யாரும் பயப்பட வேண்டாம்..! எவ்வளவு மழை வந்தாலும் எதிர்கொள்ள தயார்: மேயர் பிரியா

mayor priya
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதனால் சென்னை உட்பட வட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது. மேலும், தமிழ்நாட்டில் 27 ஆம் தேதி வரை கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நிலையில், பருவ கால மழை முன்னெச்சரிக்கை குறித்த ஆலோசனை கூட்டம் சென்னை ராயபுரம் மண்டல அலுவலகத்தில், இந்து சமய அறநிலை துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு தலைமையில் நடைபெற்றது. இதில், வட்டார துணை கண்காணிப்பாளர் கட்டா தேஜா ரவி, மாநகராட்சி மேயர் பிரியா ராஜன், ராயபுரம் மண்டல குழு தலைவர் ஸ்ரீராமுலு என மாநகராட்சியின் அனைத்து துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த மேயர் பிரியா, “ராயபுரம் மண்டலத்தில் மழை முன்னெச்சரிக்கையாக 9 மீட்பு முகாம்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இங்குள்ள 5 சுரங்க பாதைகளும் மொத்தமாக சீரமைக்கப்பட்டு, சென்சார் மற்றும் கேமரா மூலமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. தேவையான இடங்களில் மருத்துவ முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இப்பகுதியில், தற்போது 3 சமையல் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், தேவைப்பட்டால் போர்க்கால அடிப்படையில் மேலும் சமையல் கூடங்கள் உருவாக்கப்படும். சென்னையில் கடந்த 2 நாட்களில் 6 செ.மீ மழை பதிவாகியுள்ளது. இதைவிட அதிக மழை பெய்தாலும் அதனை சமாளிக்க சென்னை மாநகராட்சி தயார் நிலையில் உள்ளது. இதுவரை பெய்த மழையால் பெரிய அளவில் பாதிப்பு இல்லாததால், மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்படவில்லை. துணை முதலமைச்சர் உத்தரவுப்படி, சென்னை மாநகராட்சி சார்பில் 1.50 லட்சம் பேருக்கு காலை உணவும், 2.30 லட்சம் பேருக்கு மதிய உணவும் வழங்கப்பட்டுள்ளது. வருகிற 25 ஆம் தேதி கனமழை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மழையை பொறுத்து தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். ராயபுரம் மண்டலத்தில் மார்க்கெட் பகுதிகளில் சேரும் குப்பைகளை அகற்றுவதற்காக 10 பேர் கொண்ட சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. கொசஸ்தலை ஆறு மற்றும் புழல் ஏரியிலிருந்து வரும் உபரி நீர் கால்வாய்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன. இதுவரை மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. பாதிப்பு இருந்தால் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்படுவார்கள்” என அவர் தெரிவித்தார்.
