அடுத்த மாதம் முதல் பூந்தமல்லி - வடபழனி இடைய மெட்ரோ ரயில்!!

சென்னையில் 2-ஆம் கட்ட மெட்ரோ திட்டத்தில் கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி புறவழிச் சாலை வரையிலான வழித்தடம் 26.1 கி.மீ. தொலைவுக்கு அமையவுள்ளது. ஏற்கெனவே முதல்கட்ட மெட்ரோ திட்டத்தில் வடபழனி இணைக்கப்பட்ட நிலையில், 2-ஆம் கட்டத்தில் கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரையிலான வழித்தடமானது வடபழனி மெட்ரோவைக் கடந்து பூந்தமல்லி செல்லும் வகையில் ரயில் பாதை அமைக்கப்பட்டுவருகிறது. அதில், வடபழனி முதல் பூந்தமல்லி வரையிலான 16 கி.மீ. தொலைவுக்கான மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்பட்டுவிட்டது. இதர பணிகளுக்காக 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இரவு பகலாக போரூர் முதல் வடபழனி வரையிலான பாதையில் பணியாற்றி வருகின்றன. மேலும் ஏற்கனவே ரயில் என்ஜின் சோதனையும் நடத்தப்பட்டு ரயில் பாதை வடிவமைப்புக்கான உறுதிச் சான்றும் பெறப்பட்டுவிட்டது. ரயில் தண்டவாளப் பாதை சரியாக அமைக்கப்பட்டதாக சான்று பெற்றால், அதில் ரயிலை இயக்கும் வகையில் பெங்களூரில் உள்ள ரயில்வே தண்டவாள உறுதிப் பாதுகாப்பு ஆணையகத்தில் சான்று பெறுவது அவசியம். அதற்காக சென்னை மெட்ரோ ரயில் நிா்வாகம் சாா்பில் தண்டவாள உறுதி பாதுகாப்பு சோதனை நிகழ்த்துவதற்கான மனு அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இம்மாத இறுதியில் வாரத்தில் வடபழனி-பூந்தமல்லி இடையேயான மெட்ரோ ரயில் தண்டவாளத்தின் பாதுகாப்பு உறுதித்தன்மை சோதனை நடத்தப்படும் என்றும், பிப்ரவரிக்குள் அந்த வழித்தடத்தில் ரயில் இயக்கப்படவுள்ளதாகவும் மெட்ரோ ரயில் நிறுவனம் தரப்பில் கூறப்பட்டுள்ளது. பூந்தமல்லி முதல் போரூர் வரை இடையில் உள்ள 10 மெட்ரோ ரயில் நிலையங்களிலும் ரயில் நின்று செல்லும் அதனைத் தொடர்ந்து போரூரில் இருந்து நேரடியாக வடபழனியில் மட்டுமே மக்கள் சென்றும் வரும் வகையில் முதற்கட்டமாக திட்டமிடப்பட்டுள்ளது. போரூர் வடபழனி இடையே மெட்ரோ ரயில் நிலையங்கள் முழுவதும் கட்டி முடிக்கப்பட்ட பிறகு அனைத்து ரயில் நிலையங்களிலும் நின்று வரும்படி திட்டமிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பூந்தமல்லியில் இருந்து தொலைதூர பயணத்திற்காக கிளாம்பாக்கம், விமான நிலையம், மற்றும் சென்ட்ரல் செல்வோருக்கு பயனுள்ளதாக இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
