்பதற்கு முன்பு தனது தந்தைக்கு ரிதன்யா ஆடியோ அனுப்பியிருந்தார். இந்த வழக்கில் கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வர மூர்த்தி, மாமியார் சித்ரா தேவி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதனிடையே வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றக்கோரி ரிதன்யா தந்தை அண்ணாதுரை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், ரிதன்யா தற்கொலை வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டதும் உரிய பிரிவுகளில் குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய விசாரணை நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டது. மேலும் வழக்கின் விசாரணையை திருப்பூர் மாவட்ட எஸ்பி மேற்பார்வையிட வேண்டுமெனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் ரிதன்யா வழக்கை சிபிஐ அல்லது வேறு அமைப்புக்கு விசாரணைக்கு மாற்றுவதில் எந்த பலனும் இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் கருத்து கூறியுள்ளது.
