தவெக மாநாட்டு திடலில் சரிந்து விழுந்த 100 அடி கொடிக்கம்பம் : அப்பளம் போல் நொறுங்கிய கார்!!

tvk kodi
தமிழக வெற்றிக் கழகத்தின் 2வது மாநில மாநாடு மதுரை அருகே உள்ள பாரபத்தி பகுதியில் நாளை (ஆக. 21ம் தேதி) நடைபெற இருக்கிறது. மாநாட்டிற்காக அங்கு 500 ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டு மாநாட்டுக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. 5 ஒருங்கிணைப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு மாநாட்டு மேடை மற்றும் ஒன்றரை லட்சம் பேர் அமரும் வகையில் இருக்கைகள், மின் விளக்குகள், பந்தல் அமைப்பது, அலங்கார வளைவுகள் அமைப்பது உள்ளிட்ட பணிகள் முழு வீச்சிலல் நடந்து வருகின்றன. அந்தவகையில் மாநாட்டுத் திடலில் 100 அடி உயர கொடிக்கம்பம் நிறுவும் பணியை தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் தொடங்கி வைத்தார். 100 அடி உயர இரும்பினால் ஆன அந்த கொடிக்கம்பம் நிறுவனம் பணி தொடங்கி நடைபெற்று வந்தது. இந்த கொடி கம்பத்தில் நாளை விஜய், தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை ஏற்ற இருந்தார். அதனை நிறுவும் பணி நடைபெற்று வந்த நிலையில், கம்பத்தை தூக்கி நிறுத்தி பொறுத்துக் கொண்டிருந்தபோது , அதனை இருக்கி கட்டப்பட்டிருந்த கயிறு அறுந்ததில், கண்ணிமைக்கும் நேரத்தில் இரும்பினால் ஆன 100 அடி கொடி கம்பம் சாய்ந்து விழுந்தது. அந்தக் கம்பமானது அதற்கு நேராக நிறுத்தப்பட்டிருந்த காரின் மீது விழுந்ததில், அந்தக் கார் அப்பளம் போல் நொறுங்கியது. நல்வாய்ப்பாக காரில் யாரும் இல்லாததால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. தவெக கொடிக்கம்பம் கயிறு அறுந்து காரின் மீது விழும்போது அங்கிருந்தவர்கள் பயத்தில் அலறி ஓடும் காட்சிகளும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
